பூமிக்குள்ளேயே ஓட்டை போட்டு மறுபக்கம் போய்டலாமா?

பூமிக்குள்ளேயே ஓட்டை போட்டு மறுபக்கம் போய்டலாமா?

கோட்பாட்டு இயற்பியலின் வேடிக்கையான பகுதியாக இருப்பினும் சரி, தத்துவார்த்த இயற்பியலின் சிறப்பான பகுதியாக இருப்பினும் சரி - அபத்தமான கேள்விகளைக் கேட்டு அதற்கான சரியான பதில்களைக் கணக்கிடுவது என்பது, எப்போதுமே நிகழும் சிறப்பானதொரு விடயமாகும்.

உதாரணத்திற்கு - நம்மில் பெரும்பாலானோர்கள் சிறுவயதில் கேட்க விரும்பிய அல்லது யாரிடமாவது கேட்ட ஒரு கேள்வியை எடுத்துக்கொள்வோம் - "பூமிக்கு நடுவில் ஒரு ஆழமான ஓட்டையொன்றை போட்டால், பூமியின் மறுப்பக்கத்திற்கு ஈஸியாக போகலாம். அப்படித்தானே.?

இத்தகைய ஒரு காரியத்தை யார் செய்ய விரும்புவார்கள்.? வெளிப்படையாக சொல்லப்போனால் - அநேகமாக யாரும் இதை செய்யப்போவதில்லை. அதற்காக - தற்கால மற்றும் வருங்கால - பிள்ளைகள் இந்த கேள்வியை நம்மிடம் கேட்காமல் இருக்கப்போவதுமில்லை. ஆக, இதற்கான விடையை அறிந்துவைத்துக்கொள்வதைவிட வேரோரு அருமையான வழி நமக்கில்லை.

பூமியின் மறுபக்கத்திற்கு அல்ல, பூமியின் நடுப்பகுதியை கூட நம்மால் நெருங்க முடியாது என்பதே நிதர்சனம். பூமிக்குள் போடப்படும் துளையானது, பயங்கரமான வழிகளில் நம்மை கொன்றுவிடும் என்பது ஒருபக்கமிருக்க பூமிக்கு நடுவே துளையொன்றை போட்டால் - கோட்பாட்டளவில் என்ன நடக்கும்?

வெளிப்படையாக கூற வேண்டுமெனில், பூமியின் மையத்தின் வழியாக துளையிட முடியாது. இந்த மிகப்பெரிய சாதனையை நிறைவேற்றுவதற்கான தொழில்நுட்ப திறன்களை "தற்போது" நாம் கொண்டிருக்கவில்லை. சரி, அதிகபட்சம் எவ்வளவு ஆழமாக நம்மால் பூமியில் துளைகளைப்போட முடியும்.? 

இன்றுவரை, உலகில் இடப்பட்ட ஆழமான துளை - கோலா சூப்பர்டீப் போர்ஹோல் (Kola Superdeep Borehole) ஆகும். 1970-களில் துளையிடலை துவங்கி 20 ஆண்டுகளுக்கு பின்னர் 40,230 அடி (12,262 மீட்டர்) ஆழத்தை அடைந்தது. அதாவது சுமார் 7.5 மைல்கள் அல்லது 12 கி.மீ ஆழம். பூமியின் விட்டத்தோடு ஒப்பிடும்போது அது ஒரு முடி அகலம் கூட இல்லை. சரி அதற்குமேல் ஏன் துளையிடவில்லை.? அது ஏன் நிறுத்தப்பட்டது.? 

புவியின் மையப்பகுதியை நாம் நெருங்கி வருகையில் விடயங்கள் "சூடுபிடிக்கும்". ஏனென்றால் பூமியின் மையம், திரவ உலோகதினால் நிரம்பியுள்ளது மற்றும் அதன் வெப்பநிலை 9700° ஃபாரன்ஹீட் (5400° செல்சீயஸ்) என்ற அளவை தாண்டிச் செல்கிறது. ஆக சுமார் 7.5 மைல் ஆழத்தை அடைந்ததுமே 350° ஃபாரன்ஹீட் (170° செல்சீயஸ்) வெப்பத்தை விட அதிக வெப்பநிலைகளை எதிர்கொள்ள நேர்ந்தது. 

