சுபீட்சத்தை அள்ளித்தரும் அட்சய திரிதியை!

சுபீட்சத்தை அள்ளித்தரும் அட்சய திரிதியை!

அட்சயம் என்றால் அளவின்றி பெருகுதல் என்று பொருள்படுகின்றது. இந்த அட்சயத்திருதியை நன்னாளில் நல்லவை நயம்பட நாளும் வளர்தல் வேண்டும் என்பதே எல்லோரினதும் விருப்பமாகும்.

குறிப்பாக ஒரு வழக்கமாக கொள்ளப்பட்ட முறையில், பெண்கள் அட்சயத் திருதியை திதியில் விலை உயர்ந்த மற்றும் மங்களகரமான பொருட்களை சேர்த்திட விரும்புகின்றார்கள். 2017-ம் ஆண்டில் அட்சயத் திருதியை ஏப்ரல் 29-ம் திகதி சனிக்கிழமையன்று வருகின்றது. சாஸ்திரங்களின்படியும் மற்றும் புராண வரலாறுகளின்படியும் அட்சயம் என்றால் வளருதல் என்றும், அள்ள அள்ள குறையாதது என்றும் அறியப்பட்டுள்ளது. அட்சயப்பாத்திரத்தைப் போல, அன்றைய தினம் செய்கின்ற எந்தவொரு நல்ல காரியமும் தடையின்றி வளர்ந்து கொண்டேயிருக்கும், வெற்றிக்கரமாக நடந்து முடியும் என்பது வேதவாக்காகும்.

புராண கதைகளிலும், அட்சய திருதியையின் சிறப்புக்கள் பற்றியும் பெருமைகள் பற்றியும் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளன. ஸ்ரீ கிருஷ்ணரின் பால்ய நண்பர் குசேலன் வறுமையில் வாடுகிறார். வறுமையிலிருந்து நீங்கப்பெற்று சுபிட்சம் பெற்றிட குசேலர் ஸ்ரீ கிருஷ்ணரை உதவி கேட்டு வரலாம் என சந்திக்கச்செல்கின்றார். அப்படிச்செல்லும் போது தமது மேலாடையில் ஒரு பிடி அவலை முடிந்து கொண்டு செல்கின்றார். தனது பால்ய நண்பராகிய குசேலரை நன்கு உபசரித்த கிருஷ்ண பரமாத்மா அவர் அன்போடு கொண்டு வந்த அவலை ஆசையோடு வாயில் எடுத்து போடுகிறார். நட்பு மற்றும் உண்மையான அன்பு கலந்த அவலின் ருசியில் மகிழ்ந்துபோன கிருஷ்ணர், “அட்சயம் உண்டாகட்டும்” என்று வாழ்த்தி குசேலரை வழியனுப்பி வைக்கின்றார். 

முன்னதாக இரண்டாவது கவளமாக ஒரு பிடி அவலை கிருஷ்ணர் மீண்டும் எடுத்து வாயில் போடுவதை மகாலட்சுமியின் அம்சமான ருக்மணிதேவி தடுத்து விடுகின்றாள். அதற்குரிய காரணத்தை கிருஷ்ணர் கேட்டபோது, “அன்புடன் கொடுத்த அவலை ஒரு பிடி தின்றதற்கே குசேலனின் குடிசை வீட்டை மாடமாளிகையாக மாற்றி சகல ஐஸ்வர்யங்களையும் வழங்கிவிட்டீர்கள். இனியும் ஒரு பிடி அவலை சாப்பிட்டிருப்பீர்களேயானால் நானே குசேலன் வீட்டிற்கு போய்விட வேண்டியது தான்” என்று சிரித்தப்படி கூறினாள் ருக்மணிதேவி.

குசேலன் கேட்காமலேயே அவருக்கு அனைத்து ஐஸ்வர்யங்களையும் செல்வச்செழிப்பையும் கொடுத்து அருளியவர் கண்ணன். வீடு திரும்பிய பின்புதான் இவையனைத்தும் குசேலருக்கு தெரிய வருகின்றது. கண்ணனின் அசாத்திய கருணை ததும்பும் அன்பை நினைத்து மனம் பூரித்தார் குசேலர். குசேலருக்கு எல்லா ஐஸ்வர்யங்களும் கிடைத்த தினமே அட்சயதிருதியை. இந்த நாளில் லட்சுமி குபேர பூஜை செய்வது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகின்றது. அட்சயத்திருதியை தினத்தில் தங்க வைர நகைகள் மற்றும் விலையுர்ந்த பொருட்கள் வாங்குவது மட்டுமே சிறப்பு என்ற தவறான கருத்து வளர்த்து விடப்பட்டுள்ளது. வசதி படைத்த தனவந்தர்கள் உயர்ந்த ஆபரணங்களை வாங்கலாம். மற்றையோர் தமது பொருளாதார நிலைக்கேற்ப சாதாரண, உபயோகமான, மங்களகரமான பொருட்களை வாங்கலாம். வீட்டிற்கு தேவையான அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள், மங்கள காரியங்களுக்கான தேவையான பொருட்கள், புதிய தொழில் தொடங்குவதற்கு தேவையான கருவிகள், சாதனங்கள் ஆகிய எதை வேண்டுமானாலும் வாங்கலாம்.

அனைத்து சுபகாரியங்களுக்கும் இந்த நல்ல நாளில் பிள்ளையார் சுழிபோடவும் செய்யலாம். புது கணக்கு ஆரம்பித்தல், வங்கியில் பணம் செலுத்துதல், கல்வி துவக்குதல், விரதம் ஆரம்பித்தல், புகழ்பெற்ற கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வருதல், சொந்தபந் தங்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்தினருக்கு விருந்தளித்து பரிசுகள் வழங்குதல், கஷ்டப்படுவோருக்கு உதவி செய்தல், அன்னதானம். தானதருமங்கள் முதலியவற்றை செய்தல் ஆகிய அனைத்தும் விசேடமானவையாகும். இதில் முக்கியமானதாக, நோயாளிகளுக்கு அட்சய திருதியை அன்று நேரில் சென்று உதவிகள் செய்வது மிகச் சிறந்த தர்மமாக சொல்லப்படுகின்றது. இல்லாதோர், இயலாதோர் ஆகியவர்களுக்கு அவர்களின் தேவை அறிந்து உதவிகள் செய்தால் அது உத்தமான பலன்களை தந்திடும் என நம்பப்படுகின்றது.

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top