ஓபிஎஸ் தலைமையில் புதிய அணி?

ஓபிஎஸ் தலைமையில் புதிய அணி?

அதிமுகவில் மீண்டும் ஒற்றை தலைமை கோரிக்கை வலுவாக எழுந்துள்ள நிலையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்

அதிமுகவில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆகிய இருவரிடையேயான மோதல் போக்கு மீண்டும் உச்சம் தொட்டுள்ளது. கட்சியில் இருந்து ஓபிஎஸ் தொடர்ந்து ஓரங்கட்டப்படுகிறார் என்ற விமர்சனங்களுக்கு மத்தியில், கட்சி முழுவதையும் தனது கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
 
கட்சியில் பெரும்பாலானோரை எடப்பாடி தனது கட்டுக்குள் கொண்டு வந்து விட்டார் என்பதை முதல்வர் வேட்பாளர் தொடங்கி, எதிர்க்கட்சி தலைவர் வரை அவருக்கு சாதகமாக அமைந்த சம்பவங்களில் இருந்து அறிந்து கொள்ள முடியும். எனவே, கட்சியில் தனக்கான இருப்பை பலப்படுத்திக் கொள்ளவும், எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கும் பொருட்டும் சசிகலாவை கட்சிக்குள் கொண்டு வர ஓபிஎஸ் முனைப்பு காட்டி வருகிறார். ஆனால், சசிகலாவை இணைக்க ஈபிஎஸ் தரப்பு விரும்பவில்லை என்பதால், பல்வேறு விஷயங்களை கூறி அதற்கு முட்டுக்கட்டை போட்டு விடுகிறார் ஈபிஎஸ்.
 
இந்த நிலையில், அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தை எப்படி நடத்துவது? என்னென்ன தீர்மானங்களைக் கொண்டுவரலாம்? என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசிப்பதற்காக அதிமுக தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
 
அந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டாலும், பிரதானமாக ஒற்றைத் தலைமையை வலியுறுத்தியே அனைவரும் பேசியுள்ளனர். இதில் பெரும்பாலான நிர்வாகிகள் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல், ஓபிஎஸ்சுக்கு ஆதரவாகவும் சிலர் குரல் கொடுத்துள்ளனர். பொதுக்குழுவில் ஒற்றைத்தலைமை என்ற கொள்கை முடிவு எடுப்பதோடு, யார் ஒற்றைத்தலைமை என்று இறுதி செய்ய வேண்டும் என்றும் அக்கூட்டத்தில் பலரும் வலியுறுத்தியுள்ளார். ஒற்றை தலைமை குறித்து விவாதம் நடைபெற்றதாக கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதிபடுத்தியுள்ளார்.
 
இதையடுத்து, சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் மனோஜ் பாண்டியன், காமராஜ், வைத்திலிங்கம், எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார், ஜேசிடி பிரபாகரன் உள்ளிட பலர் ஓபிஎஸ்சுடன் ஆலோசனை மேற்கொண்டனர். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், ஓபிஎஸ்சை வேறு சில காரணங்களுக்காக சந்திக்க வந்ததாகவும், கட்சி பலமாக இருக்க வேண்டும் என்பதே தொண்டர்கள் கருத்து எனவும் தெரிவித்தார்.
 
இந்த நிலையில், ஓபிஎஸ் வீட்டில் அவரது ஆதரவாளர்கள் இன்று இரண்டாவது நாளாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், ஈபிஎஸ் வீட்டில் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கட்சியின் பல மூத்த நிர்வாகிகளும் ஈபிஎஸ் வீட்டுக்கும், ஓபிஎஸ் வீட்டுக்கும் வந்த வண்ணம் உள்ளனர். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் மீண்டும் வெடித்துள்ள நிலையில், அடுத்தடுத்து நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுகுறித்த உள் விவகாரங்கள் அறிந்தவர்களிடம் இதுபற்றி பேசுகையில், “ஓபிஎஸ்சை பொதுக்குழுவுக்கு முன்னரே அடிபணிய வைக்கும் முயற்சிகளில் எடப்பாடி தரப்பு இறங்கியுள்ளது. சசிகலாவை கட்சிக்குள் கொண்டு வராமல் இருக்க எடப்பாடிக்கு இருக்கும் ஒரே ஆயுதம் ஒற்றை தலைமை. அதற்கு ஓபிஎஸ்சின் சம்மதம் தேவை. எனவே, நீண்ட நாட்களாக மத்திய அமைச்சர் கனவில் இருக்கும் ஓபிஎஸ் மகனுக்கு, டெல்லி பாஜக மேலிடத்திடம் பேசி முக்கியப் பொறுப்பை பெற்றுத் தருகிறோம். அதற்கு பலனாக ஒற்றை தலைமைக்கு ஓகே சொல்ல வேண்டும் என்று கோவைக்கு சிகிச்சைக்காக அண்மையில் சென்றிருந்த ஓபிஎஸ்சிடம் நேரடியாக டீல் பேசியது எடப்பாடி தரப்பு. அதன் தொடர்ச்சியாகத்தான் இன்றைய காட்சிகள் அரங்கேறுகின்றன.” என்கிறார்கள்.
 
முன்னதாக, முதல்வர் வேட்பாளர், வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டது, எதிர்க்கட்சித் தலைவர் போன்ற விஷயங்களில் இதுபோன்று அதிமுக மூத்த தலைவர்கள் ஓபிஎஸ்-ஈபிஎஸ் வீடுகளுக்கு அடுத்தடுத்து விசிட் அடித்ததை சுட்டிக்காட்டும் அவர்கள், அந்த சமயத்தில் எடப்பாடியின் கை ஓங்கியதை போல இந்தமுறையும் அவரது கையே ஓங்க வாய்ப்பிருப்பதாகவும் கூறுகிறார்கள்.
 
ஓபிஎஸ் தலைமையில் தனி அணி அமைகிறதா என்று அவர்களிடம் கேட்டபோது, அதற்கு வாய்ப்பில்லை என்கின்றனர். “தர்மயுத்த காலத்தில் அவருடன் சென்ற நிர்வாகிகள் கூட இப்போது அவர் பக்கம் சாய வாய்ப்பில்லை. அந்த சமயத்தில் அவருக்கு ஆதரவாக நின்றவர்களுக்கு அவர் எதுவும் செய்யவில்லை என்பது அவர்கள் தரப்பு குற்றச்சாட்டாக இருக்கிறது. மேலும், கட்சிக்குள் ஓபிஎஸ் ஆதரவாளர்களும் குறைந்து விட்டனர். எனவே, ஓபிஎஸ் தலைமையில் தனி அணி அமைய வாய்ப்பில்லை” என்று கூறுகின்றனர்.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top