பிரதமர் மோடியின் வாழ்வில் முக்கிய பங்காற்றிய தாயார் ஹீராபென்!

பிரதமர் மோடியின் வாழ்வில் முக்கிய பங்காற்றிய தாயார் ஹீராபென்!

தனது வாழ்வின் மிகப்பெரிய தூண் என்றும் தனது வெற்றிகளில் முக்கிய பங்காற்றுபவர் என்றும் தன் தாய் பற்றி பல இடங்களில் மோடி குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் 100 வயதை எட்டியுள்ள நிலையில், மோடியின் வாழ்வில் அவர் ஆற்றிய  முக்கிய பங்கினை  விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு..
 
குஜராத் மாநிலம் மேசனா நகரை அடுத்த விஸ்நகரில் 1920ம் ஆண்டு பிறந்தவர் ஹீராபென். குழந்தை பருவத்திலேயே தாயை இழந்த அவர், பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிட்டு, மிக இளம் வயதிலேயே வித்நகரை சேர்ந்த தாமோதர தாஸ் முல்சந்த் எனும் டீ விற்பனையாளரை மணந்தார். அந்த தம்பதிக்கு 5 மகன்கள் மற்றும் ஒரு மகள் பிறந்தனர். அதில் மூன்றாவது மகனாக பிறந்தவர் நரேந்திர மோடி.
 
ஏழ்மை சூழலுக்கு மத்தியிலும் கல்வி பயிலவேண்டும் என அறிவுறுத்தினாரே தவிர, தனக்கு உதவவேண்டும் என ஒருபோதும் தனது தாய் கூறியது இல்லை என கட்டுரை ஒன்றில், பிரதமர் மோடி நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
 
சாப்பாட்டை என்றும் வீணாக்கக் கூடாது என்பதில், தனது தாய் இன்றும் கட்டுக்கோப்பாய் இருப்பதாகவும், தானும் அதை பின்பற்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 
அந்த ஊர் குளத்தில் குளிப்பதில் மிகவும் ஆர்வம் கொண்ட மோடி. ஒருமுறை அங்கு குளிக்கும்போது தான் பிடித்த முதலை குட்டியை வீட்டிற்கு கொண்டு வந்துவிட்டார். ஆனால், அது பாவச்செயல் என ஹீராபென் கூறியதால், முதலைக்குட்டியை மோடி மீண்டும் குளத்திலேயே விட்டுவிட்டார்.
 
மற்றவர்கள் மகிழ்வதை கண்டு மகிழ்வதையும், மற்றவர்களின் துன்பங்களை போக்கும் விதமாக இருப்பதையுமே, தாயார் விரும்புவார் என மோடி தெரிவித்துள்ளார்.
 
மற்ற சகோதரர்களை காட்டிலும் வித்தியாசமாக செயல்பட்ட போதிலும், விருப்பமானதை செய் என கூறி மோடியை ஊக்குவித்தார் தாய் ஹீராபென்.
 
முதல் முறையாக வீட்டை விட்டு இளைஞராக மோடி வெளியேறியபோதும், கலங்கிய கண்களுடன் மனதிற்கு பிடித்ததை செய் என ஹீராபென் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்
 
உறுதியான முடிவுகளை எடுக்க தனது தாய் தன்னை ஊக்குவித்ததாகவும், முதன்முறையாக முதலமைச்சராக பதவியேற்ற போது ஒருபோதும் லஞ்சம் வாங்காதே என அவர் அறிவுறுத்தியதாகவும் மோடி கூறியுள்ளார்.
 
தனது மகனுடன் எப்போது தொலைபேசியில் பேசினாலும் எந்த தவறையும் செய்யாதே, யாருக்கும் தீங்குசெய்துவிடாதே, ஏழைகளுக்காக பணியாற்று என கூறுவதை ஹீராபென் வாடிக்கையாக கொண்டுள்ளார்.
 
மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய விரும்பினால், ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும், தனிப்பட்ட வாழ்வில் நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டும் என மோடியிடம் வலியுறுத்தி வந்துள்ளார்.
 
தனது வாழ்வின் மிகப்பெரிய தூண் என்றும் தனது வெற்றிகளில் முக்கிய பங்காற்றுபவர் என்றும் தன் தாய் பற்றி பல இடங்களில் மோடி குறிப்பிட்டுள்ளார்.
 
இதுவரை மோடியுடன் இரண்டு பொது நிகழ்ச்சிகளில் மட்டுமே ஹீராபென் கலந்து கொண்டுள்ளார். 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு அறிவித்த போது, தள்ளாத வயதிலும் பழைய ரூபாய் நோட்டுகளுடன் ஏடிஎம் வாசலில் நின்று தனது மகனின் அறிவிப்புக்கு ஹீராபென் ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top