கடவுளின் பேரில் மனிதனை மனிதனே பாகுபடுத்தி வாழ்ந்தான்!

கடவுளின் பேரில் மனிதனை மனிதனே பாகுபடுத்தி வாழ்ந்தான்!

கடவுள் இந்த உலகத்தையும், அதில் வாழ்வதற்கென்று மனிதர்களையும் படைத்தார். கடவுளின் படைப்பிலோ, கருணையிலோ எந்தப் பாகுபாடும் இல்லை. கடவுள் மனித இனம் அனைத்தையும் ஒரே மாதிரிதான் பாவித்தார். ஆனால், அவரால் படைக்கப்பட்ட மனிதர்கள் தங்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்திக் கொண்டார்கள். அது ஆண்டவன் கட்டளை என்றார்கள். உயர் சாதி வகுப்பினர் மட்டும் தான் கோயிலுக்குச் செல்ல வேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள் என்று அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர்கள், கோயிலுக்குள் நுழைந்தால் அது தெய்வக் குற்றம் என்று அண்டப்புளுகை அள்ளிவிட்டார்கள். நமது தேசத்தில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில், அவர்களால் அடைந்த துன்பத்தைவிட, சாதிப்பிரிவினை என்ற பாகுபாட்டில், மனிதன் தன் சக மனத இனத்திற்கே செய்த கொடுமைகள் அளவிட முடியாதவை.

அந்த மாதிரி தான் இந்துக்களின் ஆலயங்களில் தாழ்த்தப் பட்டோர் நுழையக் கூடாது என்று அங்கு பூஜை செய்யும் பூசாரிகள் கூறினார்கள். அப்போதெல்லாம் ஆலயங்கள் எதுவும், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. இதனை சாதகமாக்கிக் கொண்டு, ஆலயத்தில் பூஜைகள் செய்யும் பிராமணர்கள் என்ற உயர் ஜாதி வகுப்பினர், அரிஜன மக்களை ஆலயத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லை. ஆனால், இந்த அநீதிக்கு ஒரு முடிவுகட்ட வேண்டும். மனித இனம் அனைவரும் ஒன்றே, என்ற கருத்தை வலியுறுத்தி மதுரையில் பிரம்மஞான சபையில் தாழ்த்தப்பட்டவர்களை அழைத்துக் கொண்டு ஆலயப் பிரவேசம் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். அதனை நிறைவேற்ற பிராமணரான வைத்தியநாத அய்யர் அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தனர்.

இதற்கு அவரது சமூக அமைப்பைச் சேர்ந்தவர்களே கடுமையாக எதிர்த்தார்கள்.  மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்த பட்டர்களும் இதனைக் கடுமையாக ஆட்சேபித்தார்கள். அவர்களில் சாமிநாத பட்டர் என்பவர் மட்டும் ஆதரவு தந்தார். இதனால் வைத்தியநாத அய்யர் மற்றும் சாமிநா பட்டர் ஆகியோரின் குடும்பங்களை சாதி விலக்கம் செய்தனர் அவர்களது சமூகத்தினர். ஆனாலும், ஆலயப் பிரவேசம் நடத்துவதில் வைத்தியநாத அய்யர் உறுதியாக இருந்தார். இதற்கு முழு ஒத்துழைப்பும் தந்து ஆலயப் பிரவேசம் நடத்த உறு துணையாய் இருந்தவர்களில் மிக முக்கியமானவர் முத்துராமலிங்கத் தேவர். 8-7-1939- அன்று, ஆயிரக்கணக்கான மக்கள் ஆலயப் பிரவேசம் செய்யத் தயாராய் இருந்தார்கள். ஆனால், கோயில் பட்டர்கள் ஆலயத்தின் வாசலை மறித்துக் கொண்டு நின்றிருந்தனர். முத்துராமலிங்கத்தேவர், கக்கன், என்.எம்.ஆர். சுப்புராமன், ஆவலம்பட்டி முருகானந்தம், பூவலிங்கம், சண்முக நாடார் போன்றோர் அவர்களிடம் சென்று பேசிப் பார்த்தனர். பட்டர்கள் மசியவில்லை.

உடனே, முத்துராமலிங்கத்தேவர், வைத்தியநாத அய்யரை அழைத்து, 'நீங்கள் எல்லோரையும் அழைத்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லுங்கள். நான் இவர்களைப் பார்த்துக் கொள்கிறேன். என்னை தடுக்க தைரியம் உள்ளவர்கள் என் முன்னால் வரலாம் என்று அறை கூவல் விடுத்தார். அவரை யாரால் எதிர்க்க முடியும்? பட்டர்கள் பயந்துபோய் வழிவிட்டனர். வைத்தியநாத அய்யர் கோயிலின் தெற்கு வாயில் வழியாக அனைவரையும் அழைத்துக் கொண்டு ஆலயத்திற்குள் நுழைந்தார். சாமிநாத பட்டர் தீபராதனை காட்ட அனைவரும் தெய்வ தரிசனம் செய்துவிட்டு கிழக்கு வாசல் வழியாக வெளியே வந்தனர்.

ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்டோர் ஆலயப் பிரவேசம் செய்தனர். அவர்கள் சென்ற பின்னர், கோயில் தீட்டுப்பட்டு விட்டதாக மற்ற பட்டர்கள் அனைவரும் ஆலயத்தைப் பூட்டி விட்டனர். ஐதீகத்தை மீறி விட்டதாக நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கும் தொடரப்பட்டது.

ஆனால், அதற்குள் 11.7.1939 - அன்று சென்னை மாகாண முதல்வர் ராஜாஜி, தாழ்த்தப்பட்டவர்கள் ஆலயத்திற்குள் செல்லலாம் என அவசரச் சட்டம் பிறப்பித்தார். தெய்வத்தைக் காரணம் காட்டி, மனிதனை மனிதன் பேதம் பார்த்த இந்தப் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி மதுரையில் வைக்கப்பட்டது.

Tags: News, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top