மெர்சல் விமர்சனம்

மெர்சல் விமர்சனம்

மருத்துவம் வியாபாரமாவதற்கு எதிராகப் பொங்கியெழும் விஜய் அதற்கு எதிராக என்ன செய்தார், மக்களுக்கு என்ன சமூகக் கருத்துச் சொல்கிறார் என்பதே மெர்சல் படத்தின் கதை. சமீபகாலமாக மருத்துவத்துறையில் நிகழும் வணிகம் குறித்து பல படங்கள் வெளியாகிவிட்டன என்பதால் புத்தம்புதிய கதைக்களத்தை எதிர்பார்த்துப் போனவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். 'புதுக் கதையா... அதுக்கு ஏன் இந்தக் கடைக்கு வந்த?' என்பதுபோல் ரசிகர்களைப் பாவமாகப் பார்க்கிறார் அட்லீ.

எஸ்.ஜே.சூர்யாவுக்கு, வழக்கமான கமர்ஷியல் படங்களின் வில்லன் போல கொஞ்சம் வில்லத்தனம், கொஞ்சம் வசனம் காம்போதான். பாவ புண்ணியக் கணக்குப் பார்க்காத வில்லத்தனத்தையும் தனது வழக்கமா 'ஆங்..' மாடுலேஷனிலேயே காட்டுகிறார் வில்லன் எஸ்.ஜே.சூர்யா. மற்றபடி அவரது நடிப்பைப் பாராட்டும்வகையில் மிகச் சிறப்பான காட்சிகளும், நடிப்பும் இந்தப் படத்தில் இல்லை.

வடிவேலுவுக்கு இந்தப் படத்தில் கேரக்டர் ரோல். விஜய் - வடிவேலுவின் அதகள காம்போவைப் பார்த்து ரசித்திருக்கும் நமக்கு இது சற்று ஏமாற்றமே. ஆனாலும், 'சீலாக்கி டும்' என அவ்வப்போது தனது இங்க்லீஷ் பேசுற ஸ்டைல் மூலம் தனது ரீ-என்ட்ரியை பதிவு செய்கிறார். சிறுவயது வடிவேலுவாக நடிக்க அச்சு அசலாக அப்படியே ஒரு பையனைப் பிடித்திருக்கிறார்கள். சிறுவயது விஜய்யாக நடித்த குட்டிப் பையனும் நித்யா மேனன் போலவே பப்ளி க்யூட்.

போலீஸ் உயரதிகாரியாக சத்யராஜ் இந்தப் படத்தில் சில இடங்களில் வருகிறார். அவரைக் குறிப்பிட்டுச் சொல்லும்படியும் எந்தக் காட்சியும் இல்லை. கோவை சரளா மிகச்சில காட்சிகளில் மட்டுமே வருகிறார். காளி வெங்கட் ஒரு கேரக்டர் ரோலில் நன்றாகவே நடித்திருக்கிறார். சுகாதாரத்துறை அமைச்சராக மொட்டை ராஜேந்திரன், சமந்தாவின் நண்பர்களாக யோகிபாபு மற்றும் மீஷா கோஷல் ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். இவர்களுக்கு படத்தில் பெரிதாக நடித்திட ஸ்கோப் இல்லாததால், பார்ப்பதோடு நிறுத்திக்கொள்ளலாம். பாராட்டும் அளவுக்கு வொர்த் இல்லை.

படத்தின் ஆரம்பத்தில், சென்னையின் முக்கிய மருத்துவர்கள் சிலர் கடத்தப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் பாரீஸில் ஐந்து ரூபாய் டாக்டர் மாறனுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. அங்கே ஒரு டாக்டரை மேஜிக் ஷோவுக்கு நடுவே போட்டுத்தள்ளுகிறார் விஜய். டாக்டர்களைக் கொல்பவர் இந்த ஐந்து ரூபாய் டாக்டரா, மேஜிக் கலைஞரா, இல்லை இரண்டுமே ஒருவர் தானா என்பதைத் தேடுகிறார்கள் போலீசும், வில்லன் எஸ்.ஜே.சூர்யாவும்.

மேஜிக் கலைஞர் விஜய், ஐந்து ரூபாய் டாக்டர் விஜய் என இரண்டுபேரும் ஒரு கட்டத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள். தங்கள் குடும்பத்தின் ஃப்ளாஷ்பேக், டாக்டர் விஜய்க்கு வடிவேலு மூலம் தெரியவர, இருவரும் இணைந்து எஸ்.ஜே.சூர்யா கணக்கை முடிக்க முடிவெடுக்கிறார்கள். வடிவேலு மூலம்தான் மேஜிக் கலைஞர் விஜய்க்கு அவரது கதை தெரிந்திருக்க வாய்ப்பு அதிகம். ஆனால், வடிவேலு மேஜிக் விஜய்யை சந்தித்தது எப்படி என்கிற முன்கதை படத்தில் மிஸ்ஸிங். ஒருவேளை நேரம் கருதி இந்தக் காட்சிகளை நீக்கிவிட்டார்களோ என்னவோ..?

