மதுரை மருதநாயகம் தர்ஹா!

மதுரை மருதநாயகம் தர்ஹா!

சரித்திர நாயகர்களும்,  திரைப்படம் போன்ற ஊடகம் வழியாகத்தான் பிரபலமடைந்து வருகின்றனர். வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு அடுத்து. இந்த தலைமுறையினருக்கு தெரிந்த மற்றொரு சரித்திர நாயகன்தான் மருதநாயகம். திரைப்படத்தின் படப்பிடிப்பு இடையே நின்றுவிட்டாலும், மருதநாயகத்தினைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வம் மட்டும் இன்றுவரை அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது.

இதோ, உங்களுக்காக மருதநாயகத்தின் வரலாற்றுச்சுருக்கம்:

ராமநாதபுரம் மாவட்டம் பனையூரில் பிறந்தவர். பெற்றோர் வைத்த பெயர்தான் மருதநாயகம். சிறுவயதிலேயே வீட்டைவிட்டு வெளியேறி புதுச்சேரிக்கு வந்தார். அங்குள்ள ஒரு இஸ்லாமிய தையல்காரரிடம் வேலை பார்த்தார். இயற்கையிலேயே சுறுசுறுப்பும், எதையும் எளிதில் புரிந்துகொண்டு செயல்படும் அந்தச் சிறுவனைக் குழந்தை இல்லாத அந்த தையல்காரரே கான்சாகிப் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்.

ஐரோப்பியர்களிடமும், பிரெஞ்சுக்காரர்களிடமும் நன்கு பழகியதால் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழியை எளிதில் கற்றார். வாலிப வயதில் எல்லோருக்கும் வரும்காதல் வியாதி இவருக்கும் வந்தது. மாஸா என்ற போர்ச்சுக்கீசியப் பெண்ணைக் காதலித்து மணந்து கொண்டார். கி.பி. 1752-ல் ராபர்ட் கிளைவின் ராணுவப் படையில் சேர்ந்தார். 1752-லிருந்து 1754 வரை ராபர்ட் கிளைவ் தலைமையில் நடைபெற்ற திருச்சி முற்றுகைப் போரில் கலந்துகொண்டு, தன் வீர தீரத்தைக் காட்டினார். அதனால் கிளைவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானார். அதனால் படைத்தளபதி ஆனார். ஆங்கிலேயர்களின் விசுவாசியாக இருந்த மருதநாயகத்தினைப் பாராட்டி, மேஜர் லாரன்ஸ் 1755-ஆம் ஆண்டு தங்கப்பதக்கத்தினை பரிசாக அளித்தார். 1759-ஆம் ஆண்டு மதுரை மண்டலத்தின் கவர்னராகப் பொறுப்பேற்றார்.

தற்போது பெரியார் பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள மேற்கு நுழைவாயில் என்ற கோட்டையில்தான் அவர் தங்கியிருந்தார். இவருடைய செல்வாக்கு அதிகரிப்பதைக்கண்டு எரிச்சல் அடைந்த ஆற்காடு நவாப், மருதநாயகத்தைப் பற்றி ஆங்கிலேயர்களிடம் குறைகூறிக் கொண்டேயிருந்தார். ஆரம்பத்தில் அதனைப் பெரிதுபடுத்தாத ஆங்கிலேயர்கள், நாளடைவில் மருதநாயகத்தினைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்கத்துவங்கினர். அதனால் அவரது சிறிய தவறுகள்கூட பூதாகரமாகத் தோன்றியது. இதனால் கருத்து வேறுபாடு வளர்ந்தது. இதற்கிடையே, மதுரை மக்களுக்காக நிறைய நன்மைகள் செய்யத்துவங்கிய மருதநாயகத்தின் செயல்பாடுகளை ஆங்கிலேயர் அறவே வெறுத்தனர்.

மருதநாயகமும் ஆங்கிலேயரைப் புறக்கணித்துவிட்டு, தனது கோட்டையில் பிரெஞ்சுக்கொடியை ஏற்றினார். இதனால் மிகுந்த கோபம் அடைந்த ஆங்கிலேயர்கள், இனிமேல் இவரை விட்டுவைத்தால் தங்களுக்கு ஆபத்து எனக்கருதி, மதுரையின் மீது படையெடுத்தனர். ஆனால் அவர்களை மருதநாயகம் எளிதாகத் தோற்கடித்து விட்டார்.

மருதநாயகத்தை நேருக்குநேர் போரில் வெல்ல முடியாது என்பதை உணர்ந்த ஆங்கிலேயர், வழக்கம்போல தங்கள் சூழ்ச்சி வலையை விரித்தனர். மருதநாயகத்தின் நம்பிக்கைக்குரிய பிரெஞ்சுப் படைத்தலைவன் மார்ச்சண்ட் ஆங்கிலேயரிடம் விலை போனான். எதிரியைவிட உடன் இருக்கும் நண்பன் துரோகியாவது, மிகவும் கொடுமையானது. மார்ச்சண்ட் சந்தர்ப்பம் அறிந்து மருதநாயகத்தினைக் காட்டிக் கொடுத்ததுடன், ஆங்கிலேயரிடம் பிடித்தும் கொடுத்தான்.

ஆங்கிலேயர்கள் 1764 -ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், மருதநாயகத்தை, சம்மட்டிபுரத்தில் உள்ள புளிய மரத்தில் தூக்கிலிட்டுக் கொன்றனர். அவர் இறந்தும் ஆத்திரம் அடங்காத ஆங்கிலேயர், அவரது உடலைத் துண்டுதுண்டாக வெட்டினர். தலையிலிருந்து இடுப்பு வரையிலான பாகம் மட்டும் சம்மட்டிபுரத்தில் புதைக்கப்பட்டது. அந்த உடல் பகுதி அடக்கம் செய்யப்பட்ட பகுதிதான் தற்போது மருத நாயகம் (எ) கான்சாகிப் மசூதியாகப் பிரம்மாண்ட அளவில் தோற்றமளிக்கிறது.

Tags: News, Madurai News, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top