ஹெமிஃபேசியல் ஸ்பாஸம் என்ற பாதிப்பை கட்டுப்படுத்தும் நிவாரண சிகிச்சை

ஹெமிஃபேசியல் ஸ்பாஸம் என்ற பாதிப்பை கட்டுப்படுத்தும் நிவாரண சிகிச்சை

இன்றைய திகதியில் பிறந்த பச்சிளம் குழந்தை முதல் முதியவர்கள் வரை செல்போன்களை தொடர்ச்சியாக பார்ப்பது என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இதன் காரணமாக அவர்கள் கண்களை இமைக்காமல் செல்போனில் உள்ள டிஜிட்டல் திரையை பார்ப்பதும் அதிகமாகிறது. இதனால் கண்களில் வறட்சி ஏற்பட்டு பார்வை திறன் செயல்பாட்டில் இடையூறு ஏற்படுகிறது. இந்நிலையில் எம்மில் சிலருக்கு சில காரணங்களால் திடீரென்று ஒரு கண்ணை மட்டுமோ அல்லது இரண்டு கண்ணையுமோ அவர்களின் கட்டுப்பாட்டையும் மீறி சிமிட்டுவது அதிகரிக்கும். இவை எம்மாதிரியான குறைபாடு என்பது குறித்தும், இது தொடர்பான மேலதிக விவரங்களை தெரிந்து கொள்வதற்காகவும் நரம்பியல் நிபுணர் டொக்டர் சோமசுந்தரம், M.D.,D.M.,P.hd., அவர்களை சந்தித்தோம்.

எம்மில் சிலருக்கு திடீரென்று ஒரு கண்ணை மட்டும் சிமிட்டுவது தன்னிச்சையாக அதிகரித்து, அவை நீடிக்கிறதே. ஏன்..?
 
இதற்கு மருத்துவத்துறையினர் ஹெமிஃபேஷியல் ஸ்பாசம் என குறிப்பிடுவார்கள். அதாவது இயல்பாக எம்மில் அனைவரும் ஒரு நிமிடத்திற்கு 12 முதல் 18 முறை கண்ணை சிமிட்டுவார்கள். அனிச்சையான இந்த நடவடிக்கை கண்கள் ஈரப்பதத்துடன் இயங்குவதற்காக எம்முடைய உடலமைப்பு ஏற்படுத்தித் தரும் ஒரு தற்காப்பு நடவடிக்கை. ஆனால் எம்மில் சிலர் தற்போதைய சூழலில் பல நிமிடங்கள் வரை கண்ணை இமைக்காமல் டிஜிட்டல் திரையினை பார்க்கிறோம். இதனால் கண்கள் வறண்டு பாதிப்புக்குள்ளாகின்றன. ஹெமிஃபேஷியல் ஸ்பாசம் என்பது, ஆண் பெண் என பாலின பேதமின்றி ஏற்படும் ஒரு நரம்பியல் குறைபாடு. இத்தகைய பாதிப்பிற்கு  20 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் ஆண்டுதோறும் 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் நோயாளிகள் புதிதாக உருவாகிறார்கள் என அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.
 
ஹெமி ஃபேஷியல் என்ற பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்களும், அறிகுறிகளும் என்ன.?
 
மரபணு காரணிகள், முகத்தில் உள்ள நரம்புகளில் ஏற்படும் சுருக்கம், முகத்தில் உள்ள நரம்புகளின் செயலிழப்பு என சிலவற்றை காரணங்களாக பட்டியலிடலாம். இத்தகைய பாதிப்பு சிலருக்கு இடது கண்ணிலோ அல்லது வலது கண்ணிலோ என ஒரே ஒரு கண்ணில் மட்டும் ஏற்படக்கூடும். வேறு சிலருக்கு இரண்டு கண்களையும் இயல்பான அளவைவிட கூடுதலாக சிமிட்டுவார்கள். இவை பெரும்பாலும் கண்ணின் மேல் இமை பகுதியிலிருந்து உருவாகும். சிலருக்கு அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லாமல் இரண்டு கண்களை சிமிட்டுவது அதிகரிக்கும். இதற்கு மருத்துவத்துறையில் Blepharospasm என்று குறிப்பிடுவர். ஆனால் ஹெமி ஃபேசியல் ஸ்பாஸம் என்பது ஏதேனும் ஒரு புறத்தில் தோன்றி, கன்னம், வாய் போன்ற பகுதிகளிலும் பாதிப்பு நீண்டு, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் கண் இமைகளை திறக்க இயலாத நிலை ஏற்படும். 
 
