ஓபிஎஸ் மகனை மட்டும் நீக்காததற்கு 5 காரணம் இது தானா?

ஓபிஎஸ் மகனை மட்டும் நீக்காததற்கு 5 காரணம் இது தானா?

அதிமுக பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் மூலம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் நீக்கப்பட்டனர். ஆனால் ஓபிஎஸ்ஸின் மகனும், தேனி மக்களவை உறுப்பினருமான ரவீந்திரநாத் நீக்கப்படவில்லை. இதனால் ஆடு பகை, குட்டி உறவா என்ற கேள்வி எழுவது இயல்பே. அந்த வகையில் அதிமுகவில் என்ன நடக்கிறது என நாம் விசாரித்தபோது கிடைத்த தகவல்களை தற்போது பார்க்கலாம்.

அதிமுக பொதுக்குழு கடந்த 11ஆம் தேதி காலை 9.15 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அன்றைய தினம் காலை 9 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனையடுத்து வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்களை நிறைவேற்ற ஒப்புதல் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அதிமுக பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகரன் உள்ளிட்டோரை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
பொதுக்குழு கூட்டத்தில் பேசிய நத்தம் விஸ்வநாதன், அதிமுகவை பலவீனப்படுத்தும் விதமாக ஓ.பன்னீர்செல்வம் திமுகவுடன் நட்பு பாராட்டினார்.  எனவே அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கு தாம் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்திருப்பதாக தெரிவித்தார். அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்தை பொருளாளர் பொறுப்பு, கழக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கும் சிறப்பு தீர்மானம் ஓர் மனதாக நிறைவேற்றப்பட்டது.
 
அவரோடு அவரது ஆதரவாளர்களான வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகியோருடன் அதிமுகவினர் யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இவ்வளவு பெரிய முடிவை எடுத்த எடப்பாடி பழனிசாமி அணியினர், ஓபிஎஸின் மகனும் அதிமுகவின் ஒரே ஒரு மக்களவை உறுப்பினருமான ரவீந்திரநாத்தை மட்டும் கட்சியில் இருந்து நீக்கவில்லை.இதற்கு என்ன காரணமாக இருக்கும் என நாம் விசாரித்தபோது ஐந்து விதமான காரணங்கள் கிடைத்தன, அவை
 
மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் அதிமுகவுக்கு எதிராக எந்த இடத்திலும் பேசவில்லை, பேட்டியளிக்கவில்லை. ஒருவேளை பேசியிருந்தால் அதற்கான வீடியோ பதிவுகளோ, ஆதாரங்களோ இல்லை.
 
கட்சி சட்டவிதிகளை மீறி அதிமுகவுக்கு எதிராக எந்த நீதிமன்றத்தையும் ரவீந்திரநாத் நாடவில்லை.
 
ரவீந்திரநாத்தை கட்சியில் இருந்து நீக்கினால் மக்களவையில் அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும்.
 
அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் பட்டியலிலும் ரவீந்திரநாத் இடம்பெறாததால் அவரை கட்சியிலிருந்து நீக்கவில்லை.
 
ஓ.பி.எஸ் உட்பட அவரது ஆதரவாளர்கள் 4 பேர் நீக்கப்பட்டாலும் ரவீந்திரநாத் எம்.பி. என்பதால் அவரை நீக்குவதில் சிக்கல் என கூறப்படுகிறது.
 
மேற்கண்ட காரணங்களுக்காக அவரை கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை எனக் கூறினாலும், எல்லா இடங்களிலும் தம்மை பலம் பொருந்திய தலைவராக காட்ட முயலும் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த விவகாரம் சற்று சறுக்கலாகவே பார்க்கப்படுகிறது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top