இனிமேல்தான், 'தளபதி' விஜய்யின் என்ட்ரி. அதாவது ஃப்ளாஸ்பேக் ஸ்டார்ட்ஸ் நவ். பஞ்சாப்பின் பொட்டல்காட்டில் சர்தார்ஜி, சிங்குகளின் பல்லே பல்லே டான்ஸுக்கு மத்தியில் 'ஆளப்போறான் தமிழன்' என ஆடிப்பாடுகிறார் மதுரைக்கார தளபதி. அவரது மனைவியாக நித்யா மேனன். நித்யா மேனன், படத்தின் புள்ளைத்தாச்சி கேரக்டருக்காக உடல் எடையை நிஜமாகவே அதிகமாக்கி, நடிகர் விக்ரமுக்கெல்லாம் டஃப் ஃபைட் கொடுத்திருக்கிறார் போலும்(!) விஜய்க்கும் நித்யா மேனனுக்குமான ரொமான்ஸ் காட்சிகளுக்கு தியேட்டரில் செம்ம ரெஸ்பான்ஸ். நித்யா மேனனுக்கும் அவரது பஞ்சாபி தாய்க்கும் ஒரு விஷயத்தில் பந்தயம் வேறு. அது என்னவென்று தியேட்டரில் பார்த்து ரசியுங்கள். முதல் குழந்தை பிறந்ததும் இவர்கள் மதுரைக்குப் புறப்படுகிறார்கள்.

மதுரைக்கு வரும் விஜய், தனது சொந்த கிராமத்தில் கோவில் கட்ட முடிவெடுக்க, அந்த நேரத்தில் ஒரு தீ விபத்தில் சிக்கி இரு குழந்தைகள் உயிரிழக்கிறார்கள். 23 கிலோமீட்டர் கடந்து நகரத்திற்குச் சென்றால்தான் மருத்துவமனை என்கிற அவலத்தால் இருவர் இறந்துபோனது உறுத்த 'இங்கே கட்டவேண்டியது கோவில் இல்லடா... ஹாஸ்பிட்டல்' என விஜய்க்கு உரைக்கிறது. கோவிலுக்குப் பதிலாக மக்கள் நல மருத்துவமனை கட்ட முடிவெடுக்கிறார் விஜய். அவரது திட்டத்திற்கு காலங்காலமான தமிழ் சினிமா சென்டிமென்ட் போலவே தாய்க்குலங்கள் தங்கத்தைக் கழற்றிக் கொடுக்க, ஒவ்வொருவராக ஆதரவு தருகிறார்கள். ஒருவழியாக மருத்துவமனையும் கட்டப்படுகிறது.

'காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் கூட்டிட்டுப் போன' கதையாக அப்பாவி விஜய்யை ஏமாற்றி மருத்துவமனையை தன் பெயருக்கு எழுதி வாங்கிக் கொள்கிறார் டாக்டர் எஸ்.ஜே.சூர்யா. மருத்துவத்தை பணம் கொழிக்கும் வியாபாரம் ஆக்கும் திட்டத்தை நித்யாமேனனின் இரண்டாவது பிரசவத்தை சிசேரியனாக மாற்றுவதின் மூலம் பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்குகிறார் எஸ்.ஜே.சூர்யா. அந்த ஆபரேஷனில் நித்யாமேனன் இறந்துவிட, எஸ்.ஜே.சூர்யாவின் திட்டம் தளபதி விஜய்க்கு தெரிய வருகிறது.

பிறகென்ன, தளபதி விஜய்யையும் போட்டுத்தள்ளி விடுகிறார் எஸ்.ஜே.சூர்யா. வடிவேலு ஒரு குட்டி விஜய்யைக் காப்பாற்றி வளர்க்க, இறந்து போனதாகக் கருதப்பட்ட இரண்டாவது குழந்தை விஜய்யை மேஜிக் கலைஞர் ஒருவர் எடுத்து வளர்க்கிறார். இவர்கள் வளர்ந்து ஒருவர் டாக்டராகவும், இன்னொருவர் மேஜிக் கலைஞராகவும் உருவாகிறார்கள். அவ்வளவுதான் ஃப்ளாஸ்பேக். இருவரும் சேர்ந்து எஸ்.ஜே.சூர்யாவை முடிப்பதோடு கதையும் அவ்வளவுதான். 