முகத்திலுள்ள நரம்புகளுக்கு இடையேயான தொடர்பில் ஏற்படும் குறைபாட்டின் காரணமாகவும், முகத்தில் உள்ள நரம்புகளின் செயல்பாட்டில் ஏற்படும் இடையூறு அல்லது சமச்சீரற்ற தன்மை காரணமாகவும் இவை ஏற்படுகிறது. இதன்போது முகத்தின் ஒரு பகுதியில் ஏற்படும் அசைவை எம்மால் கட்டுப்படுத்த இயலாது. சிலருக்கு இத்தகைய தன்னிச்சையான செயல்பாடு வலி இல்லாமல் இருக்கும். வேறு சிலருக்கு இவை வலியும் ஏற்படக்கூடும். 
 
ஹெமி ஃபேசியல் ஸ்பாஸம் என்ற பாதிப்பு ஏற்பட்டால், கவலை, சோர்வு, மன அழுத்தம் ஆகியவை ஏற்படும். சிலருக்கு முக பகுதியில் தற்காலிக மிதமான பலவீனம் ஏற்படக்கூடும். வேறு சிலருக்கு கேட்கும் திறன் பாதிக்கப்படும்.
 
இதற்கான பரிசோதனைகளும், சிகிச்சைகளும் என்ன?
 
இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவுடன் நரம்பியல் நிபுணரை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும். மூளையின் மின் செயல்பாட்டை துல்லியமாக அவதானிக்க எலக்ட்ரோமயோகிராபி என்ற பிரத்தியேக பரிசோதனை, எம் ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனை, கம்ப்யூட்டட் டோமோகிராபி, ரத்த நாளங்களின் செயல்பாட்டை அறிவதற்கான ஓஞ்சியோகிராபி போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும். இத்தகைய பரிசோதனைகளுக்கு பிறகு பாதிப்பின் தன்மையையும், காரணத்தையும் துல்லியமாக அவதானித்து, அதற்குரிய சிகிச்சையை மருத்துவ நிபுணர்கள் தீர்மானிப்பார்கள் 
 
இதற்கு Botulinum எனப்படும் பிரத்யேக மருந்தினை ஊசி மூலம் செலுத்தி அப்பகுதியின் பாதிப்பை கட்டுப்படுத்தும் முழுமையான நிவாரண சிகிச்சையை வழங்குவர். வேறு சிலருக்கு பிரத்யேக மருந்து மூலம் இதனை கட்டுப்படுத்துவர். மருந்துகளாலும், ஊசிகளாலும் கட்டுப்படுத்த இயலாத நிலை ஏற்படும் பொழுது, அவர்களுக்கு மட்டும் பல கட்ட பரிசோதனைகளுக்கு பிறகு மூளைப்பகுதியில் மைக்ரோ டிகம்பிரஷன் சர்ஜேரி  எனப்படும் சத்திரசிகிச்சை செய்து இதன் பாதிப்பை கட்டுப்படுத்துவர். வேறு சிலருக்கு ரேடியோ அதிர்வலை சிகிச்சை மூலமாகவும், Thermocoagulation என்ற சிகிச்சை மூலமாகவும் இதற்கு முழுமையான நிவாரணத்தை வழங்குவர். இத்தகைய பாதிப்பிற்கு சிகிச்சை பெற்றாலும் ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை மருத்துவரின் கண்காணிப்பில் சிகிச்சை பெற வேண்டியதிருக்கும். மேலும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 0091 80562 33695 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
 
சந்திப்பு: அனுஷா

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top