இருவேறு சிறப்பு அடையாளங்களைக் கொண்ட இடைக்காட்டூர்!

இருவேறு சிறப்பு அடையாளங்களைக் கொண்ட இடைக்காட்டூர்!

பொதுவாகச் சில சிறிய ஊர்களில், சிறப்போ, பெருமையோ ஏதோ ஒன்றுதான் குறிப்பிடப்படும் வகையில் இருக்கும். ஆனால் இருவேறு சிறப்பு அடையாளங்களைக் கொண்டது இடைக்காட்டூர். மதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் உள்ளது இந்த ஊர்.

புகழ்பெற்ற பதினெட்டு சித்தர்களில் ஒருவர் இடைக்காடர். தனது தவ வலிமையினால் நவகிரகங்களையும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் இடம் மாற்றியவர் இவர்தான். இவர் பிறந்து வளர்ந்த இந்த ஊர்தான் இவர் பெயரால் இடைக்காட்டூர் என்று அழைக்கப்படுகிறது. இவருக்கென்று இந்த ஊரில் தனிக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு எதிரே உள்ள பிரம்மாண்டமான தூய இருதயர் தேவாலயத்திற்குப் பின்னனியிலும் ஒரு உருக்கமான உண்மை வரலாறு உள்ளது.

1894-ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் மேரி ஆன் என்ற கோடீஸ்வரப்பெண் இதய நோயால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் அவரது நோய் குணமாகவில்லை. தூய இருதயரைத் தொடர்ந்து மனமுருக வேண்டினால், நிச்சயம் குணமடைய வாய்ப்பு உண்டு என்று அவரது சுற்றத்தார் கூறியதைப் பின்பற்றித் தொடர்ந்து ஜெபம் செய்து வந்தார். அவரது இதய நோய் மெல்ல மெல்லக் குணமடைந்தது.

முற்றிலும் நோய் குணமடைந்த மேரி ஆன், ஆண்டவருக்காக ஒரு தேவாலயம் கட்ட எண்ணினார். அதே சமயம் இடைக்காட்டூரில் ஒரு சிறிய தேவாலயம் இருந்தது. இதனை விரிவுபடுத்திப் பெரியதாக்கட்ட எண்ணிய ஆலயத்தின் பாதிரியார், ’பொடினான்ட் சென்ஸ்’ அதற்கான நிதியைத் திரட்டுவதற்காகத் தனது நாடான பிரான்சுக்கு வந்தார்.

இதனை அறிந்த மேரி ஆன், இடைக்காட்டூரில் பிரம்மாண்டமாகத் தேவாலயம் கட்ட முழுஉதவியும் செய்தார். பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரபலமான ரீம்ஸ் கதீட்ரல் தேவாலயம் போன்று கட்ட முடிவு செய்யப்பட்டது. அதனைப் போலவே கோதிக்கட்டிடக் கலையில் இடைக்காட்டூரில் பிரம்மாண்ட தேவாலயம் உருவானது. 122 ஆண்டுகளுக்கு முன்பே பிரான்ஸ் நாட்டில் கண்ணாடியில் செய்யப்பட்ட உருவங்களும், சிலைகளும் அங்கிருந்து கப்பல் மூலமாகக் கொண்டு வரப்பட்டன. இங்குள்ள கட்டிடம் மற்றும் சிற்பங்களின் கலை அம்சங்கள் மிகவும் நுட்பமானவை. தூய இருதயர் என்பதை அடையாளப்படுத்தும் வகையில், இங்குள்ள இயேசுநாதர் தனது இருதயத்தைத் திறந்து காட்டுவது போல சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. இது வேறெங்கும் காண இயலாத ஒரு அற்புதம்.

முன்னொரு காலத்தில் இடைக்காட்டூரில் பஞ்சம் வந்து எல்லோரும் ஊரை விட்டு போய்விட்டனர். ஆனால் இடைக்காடர் மட்டும் தானியங்களை, தனது வீட்டின் முன் இருந்த சுவரில் சேர்த்து வைத்துப் பூசியிருந்தார். தேவைப்படும்போது சுவரைச் சுரண்டி தானியத்தை எடுத்து சுத்தம் செய்து தனது பசியைப் போக்கிக்கொண்டார். இந்த சூட்சுமத்தை அறிய வந்த நவகிரகர்களுக்கும், இந்த தானியத்தில் உணவு தயாரித்துக் கொடுத்தார். உண்ட மயக்கத்தில் அனைவரும் உறங்கிவிட்டனர். இவர்கள் எப்போதும் ஒருவரை ஒருவர் பார்க்க கூடாது என்றெண்ணிய இடைக்காடர் அவர்களை இடம் மாற்றி வைத்து உலகிற்கு நன்மை பயக்க வைத்தார்.

உலக நன்மைக்காக நவகிரகங்களை மாற்றி அமைத்த இடைக்காடர் ஆலயத்தையும், இதய நோயைக் குணப்படுத்தி, இதயத்தைத் திறந்து காட்டும் இயேசுநாதரையும் ஒரே நேரத்தில் இடைக்காட்டூரில் தரிசிக்கலாம். இது இந்த சித்தர் பூமியின் மகிமை!

உலக மக்களைக் காப்பாற்ற ஆன்மீகத்தின் அடையாளங்கள் திசை மாறினாலும், அதனால் ஏற்படும் நன்மைகள் பயன்தரும் போது, எல்லாக் கடவுள்களும் வணங்குவதற்குரியவர்கள் தான்.

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top