அடுத்து என்ன நடக்கும் என ரசிகர்கள் எளிதில் யூகித்துவிடக்கூடிய காட்சிகள்தான் படம் முழுவதுமே. ஆனாலும், மொத்தமாக பக்கா கமர்ஷியல் பேக்கேஜ் மூலம் கவர்ந்திருக்கிறார் அட்லீ. சமந்தா விஜய்யை 'டேய்... தம்பி' எனக் கூப்பிடும் காட்சி, 'ரோஸ் மில்க்கா...' என விஜய் குழையும் காட்சி என சமந்தாவுக்கும் விஜய்க்கும் இடையே சில காட்சிகள் மட்டுமே என்றாலும் செம்ம. காஜல் அகர்வாலுக்கு கதையிலும், படத்திலும் பெரிதாக ஸ்கோப் இல்லை. ஏழெட்டுக் கூட்டு, பொரியல்களுக்கு இடையே வைக்கப்பட்ட ஊறுகாயாகத்தான் வருகிறார் காஜல்.

படத்தின் ஒளிப்பதிவாளர் விஷ்ணுவுக்கு இது முதல்படம் என, படத்தைப் பார்க்கும் எவரும் நம்புவது கடினம். ஒவ்வொரு களத்தையும் அதற்கேயுரிய பிரமாண்டம், கலர் டோன் என சிறப்பாகக் காட்சிப் படுத்தியிருக்கிறார். முக்கியமாக, பாடல் காட்சிகளில் மனிதர் புகுந்து விளையாடியிருக்கிறார். படத்தின் பிரமாண்ட லுக்குக்காகவோ என்னவோ, விஜய் வரும் பல காட்சிகளில் கூட்டம் கூட்டமாக மக்கள் இருக்கிறார்கள். அத்தனை பேருக்கு மத்தியில்தான் விஜய் டயலாக் பேசவே ஆரம்பிக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளுக்கு அனல் அரசுவின் படை செம வொர்க் போட்டிருக்கிறது.

தனக்காக கட் அவுட் வைக்கப்போகும் சிறுவனிடம் 'அதெல்லாம் வேணாம். நாலு பேருக்கு அந்தக் காசுல உதவி பண்ணு' எனும் வசனம் ரசிகர்களுக்காகவே சொல்லப்பட்டது என்றாலும் கூட, அந்த வசனத்திற்கு தியேட்டரில் டிக்கெட்டை கிழித்துப் பறக்கவிடுகிறார்களே தவிர, மாற்றத்திற்குத் துளியும் சாத்தியம் இல்லை எனத் தெரிகிறது. ஒரு வகையில் இந்தப் படம் விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கு தூபம் போடுகிற வேலையைப் பார்த்திருக்கிறது என்பதும் தவிர்க்கமுடியாத உண்மையே.

ஆளப்போறான் தமிழன்' பாடல், எம்.ஜி.ஆர் ரெஃபரென்ஸ், மருத்துவத்துறை வியாபாரமாவதற்கு எதிராகப் பேசிய புள்ளிவிபர வசனங்கள், இலவச டி.வி, க்ரைண்டர், மிக்ஸி எல்லாம் இலவசமா கொடுக்குற ஊர் இது... மருத்துவ வசதிகளை இலவசமா கொடுக்க முடியாதா' என எகத்தாள பஞ்ச் பேசுவது, படத்தின் டைட்டில் கார்டு போடும்போது, தலைமைச் செயலக மாதிரிக் கட்டிடத்திற்குள் விஜய் நுழைவது என அரசியல் என்ட்ரியை குறியீடாகவே காட்டியிருக்கிறார்கள். இது ரசிகர்களின் ஆரவாரத்திற்காக மட்டும்தானா அல்லது அவர்களின் பொலிடிக்கல் பல்ஸ் பிடிக்கவா என்பது தளபதிக்கு மட்டுமே வெளிச்சம்.

முதல் படத்திலேயே மிகவும் கவனிப்புக்குள்ளான இயக்குநர் என்பதால் அடுத்தடுத்து இரண்டு படங்களை விஜய்யை வைத்து இயக்கிவிட்டார் அட்லீ. முதல் படமான 'ராஜா ராணி'க்கும், மௌனராகத்திற்குமே இன்னும் தமிழ் சினிமா உலகம் ஆறு வித்தியாசங்களைத் தேடிக் கொண்டிருக்கிறது. இப்போது வெளியாகியிருக்கும் மெர்சல் படத்தை கிட்டத்தட்ட 'அபூர்வ சகோதரர்கள்' படத்தோடு ஒப்பிடலாம். என்றாலும், ஒரு படத்தில் மட்டும் கை வைக்காமல் தமிழில் வெளிவந்த பல படங்களின் ஸ்க்ரிப்ட் பேப்பரில் ஒவ்வொரு தாளையும் உருவியிருக்கிறார் அட்லீ.

ஆனாலும், அவற்றை ரசிகர்கள் விரும்பும் பேக்கேஜாக மாற்றியதுதான் அட்லீயின் வித்தை. பரபரப்பான அரசியல் சூழலில் ரசிகர்களுக்கு அவல்பொரி கொடுக்கும் வகையில் விஜய்யை அரசியல் பேசவைத்து படத்திற்கு வசூலை வாரித்தருகிறார் அட்லீ. யெஸ். விஜய் ரசிகர்களுக்கு 'மெர்சல்' படம் முரட்டு விருந்து.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top