கொரோனாவிற்கு பின்னரான முடி உதிர்தல் தற்காலிகமானதா..?

கொரோனாவிற்கு பின்னரான முடி உதிர்தல் தற்காலிகமானதா..?

‘கொரோனாத் தொற்று பாதிப்பிற்குப் பின்னர் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஏற்படும் தலைமுடி உதிர்தல் பிரச்சனை, இயல்பான அளவைவிட எட்டு சதவிகிதம் அதிகரித்திருப்பதாக அண்மைய ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக தற்போது இயல்பான அளவை விட கூடுதலானவர்கள் தலைமுடி உதிர்தல் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். ஆனால் முறையான ஆலோசனை மற்றும் சிகிச்சையை மேற்கொண்டால் இதிலிருந்து விடுபடலாம்.’ என்ற தகவலை பகிர்ந்து கொண்டே எம்முடன் பேசத் தொடங்குகிறார் டாக்டர் தீப்தி, M. MBBS., DDVL., Dermatalogist & Cosmetologist சென்னையைச் சேர்ந்த. இவரிடம் கொரோனாத் தொற்றிற்குப் பின்னர் ஏற்படும் தலைமுடி உதிர்விற்குரிய தீர்வு என்ன? என்பது குறித்து விளக்கமளிக்குமாறு கேட்டோம்.

கேள்வி: கொரோனாத் தொற்றுக்கு பின்னரான தலைமுடி உதிர்வு அதிகரித்திருக்கிறதே ஏன்?
 
பதில்: பொதுவாகவே எம்மில் பலருக்கும் நாளாந்தம் முடி உதிர்தல் என்பது நடைபெறும். ஒரு குறிப்பிட்ட சதவீத அளவிற்கு முடி உதிர்வு சுழற்சி என்பது நடைபெற்றுக் கொண்டே இருக்கும். இதுகுறித்து அனைவரும் பல விடயங்களை தெரிந்து கொண்டிருப்பர். ஆனால் கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு ஆண், பெண் என அனைவருக்கும் இருமல், காய்ச்சல்,சமச்சீரற்ற இதயத்துடிப்பு, நெஞ்சு வலி, தலைவலி... போன்ற பல பக்க விளைவுகள் ஏற்படுவது போல், தலைமுடி உதிர்தலும் சிலருக்கு  பக்கவிளைவாக ஏற்படுகிறது. அதே தருணத்தில் இயல்பான நிலையில் ஏற்படும் Hair Loss எனப்படும் முடிஉதிர்தல் பிரச்சனைக்கும், கொரோனாத் தொற்றின் காரணமாக ஏற்படும் முடி உதிர்தல் பிரச்சனைக்கும் வித்தியாசம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் இதன் போது ஏற்படுவது Hair Shedding எனப்படும் முடி உதிர்தல் பிரச்சனை மட்டும் தான்.  அதனால் இந்த பாதிப்பு தற்காலிகமானது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். மூன்றிலிருந்து ஆறு மாதங்களுக்குள் இந்த முடி உதிர்தல் பிரச்சனை, தானாக சரியாகிவிடும். ஆனால் இந்த தருணத்தில் உங்களது வாழ்க்கை முறையை மருத்துவர்களின் அறிவுரை மற்றும் வழிகாட்டலின் படி அமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். முடி உதிர்தல் பிரச்சனைக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஊட்டச்சத்துள்ள உணவு பழக்கம், உடற்பயிற்சி, ,ஆரோக்கியமான மனநிலை... என இந்த மூன்று விடயங்களிலும் தீவிரமாக கவனம் செலுத்தினால் இந்தப் பிரச்சனைக்கு உரிய தீர்வு காண இயலும்.
 
கேள்வி: ஹேர் லாஸ்= ஹேர் ஷெட்டிங் என்ன வித்தியாசம் என்பதை மருத்துவ ரீதியாக விளக்கம்?
 
