பிரபல பாடகர் கேகே மாரடைப்பால் காலமானார்!

பிரபல பாடகர் கேகே மாரடைப்பால் காலமானார்!

Singer KK Death: பிரபல பின்னணி இசை பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் (கேகே) மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். பிரபல பாடகரான கேகே (53), தமிழ் உட்பட பல்வேறு இந்திய மொழிகளில் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இவர் கடந்த 1968 ஆம் ஆண்டில் தலைநகர் டெல்லியில் வசித்து வந்த ஒரு மலையாள குடும்பத்தில் பிறந்தவர். இவர் திரைப்படங்களுக்கு பாடல் பாடுவதற்கு முன்பு 3500-க்கும் மேற்பட்ட ஜிங்கிள்களுக்கு பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார். தொடர்ந்து 1999 ஆம் ஆண்டில் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக பாடல் பாடியிருந்தார் கேகே. கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் திரைப்பட பாடல்கள் பாடி வருகிறார்.

கிருஷ்ணகுமார் குன்னத் (கேகே) சுமார் 66 பாடல்களை தமிழ் திரைப்படங்களில் பாடியுள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 1997 ஆம் ஆண்டு வெளியான மின்சார கனவு படத்தில் இடம் பெற்ற ஸ்ட்ராபெர்ரி கண்ணே பாடல் மூலம் தமிழில் கேகே அறிமுகமானார். அந்த பாடலை அவர் பெபிமணியுடன் இணைந்து பாடியிருப்பார்.
 
மேலும் யுவன் சங்கர் ராஜா, தேவா, வித்யாசாகர், மணி சர்மா மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டோர் இசையிலும் தமிழில் அவர் பாடியுள்ளார். 
 
காதல் வளர்த்தேன், அப்படி போடு, நினைத்து நினைத்து, உயிரின் உயிரே உள்ளிட்ட ஹிட் பாடல்கள் இந்த வரிசையில் அடங்கும்.
 
இந்நிலையில், நேற்று கொல்கத்தா மாநகரின் நஸ்ருல் மஞ்சா பகுதியில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற கேகே ரசிகர்கள் முன்னிலையில் பாடல்களை பாடினார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கச்சேரி முடிந்ததும் மயங்கி விழுந்த அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது திடீர் மறைவுக்கு காரணம் மாரடைப்பு என கூறப்பட்டுள்ளது.
 
அவரது மறைவு செய்தியை அறிந்து ரசிகர்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பிரபல பாடகர் கேகே மறைவு வருத்தமளிக்கிறது. அனைத்து வயதினரையும் கவர்ந்த அவரது பாடல்கள் பலவிதமான உணர்ச்சிகளை பிரதிபலித்தன. அவரது பாடல்கள் மூலம் நாம் எப்போதும் அவரை நினைவில் கொள்வோம். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக அவர் கடைசியாக பங்கேற்றிருந்த மேடை இசை நிகழ்ச்சி குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனாது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top