அதிசய நந்தி சிலை!

அதிசய நந்தி சிலை!

“முன்னூறு வருடங்களுக்கும் மேலாக ஒரு நந்தி சிலையில் திரவம் வழிந்து கொண்டிருக்கிறதாம். கேள்விப்பட்டீர்களா?” காதில் விழுந்த இந்த செய்தியைக் கேட்டதும், நாற்காலியில் சற்றே தளர்வாக அமர்ந்திருந்து நமது உடல் நிமிர்ந்து கண்கள் விரிந்தன. ஆவல் அதிகமாகவே, அந்த சிலை இருக்கும் முகவரியைத் தெரிந்து கொண்டு பயணித்தோம். திருப்பத்தூரிலிருந்து சிவகங்கைக்குச் செல்லும் வழியில் இருக்கிறது, இளங்குடி எனும் சிற்றூர். ஊர் தான் சிறிதாக இருந்ததே ஒழிய, ஊரின் அமைப்பு சற்று பிரமிப்பாக இருந்தது. சதுர வடிவில் அழகான இரண்டு குளங்கள். ஒன்று குடிநீர், மற்றொன்று குளிப்பதற்கென்று இருந்தது. நாம் வந்த விஷயத்தைச் சொன்னதும், அங்குள்ள மக்கள். ‘அந்த சிலையா? ஊருக்குத் தெக்காலே வயக்காட்டுக்குள்ளே இருக்கு!’ என்று சொல்லி வழிகாட்டினர்.

ஊரை விட்டுத் தள்ளியே வனத்திற்குள் இருந்தது அந்தக் கோயில். கோயிலின் முன்பாக ஒரு ஊரணி இருந்தது. ஆடு, மாடு மேய்ப்பவர்களைத் தவிர வேறு யாரையும் பார்க்க இயலவில்லை. வந்த விஷயத்தைக் கவனிக்க ஆரம்பித்தோம். நாம் கேள்விப் பட்ட அந்த நந்தி சிலை அந்தச் சிறிய சிவன் கோயில் முன்னால் சாதாரணமாகத் தான் இருந்தது. அருகே சென்று பார்த்தபோது, அதன் கழுத்தைச் சுற்றி வெள்ளைத் துண்டு ஒன்று கட்டப்பட்டிருந்தது. அதை அருகில் சென்று பார்த்த போது, நந்தியின் கழுத்துப் பகுதியிலிருந்த அந்தத் துண்டு, செந்நிற வண்ணத்தில் எண்ணெய்ப் பிசுக்காக இருந்தது. நந்தியின் வாயைப் பார்த்த நாம் வாயடைத்துப் போனாம்!

அந்த நந்தியின் வாய்ப் பகுதி உடைக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த சிலையிலிருந்து வரும் பிசின் போன்ற திரவம் வாயிலிருந்து கழுத்து வழியே இறங்கிக் கொண்டிருக்கிறது. காற்றுக்கு அதன் தடங்கள் காய்ந்துபோய் இருந்தன.

ஆனால் அந்த நந்தி சிலை முழுவதும் அந்தப் பிசினின் தாக்கத்தால் அதன் தடங்கள் காய்ந்து போய் தடிமனாக இருந்தது. சிலையின் பீடம் ஏதும் பூசப்படவில்லை. அந்த சிலையைச் சுற்றிச் சுற்றிப் பார்த்தும், இந்த திரவம் எங்கிருந்து வருகிறது என்ற மர்மம் மட்டும் விலகவேயில்லை. ஊர் மக்களிடம் இது பற்றி விசாரித்தோம்! அவர்கள் சொன்ன தகவல் இன்னும் ஆச்சர்யமாக இருந்தது.

“அந்த நந்தி சிலையிலேயிருந்து எப்படி அந்த திரவம் வருதுன்னு, எத்தனையோ பேர் வந்து பாத்துட்டு, சிலையையெல்லாம் தனியாகத் தூக்கிப்பாத்தாங்க. பூமிக்கடியிலேயிருந்து சிலையின் ஏதாவது துவாரம் வழியே வருதான்னு எல்லாம் பாத்தாங்க. அப்படி ஏதும் இல்லீங்க! அந்த சிலைக்கு உள்ளேயிருந்து தான் அந்த திரவம் வருது. நூறு வருஷத்துக்கு முன்னாடி, எங்க முப்பாட்டன் காலத்திலே, இதைக் கண்டுபிடிக்கனும்னு ஆர்வத்திலே, அந்த சிலையோட வாயையும் உடைச்சுப் பாத்திருக்காங்க. அப்படியும் அந்த சிலையிலிருந்து ஏதோ ஒரு திரவம் வந்துகிட்டு தாங்க இருக்கு! நிறைய ஆராய்ச்சி பண்றவங்க எல்லாம் வந்து, அந்த திரவத்தை எடுத்துட்டுப் போயி டெஸ்ட் பண்ணிப் பாத்தாங்க! அதிலேயும் ஒண்ணும் கண்டுபிடிக்க முடியலைங்க. ஆனா, எங்க ஊரு சனங்க எல்லாம், அந்த சிலையிலிருந்து ஒண்ணைக் கண்டு பிடிச்சுருக்காங்க.’ என்று அவர்கள் சொன்னதைக் கேட்டதும், அதை அறியும் ஆவல் இன்னும் அதிகமாகி நம்மைப் பரபரக்க வைத்தது.

‘அந்த சிலையிலிருந்து திரவம் அதோட கால் வரைக்கும் வழிஞ்சு வந்துச்சுன்னா, அந்த வருஷம் மழை நல்லாப் பெய்யுமுங்க, அது கம்மியாச்சுன்னா, மழை அளவும் கம்மி ஆயிடும். இதை நாங்க ஒவ்வொரு வருஷமும் கவனிச்சுப் பாத்திருக்கோமுங்க, நிசமாவே, நந்தி வாயிலே வழியிற அளவைப் பொறுத்து மழை பெய்யும். இது அதிசய நந்தி சிலைங்க. இந்த நந்தி திரவத்தை வச்சித்தான் நாங்க வெள்ளாமையை எப்படிப் பண்ணுறதுன்னு முடிவு பண்ணுவோமுங்க” என்றார்கள்.

இந்த ஊரின் வானிலை ஆய்வு மையமாக இந்த நந்தி சிலை இருப்பதும், இந்த திரவம் வழியும் ரகசியம் என்ன? என்ற ஒரு மர்ம முடிச்சோடு ஆச்சர்யத்தின் பிம்பங்கள் இன்னும் விலகாமலே இருக்க, நந்தி சிலையை மீண்டும் ஒரு முறை பார்த்து விட்டுத் திரும்பினோம்!

- மதுரை ராஜா

Tags: News, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top