ஆதி கொடைக்கானல்

ஆதி கொடைக்கானல்

கோடை காலம் துவங்கி வெயில் வாட்டிவதைத்து, காலம் தனது பருவநிலையின் பரிமாண வேலையை செவ்வனே செய்துகொண்டு இருக்கிறது. ஆனால் நமக்குத்தான் இந்த வெப்பத்தின் கொடுமையைத் தாங்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறோம்.

வீட்டில் உள்ளவர்களும், ’பேசாமல் ரெண்டு நாளைக்கு கொடைக்கானலுக்கு போயி நிம்மதியா இருந்திட்டு வரலாம்’ என ஆங்காங்கே அங்கலாய்ப்புகள் தொடர்ந்த வண்ணம்தான் இருக்கின்றன. இப்படிப்பட்ட அற்புதமான கோடை மலை வாசஸ்தலமான தற்போதைய  கொடைக்கானல் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. ஆனால் சங்க காலம் முதலே இந்த கொடைக்கானல் சிறப்புறத் திகழ்ந்திருக்கிறது. அப்போதைய கொடைக்கானல் இங்கிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள வில்பட்டியில் வியாபித்திருந்திருக்கிறது என்பதை, பல இலக்கியங்கள் மூலமாகத் தெரிந்துகொள்ள முடிகிறது.

ஆதி கொடைக்கானல் என்றழைக்கப்படும் இந்த வில்பட்டியைத் தலைநகராகக் கொண்டு, ‘கோடைப் பெருநன்பண்ணி’ என்ற சிற்றரசன் ஆட்சி செய்து வந்துள்ளான். அப்போது, இந்தப் பகுதி எல்லாம் ‘வேடப்பட்டி’ என்ற பெயரில்தான் அழைக்கப்பட்டிருக்கிறது. இவன் இந்தப்பகுதியில் ஆட்சி செய்து கோலோச்சியதை, அகநானூறு செய்தியாகத் தெரிவிக்கிறது. மேலும், பெருந்தலைச்சாத்தனார், ‘நோன்சிலை வேட்டுவன்’ என்று, இந்த மன்னனைப் பற்றிய சிறப்புகளைப் பாடியுள்ளார். இம்மன்னன் சங்க காலத்தில் முற்காலப் பாண்டியர்களுக்கு கட்டுப்பட்டு ஆட்சி செய்துள்ளான்.

போர்க்காலங்களில் அவர்களுடன் தன் பரிவாரங்களை அழைத்துச்சென்று, பாண்டிய நாட்டுப் படையையும் வழி நடத்திச்செல்லும் சிறந்த போர்ப்படைத் தளபதியாகவும் இருந்துள்ளான். பாண்டிய மன்னர்களுக்குப் போரில் பல வெற்றிகளையும் ஈட்டித்தந்துள்ளான். இதனால் முற்காலப் பாண்டிய மன்னர்கள் இவனுக்கு, ‘தென்னவன் மறவன்’ என்ற சிறப்பு பட்டத்தையும் அளித்துள்ளனர்.

வீரம், கொடை, பண்பில் சிறந்து விளங்கிய இம்மன்னன் மலையில் பெரிய குழிகளை வெட்டி அதில் விழும் யானைகளைத் தன்னைத்தேடி வரும் இரவலர்களுக்குப் பரிசாகத்தந்துள்ளான். இந்த செய்தியைப் பெருந்தலைச் சாத்தனார், அகநானூற்றில் வரும் 13-ஆம் பாடலில் தெரிவித்துள்ளார்.

தற்போது, இந்த ஆதி கொடைக்கானலின் பெருமைக்குச் சான்றாக, வேடியப்பன்கோயில் என்ற பழமையான சுப்பிரமணியருக்கான கோயில் ஒன்று உள்ளது. மலைகளின் நிலமான இந்தக் குறிஞ்சியில் முருகன் அச்சார தெய்வமாக வீற்றிருக்கிறார். கோயிலின் விதானத்தில் இன்னும் பழமைக்குச் சான்றாக, பிற்காலப் பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட பல விதமான புடைப்புச் சிற்பங்கள் காணக் கிடைக்கின்றன.

கருவரையில் முருகன் மூலவராகக் காட்சி அளிக்கிறார். வெளிப்பிரகாரத்தில் கடம்பன், இடும்பன் ஆகிய இருவரும் தெய்வங்களாக இருக்கின்றனர். கோயிலின் முன்பாக உள்ள மண்டபத்தில் கி.பி. 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று தனியாக வைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்குத் திருப்பணிகளை கங்கப்பனின் மகன் ‘செம்மண் கும்பமண்’ செய்திருக்கிறார் என்ற செய்தியையும் அறியமுடிகிறது. கோயிலைச் சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள அடுக் கடுக்கான நிலப் பகுதிகளில் விளையும் சிகப்பு நிற காரட், நமது தேசியச்சின்னமாக பச்சையுடன் இணைந்து, பார்ப்பதற்கு, கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது, நடுவில் உள்ள வெள்ளை நிறத்தைப் போலவே, இந்த கிராமத்தில் விவசாயம் செய்யும் ஏழை விவசாயிகளின் வெள்ளை மனசும் வெள்ளந்தியாகச் சிரிக்கிறது.

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top