இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம்!

இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம்!

மத்திய அரசைக் கண்டித்து 10 தொழிற்சங்கங்கள், பொதுத்துறை வங்கிகள் சார்பில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (செப்.2) நடைபெறவுள்ளது.

இந்தப் போராட்டத்தில் மத்திய தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சுமார் 18 கோடி ஊழியர்களும், 6 லட்சம் வங்கி ஊழியர்களும் பங்கேற்கின்றனர். இதுதவிர, பிஎஸ்என்எல் உள்ளிட்ட நிறுவனங்களும் இப்போராட்டத்தில் பங்கேற்கவிருப்பதால் தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்க வாய்ப்புள்ளது.

பொது விநியோக முறையை வலுப்படுத்தி அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும்; வேலைவாய்ப்பை அதிகரிக்க உறுதியான நடவடிக்கை வேண்டும்; தொழிலாளர்களுக்கு அடிப்படை மாத ஊதியத்தை ரூ.18 ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும், குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மத்திய அரசிடம் ஏ.ஐ.டியு.சி., சி.ஐ.டி.யு, பாஜக சார்பு தொழிற்சங்கமான பாரதிய மஸ்தூர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் எனவும் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்திருந்தன.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தவிர்க்கும் வகையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் 5 நபர் குழுவை அரசு அமைத்தது. இந்தக் குழுவில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, கனிம வளங்கள் துறை அமைச்சர் வீரேந்தர் சிங் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து தொழிற்சங்கங்களிடமும் பேச்சுவார்த்தை நடத்துவதற்குப் பதிலாக, பாரதிய மஸ்தூர் சங்கத்திடம் (பி.எம்.எஸ்.) மட்டும் இந்தக் குழு கடந்த மாதம் 16-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தியது. இதனைத் தொடர்ந்து, இந்தப் போராட்ட முடிவைக் கைவிடுவதாக பி.எம்.எஸ். தன்னிச்சையாக அறிவித்தது.

இந்நிலையில், வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிடுமாறு மற்ற தொழிற்சங்கங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டது. ஆனால், இந்த வேண்டுகோளை ஏற்க இதர தொழிற்சங்கங்கள் மறுத்துவிட்டன. எனவே அறிவித்தபடி, நாடு முழுவதும் இன்றுயன்று வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் ரயில்கள்,பேருந்துகள் இயங்கும்

மத்திய தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, தமிழகத்தில் பேருந்துகள், ரயில்கள் இயக்கத்தில் பாதிப்பு இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்றும், ஆர்ப்பாட்டம் செய்து எதிர்ப்பைப் பதிவு செய்யப் போவதாகவும் ரயில்வே ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

சென்னை மன்றோ சிலை அருகே இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட ரயில்வே ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.

வங்கி ஊழியர்கள், அதிகாரிகளைக் கொண்ட 11 சங்கங்களில் 8 சங்கங்களைச் சேர்ந்த 6 லட்சம் பேர் நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தில் இன்று ஈடுபடுவதால் வங்கிப் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top