வீட்டடி மற்றும் காலி மனைகளில் கருவேல மரங்களை அகற்றாதவர்களுக்கு அபராதம்!

வீட்டடி மற்றும் காலி மனைகளில் கருவேல மரங்களை அகற்றாதவர்களுக்கு அபராதம்!

மதுரை நகரத்தின் அழகைக் கெடுத்து, கொஞ்ச நஞ்சம் பூமிக்கடியில் இருக்கின்ற நீர்ச்சத்தை உறிஞ்சியும் படுபாதகங்களை நகரத்து மக்களுக்கு இதுகாறும் செய்து வந்த சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டுமென்று உயர்நீதிமன்றம் மாநிலத்தின் அனைத்து நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு உத்திரவிட்டதைத் தொடர்ந்து களத்தில் இறங்கியது மதுரை மாநகராட்சி.

கடந்த ஆண்டு (2016) டிசம்பர் கடைசி முதல் இதுதொடர்பாக மதுரை மாநகராட்சியின் ஆணையர் திரு.சந்தீப் நந்தூரி அவர்களால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் மிகச்சிறந்த பலன் எட்டப்பட்டுள்ளது என்பதை அறிந்து மதுரை மக்கள் மகிழ்ச்சியடையும் நிலை வந்துள்ளது.

மதுரை மாநகரம் ஒருபுறம் சுத்தத்தின் அடிப்படையில் அழகு பெறுவதும் மறுபுறம் வீணான பயனற்ற சீமைக்கருவேல மரங்களால் நீர்ஆதாரம் உறிஞ்சப்படுவதை தடுப்பதும் ஆகிய இரண்டு பலன்கள் ஆணையர் அவர்களின் முழு வீச்சிலான முயற்சிகளினால் மகிழ்வுடன் கிடைக்கப்பெற்றுள்ளன. மேலும், அவர்களுடன் உரையாடிய போது, “மதுரை மாநகர எல்லைக்குள் இருந்துவந்த சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியை ஒரு அவசரகால வேலையாகவே எடுத்துக்கொண்டு பல்வேறு விதத்திலும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டோம்.

மாநகராட்சி சம்பந்தப்பட்ட இடங்கள் அனைத்திலும் காணப்பட்ட அனைத்து சீமைக்கருவேல மரங்களும் மாநகராட்சி ஊழியர்களால் அடியோடு அகற்றப்பட்டுவிட்டன. இந்த பணி மற்றும் சில இடங்களில் இன்னுமும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது. மாநகராட்சி எல்லைக்குட்பட்ட தனியார் இடங்களில் படர்ந்து விரிந்து காணப்படுகின்ற சீமைக்கருவேல மரங்களை சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு அறிவிப்புகள் மூலம் தெரிவிக்கப்பட்டு அவற்றை அகற்றுவதற்கான கெடுவும் 31.01. 2017 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு குறிப்பிட்ட தேதிக்கு முன்பாக, பொதுநலம் கருதி சீமைக்கருவேல மரங்களை அகற்றாத தனியார்கள் இவ்விதத்தில் மாநகராட்சிக்கு அபராதம் கட்ட நேரிடும் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் தனியார்களும் மதுரை மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்து கருவேல மரங்கள் அனைத்தையும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு முன்பாக அகற்றிவிடுவார்கள் என்று முழுமனதுடன் நம்புகின்றேன்.

சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணியானது கடந்த 27.12.2016-ம் தேதி முதலே துவங்கப்பட்டுவிட்டது. என்னுடைய அறிவுறுத்தல்களின்படி மிகப்பரந்த அளவில் இவ்விதத்தில் வேலைகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக, மதுரை மாநகராட்சிக்கு கீழ் 1 முதல் 4 வரையிலான மண்டலங்களில் சாலைப்பகுதிகளிலும், நகரின் உட்பகுதிகளிலும் 79.673 ஹெக்டேர் அளவிலான பரப்பளவில் 221.62 டன்கள் எடையிலான கருவேல மரங்கள் 4.1.2017-ம் தேதியளவில் அகற்றப்பட்டு மதுரை மாநகராட்சியால் இவ்விதத்தில் இதுவரை இல்லாத சாதனை எட்டப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்” எனக் கூறினார் மதுரை மாநகராட்சி ஆணையர் திரு.சந்தீப் நந்தூரி அவர்கள்.

மேலும், அவர், காலக்கெடுவிற்குப் பிறகும் தனியார் வீட்டடி மனை மற்றும் காலி மனைகளில் கருவேலமரங்கள் உள்ளதாக தெரியவந்தால் அவர்களுக்கு கருவேல மரங்களை அகற்றுமாறு நோட்டிஸ் அனுப்பப்படும். அதன்பின்பும் அதற்கான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லையெனில் மாநகராட்சியே, அந்த இடத்தை சுத்தப்படுத்திவிட்டு அதற்கான செலவையும் அதோடு அபராத தொகையாக 500 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரையும் சேர்த்து வசூலிக்கும். என்றார்.

அபராதம் வசூலிக்கப்படும் அளவிற்கு மாநகராட்சியை நிர்பந்தப்படுத்தாமல், நாமே அவர்களுக்கு ஒத்துழைப்பு தந்து நம் பணியை செவ்வனே செய்வோமே!

 

Tags: News, Madurai News, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top