திருவிழாவை கலக்கும் விசிறி தாத்தா!

திருவிழாவை கலக்கும் விசிறி தாத்தா!

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோடை காலத்தில் வெப்ப சலனத்தின் மத்தியில்  சித்திரைத் திருவிழாவினை கொண்டாடவரும் நேரத்தில், மக்களின் சேவையே மகேசன் சேவை என தன்னுடைய தள்ளாத வயதிலும் சாமரம் வீசி மக்களை குளிர்விக்கிறார் விசிறி தாத்தா நடராஜன். இவரைப் பார்க்கவே ஒரு கூட்டம் திருவிழாவிற்கு வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் திருவிழாவிற்கு செல்வோர் நிச்சயம் இவரை காணாமல் சென்றிருக்க மாட்டார்கள். யார் இவர்? எதற்காக இந்த சேவை? என்கிற கேள்வியோடு தாத்தாவை வடக்கு வெளிவீதியில் சந்தித்தோம். குறுகிய பாதையின் உள்ளே சென்றால், அதிகமான உத்வேகத்துடன் புன்சிரிப்புடன் வரவேற்றார் திரு. நடராஜன் அவர்கள்.

‘மக்களுக்கு சேவை செய்வது அந்த மகேசனுக்கே சேவை செய்வதற்கு சமம். அதனால் என்னால் இயன்ற இந்த தொண்டை சுமார் 63 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் செய்து வருகிறேன். சிறுவயதிலிருந்தே என்னால் ஒரு இடத்தில் அமர்ந்திருக்க முடியாது. அன்று முதல் இன்று என்னுடைய 91-வது வயதிலும் ஆர்வத்துடனும் உத்வேகத்துடனும் கடவுளின் சேவையைச் செய்ய ஓட வேண்டுமென்பதே ஆசையாக உள்ளது. எனினும் வயதான போதிலும் ஒரு சில நேரங்களில் சோர்வு ஏற்பட்டாலும் என்னுடைய சாமரத்தை கையில் எடுத்து வீசத்தொடங்கினால் எனக்குள் ஒரு புத்துணர்வு வந்துவிடும்.

மதுரை மீனாட்சியம்மன் கோவில் மட்டுமல்ல, தமிழ கத்தில் உள்ள எல்லா முக்கியமாக கோவில்களின் நிகழ்வுகளிலும் நான் சேவை செய்ய சென்றுவிடுவேன்.  இதனால் என்றும் நான் வீட்டில் அதிகம் இருப்பதில்லை. தினம் தினம் ஏதாவது ஒரு விஷேசம் ஏதாவது ஒரு கோவிலில் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கும். என்னுடைய எண்ணம் அனைத்தும் அதிலேயே இருக்கும். திங்கள் மற்றும்  செவ்வாய்கிழமைகளில் திருப்பரங்குன்றம், புதன்கிழமை பழனி, வியாழக்கிழமை திருச்செந்தூர், வெள்ளிக்கிழமை மீனாட்சியம்மன் கோவில், சனிக்கிழமை அழகர்கோவில், ஞாயிறுக்கிழமை திருவேற்காடு, மாங்காடு, சமயபுரம் என தினம்தினம் ஏதாவது ஒரு கோவிலில் சேவகம் செய்துகொண்டுதான் இருப்பேன். இதனாலே இரவுகளில் எனக்கு பெரும்பாலும் தூக்கம் வராது. 

கடவுளின் இச்சேவையை செய்வதில் கிடைக்கும் மகிழ்ச்சி வேறு எதிலும் கிடைத்ததில்லை. இப்படி கடவுளின் ஆலயத்தில் சேவை செய்துகொண்டே இருக்கும்போது என்னுடைய உயிர் என் உடல் விட்டு பிரியவேண்டுமென்பதே என்னுடைய ஆசை.’ என கூறினார்.

Tags: News, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top