ஜப்பான் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

ஜப்பான் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

இரண்டு நாள் பயணமாக ஜப்பான் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான க்வாட் (Quad) மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று டோக்கியோ சென்றடைந்தார்.
 
அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் பாரம்பரிய உடை அணிந்து கூடியிருந்த ஏராளமான இந்தியர்கள், பாரத் மாதா கி ஜே எனும் கோஷம் எழுப்பி அவரை வரவேற்றனர். அப்போது, அவர்களிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி, பள்ளிச் சிறுவர்களுக்கு ஆட்டோகிராப் வழங்கினார்.
 
இரண்டு நாள் பயணத்தின் முதல் நாளான இன்று ஜப்பான் மன்னர் நருஹிடோவைச் சந்திக்கும் பிரதமர் மோடி, பின்னர் ஜப்பானில் உள்ள பெரும் தொழிலதிபர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதில், Suzuki Motor Corporation, NEC Corporation, Softbank Group Corporation, Uniqlo உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். அப்போது, இந்தியாவில் முதலீடுகளை அதிகரிக்க அவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுக்க உள்ளார்.
 
இதையடுத்து, ஜப்பானில் உள்ள இந்தியர்களை நரேந்திர மோடி சந்திக்க உள்ளார். இதில் ஜப்பானில் உள்ள இந்தியர்கள் அதிக அளவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
 
இந்த பயணத்தின் முக்கிய நிகழ்வான க்வாட் மாநாடு நாளை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில், ஜப்பான் பிரதமர் கிஷிடா, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனிஸ் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
 
இதற்காக ஜோ பைடன் ஜப்பான் வந்துள்ளார். ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள அந்தோணி அல்பனிஸ், இன்று பதவி ஏற்க உள்ளார். பதவி ஏற்று முடித்த உடன் அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து ஜப்பானுக்கு புறப்பட உள்ளார்.
 
இந்த மாநாட்டில், சீனாவால் ஏற்பட்டு வரும் சர்வதேச சவால்களுக்கான பதிலடி, உக்ரைன் மீதான ரஷ்ய போர், பருவநிலை மாற்றம், உணவு பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து முக்கிய விவாதங்கள் நடபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
இந்தோ – பசுபிக் பிராந்திய கடல் பகுதியில் சட்டவிரோதமாக சீனா மீன் பிடித்து வருவதை தடுக்க சிறப்பு செயற்கைக்கோளை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. கடல் பாதுகாப்புக்கான தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த செயற்கைக்கோள் க்வாட் மாநாட்டை ஒட்டி நாளை விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.
 
பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் சீனா அளித்து வரும் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து இந்த மாநாட்டில் ஆலோக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top