பதில்: இதற்கான விடையை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்றால், முதலில் முடி வளர்ச்சியின் சுழற்சி முறையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். தலையில் உள்ள வேர்க்கால் பகுதியிலிருந்து முடி ஐந்து நிலைகளில் உருவாகி, உற்பத்தியாகி, வளர்ச்சியடைந்து பிறகு உதிர்கிறது. இதன்போது தலைமுடிக்கு ஊட்டச்சத்து, விற்றமின் சத்து, ஆரோக்கியமான மனநிலை ஆகியவை முக்கிய காரணிகளாக திகழ்கின்றன. பொதுவாக பெண்கள் கருத்தரித்திருக்கும் தருணங்களிலும், பிரசவிக்கும் தருணங்களிலும் தலைமுடி உதிர்வை எதிர்கொள்வார்கள். சிலருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டாலோ.,, உடல் சுகவீனம் அடைந்தாலோ அல்லது சத்திரசிகிச்சை செய்து கொண்டாலோ.. தலைமுடி உதிர்தல் பிரச்சினை ஏற்படும். அதே தருணத்தில் குறைந்த கால அவகாசத்தில் திடீரென்று உடல் எடையை, குறிப்பிட்ட அளவைவிட அதிகமாக குறைந்தாலோ அல்லது குறைத்தாலோ தலைமுடி உதிர்தல் ஏற்படும். வேறு சிலருக்கு இயல்பான மற்றும் ஆரோக்கியமான மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டாலும் அவர்களுக்கும் தலை முடி உதிர்வு பிரச்சனை ஏற்படும். இவைகள் அனைத்தும் ஹேர் ஷெட்டிங் எனப்படும் தற்காலிக முடி உதிர்வைக் குறிக்கும். இதனை மருத்துவ மொழியில் Telogen Effluvium என வகைப்படுத்துவர். ஒரு சிலருக்கு மட்டுமே அதாவது 10 சதவீதத்தினருக்கு மட்டுமே இது நாட்பட்ட பிரச்சனையாக மாறி முடி உதிர்தல் அதாவது ஹேர்லாஸ் என்ற பிரச்சனையாக மாற்றம் பெறும். இவர்கள் மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சை பெற்றால், இதற்குரிய முழுமையான நிவாரணத்தை பெற இயலும்.
 
கேள்வி : Telogen Effluvium என்றால் என்ன?
 
பதில்: Anagen, Exogen, Telogen, Catagen, Anagen என ஐந்து நிலைகளில் தலைமுடி வளர்ச்சியின் சுழற்சி இருக்கிறது. ஒவ்வொரு நிலைப்பாட்டிலும் தலைமுடிக்கு குறிப்பிட்ட கால அவகாசம் உள்ளது. இந்நிலையில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் போது, உடலுக்கு புரத சத்து அதிகம் தேவை என்பதால், எம்முடைய உடலிலுள்ள நோயெதிர்ப்பு மண்டலம், தலைமுடி வளர்ச்சிக்கு தேவையான புரதச் சத்தை போதிய அளவிற்கு அனுப்பாமல், அதனை உறைநிலையில் வைத்துவிட்டு, கொரோனா எதிர்ப்புக்காக புரதச்சத்தை பயன்படுத்திக் கொள்ளும். இதன் காரணமாக தலைமுடி, அதன் இயல்பான வளர்ச்சியை அடையாமல், மூன்றாம் நிலையான Telogen நிலைக்கு சென்றுவிடும். இதன்போது கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அந்த தொற்றின் காரணமாக ஏற்படும் சமச்சீரற்ற உளவியல் காரணிகளால் தலைமுடி உதிர தொடங்குகிறது. பொதுவாக நாள் ஒன்றுக்கு 50 லிருந்து 100 எண்ணிக்கை வரையிலான முடிஉதிர்தல் நடைபெறும் என்றால், இதன் போது சற்று கூடுதலாக  முடி உதிர்வு இருக்கும். கொரோனாத் தொற்று பாதிப்பிலிருந்து ஒருவர் உற்சாகமான மன நிலைக்கு மாற்றம் பெற்ற பின் மீண்டும் தலைமுடி வளர்ச்சி சுழற்சி இயங்கத் தொடங்கி, தலை முடி உதிர்வு நின்றுவிடும். சிலருக்கு இந்த சுழற்சி மீண்டும் இயல்பாக அளவில் ஏற்பட ஆறு மாத காலத்திலிருந்து 8 மாத காலம் வரை நடைபெறலாம்.
 
கேள்வி: ஆறு முதல் எட்டு மாத காலம் வரை தொடர்ந்து முடிஉதிர்தல் தொடர்ந்து நடைபெறும் என்றால்... தலையில் முடி இருக்குமா..?அது மனதளவில் பாதிப்பு உருவாக்கிவிடுமே..?
 
பதில்: இந்த முடி உதிர்தல் தற்காலிகமானவை என்பதாலும், மீண்டும் முடி ஆரோக்கியமாக வளரும் என்பதாலும் இது குறித்து கவலை அடைய தேவையில்லை. ஏனெனில் Telogen என்ற நிலையில் உங்களின் ஒட்டுமொத்த தலைமுடியின் எண்ணிக்கையில் 10 முதல் 15 சதவீதம் வரை மட்டுமே இருக்கும். இத்தகைய காலகட்டங்களில் முடி வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. கொரோனா பெருந்தொற்று என்பதால் இதனை எதிர் கொள்ளும் பொழுது எமக்குள் உண்டாகும் பயம், பதற்றம், கவலை போன்ற பல உளவியல் காரணங்களால் தலைமுடி உதிர்வு என்பது சற்று கூடுதலாக ஏற்படுகிறது என்பதை நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். இதன் காரணமாக மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதன் மூலமும் முடி வளர்ச்சியை உறுதிப்படுத்தலாம். மேலும் இது குறித்த சந்தேகம் ஏதேனும் இருந்தால் 0091 8580845721 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
 
சந்திப்பு: அனுஷா

 

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top