அந்த அளவிலான வெப்பம் நிச்சயம் நுழையும் எவரையும் கொன்றுவிடும் என்பதை நான் உங்களுக்கு சொல்லவேண்டிய அவசியம் இல்லை. ஒருவேளை அதையும் மீறி இன்னும் ஆழமாக சென்றால், அதாவது கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து 30 மைல் (48 கிமீ) ஆழத்தை அடைந்தால் அங்கு கொதிக்கும் மேக்மாவை சந்திப்போம். அது நம்மை சாம்பலாக்கி விளையாடும் என்பதில் சந்தேகமேயில்லை. 

கொதிக்கும் மேக்மா என்ற பெரும்தடையை சமாளிக்க ஒரு சூப்பர் திட்டம் இருக்கிறது, அதாவது மிகவும் பலமான குழாய் ஒன்றை உருவாக்கி பாதுகாப்பாக சூடான மேக்மாவை நாம் கடந்து செல்கிறோம் என்று கற்பனை செய்துகொள்வோம். கடந்து செல்வோமா.?? - மாட்டோம். இதை நிகழ்த்தினாலும் நாம் மரணிப்பது உறுதி. இந்த பயணத்தில் காற்று, அதாவது காற்றின் அழுத்தம் நம்மை கொல்லும்.

அதென்ன அழுத்தம்.? நீங்கள் தண்ணீருக்குள் ஆழமாக நீந்தும்போது அழுத்தம் ஏற்படும் அல்லவா.? அதே போலத்தான். உங்களுக்கு மேல் அதிக காற்று இருக்கும் காரணத்தினால் கீழ் செல்லும் நாம் அழுத்தத்தை உணர்வோம். ஆக, குழாய் மூலம் பூமிக்குள் நுழைந்து மறுபக்கத்தை அடையலாம் என்ற திட்டம் உங்களிடம் இருந்தால் - 31 மைல்கள், அதாவது 50 கிமீ ஆழத்திலேயே பெருங்கடல்களின் கடைமட்ட ஆழத்தில் உணரும் அழுத்தத்தை விட பல மடங்கு அதிக அழுத்தத்தை உணர்வீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும். 

ஒருவேளை கொதிக்கும் மேக்மா வழியாக செல்ல அனுமதிக்கும் ஒரு குழாயை செய்ய முடிந்து, அந்த குழாயிலிருந்து அனைத்து காற்றையும் உறிஞ்சி வெளியே எடுத்து, ஒரு பிரத்யேக உடை அணிந்து குழாயினுள் நம்மால் சுவாசித்து பயணிக்க முடியும் என்றாலும் கூட, கிரகத்தின் சுழற்சியினால் நாம் சிக்கல்களை சந்திப்போம்.

கிரகத்தின் பாதி ஆழத்தை அடைந்ததும் நாம் உருவாக்கிய குழாயின் சுவர்களைவிட கிரகத்தின் சுழற்சி வேகமானதாக இருக்கும். அதாவது மணிக்கு 1,500 மைல்கள் (மணிக்கு 2400 கிமீ) என்ற வேகத்தில் பூமி கிரகம் சுழலும். இது கடுமையான உடல் நல பாதிப்பு, குழாய்களுக்குள் துள்ளுவது, அதன் மீது மோதுவது போன்ற கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலைகள் தொடங்கி மரணம் வரையிலான சிக்கல்களை சந்திப்போம்.

சரி, பூமிக்குள் துளையிட்டு பயணிப்பதில் உள்ள யதார்த்த விவகாரங்கள் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு கண்மூடித்தனமாக பூமிக்கு நடுவே துளையிட்டு ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்திற்கு குதித்தால் என்னவாகும்.?? - வெறும் 42 நிமிடங்கள் மற்றும் 12 நொடிகளுக்குள் நாம் மறுபக்கத்தை அடைவோம். எனினும், இதோடு வேடிக்கை முடிந்து விடாது. 

பூமியின் தீவிர ஈர்ப்பு மற்றும் உங்களின் தீவிர வேகத்தின் காரணமாக துளையின் வழியாக நீங்கள் மறுபுறம் வந்தாலும் கூட நீங்கள் மீண்டும் பூமிக்குள் வந்த வழியாகவே சரிவீர்கள். ஆரம்பித்த இடத்திற்கே வருவீர்கள் மற்றும் மீண்டும் உள்நோக்கி சரிவீர்கள். இப்படியாக நீங்கள் முன்னும் பின்னுமாக ஊசலாடப்பட்டுக்கொண்டே இருப்பீர்கள், முடிவே இருக்காது.

Tags: News, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top