வாய் எரிச்சல் பாதிப்பை நீக்கும் புதிய சிகிச்சை!

வாய் எரிச்சல் பாதிப்பை நீக்கும் புதிய சிகிச்சை!

விருந்துகளுக்கோஅல்லது நண்பர்களின் இல்லத்திற்கோ விருந்தினராக சென்றிருக்கும் தருணங்களில், பசியாற பரிமாறப்பட்டிருக்கும் சில புதிய உணவு வகைகளை சாப்பிடும் போது, அதிக காரத்தினால் சிலருக்கு வாயில் எரிச்சல் ஏற்படக்கூடும். தற்காலிகமாக தோன்றும் இத்தகைய வாய் எரிச்சல், சிலருக்கு திடீரென்று ஏற்பட்டு, நாட்கணக்கில் தொடர்ந்தால் எவ்வாறு இருக்கும்...? இத்தகைய பாதிப்பிற்குரிய மருத்துவ சிகிச்சை குறித்து தெரிந்து கொள்வதற்காக டாக்டர் மணிமாறன், M.D., D.M., Gastroenterologist அவர்களை சந்தித்தோம்.

வாய் பகுதியில் எரிச்சல் ஏற்படுவது ஏன்? சிலருக்கு அவை மாதக்கணக்கில் தொடர்கிறதே ஏன்..?
 
இன்றைய திகதியில் உலகம் முழுவதும் ஏறத்தாழ பத்து மில்லியன் மக்கள் இத்தகைய பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். இதற்கு மருத்துவத்துறையில் வாய் எரிச்சல் என்றும், ஆங்கிலத்தில் பர்னிங் மௌத் சிண்ட்ரோம் ( Burning Mouth Syndrome) என்றும் குறிப்பிடுவார்கள். இத்தகைய பாதிப்பு பெரும்பாலானவர்களுக்கு தற்காலிகமானதாக ஏற்படுகிறது. சிலருக்கு மட்டும் இதன் பாதிப்பு நீடிக்கிறது. இந்த பாதிப்பு ஆண், பெண் என இரு பாலினத்தவருக்கும், எந்த வயதிலும் ஏற்படக்கூடும். இருப்பினும் 45 வயதுக்கு மேற்பட்ட பெருன்பான்மையான பெண்களுக்கு தான் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு உரிய தருணத்தில் சிகிச்சை பெற வேண்டும். தவறினால் சுவை உணர்வை இழக்க நேரிடும். இந்த பாதிப்பு நாக்கு, மேலண்ணம், பற்கள், உமிழ்நீர் சுரப்பி, உதடு.. ஆகிய பகுதிகளையும் பாதிக்கக்கூடும். சிலருக்கு நாவறட்சி, சுவை மாற்றம், எதையும் சாப்பிட முடியாத நிலை, இதன் காரணமாக தூக்கமின்மை பாதிப்பு ஏற்பட்டு, மனநல ஆரோக்கியத்தில் சமச்சீரற்ற தன்மையும் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
 
இதற்கு என்னென்ன அறிகுறிகள் தோன்றும்..?
 
வாய்ப் பகுதி முழுவதும் அல்லது நாக்கில் எரிச்சல் ஏற்படும். இவை உதடுகளில் கூட பரவும். இதனால் நா வறட்சி அதிகமாகி, தண்ணீர் அருந்த வேண்டும் என்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கும். சிலருக்கு எத்தகைய உணவினை வழங்கினாலும் சுவை இல்லை என்பர். நாக்கு பகுதியும், வாய்ப்பகுதியிலும் சிவந்து காணப்படும். சிலருக்கு நீர்க்கட்டு ஏற்படும். சிலருக்கு எந்தவித அறிகுறியையும் வெளிப்படுத்தப்படுத்தாது.

என்னென்ன காரணங்களால் இவை ஏற்படுகிறது?
 
எம்முடைய வாய்ப்பகுதியில் உள்ள உமிழ்நீர் சுரப்பிகளின் செயல்பாட்டில் சமச்சீரற்ற தன்மை, பாக்டீரியா தொற்று, ஒவ்வாமை, வாய் உலர்ந்து போதல், பற்களின் அமைப்பு மற்றும் செயல்பாடு, ஊட்டச்சத்து குறைபாடு, குறிப்பாக விற்றமின் பி9, விற்றமின் பி1, விற்றமின் பி2, விற்றமின் பி6, விற்றமின் பி 12 மற்றும் இரும்புச்சத்து உள்ளிட்ட சில சத்துக்குறைபாடுகள், GERD எனப்படும் நெஞ்செரிச்சல் அல்லது உணவு எதுக்களித்தல், வாய் பகுதியில் உள்ள நாளமில்லா சுரப்பிகளின் செயல்படும் தன்மையில் உண்டாகும் சமச்சீரற்ற நிலை, கோபம், பதட்டம் போன்ற உளவியல் காரணிகள் என பல்வேறு காரணங்களால் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். சிலருக்கு இத்தகைய பாதிப்பு ஓராண்டு வரை கூட நீடிக்கும். சிலருக்கு அண்மையில் ஏற்பட்ட காய்ச்சலின் காரணமாகவும் இவை ஏற்படும். பற்கள் மற்றும் வாய் சுகாதாரத்திற்காக ஏதேனும் மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் மேற்கொண்டிருந்தால், அதன் பின் விளைவாக கூட இந்தப் பாதிப்பு ஏற்படலாம். நெருக்கமான உறவுகளின் திடீர் உயிரிழப்பின் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படலாம். இதற்கு சிகிச்சை பெறாவிட்டால் உணவு உட்கொள்வதில் ஏற்றத்தாழ்வு, தூக்கமின்மை பாதிப்புகள் ஆகியவை ஏற்பட்டு, இதன் காரணமாக உள நலம் பாதிக்கப்படக்கூடும்.
 
வாய் எரிச்சலை எத்தகைய பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்துவார்கள்..?
 
வாய் எரிச்சல் பாதிப்புள்ள நோயாளிகளுக்கு முதலில் அவர்களின் குடும்ப மருத்துவ வரலாறு, ரத்த பரிசோதனை, பற்களின் செயல்பாட்டு பரிசோதனை, ஒவ்வாமைக்கு உரிய பரிசோதனை, Siolometry எனப்படும் உமிழ்நீர் சுரப்பியின் செயல்பாடு குறித்த பரிசோதனை, GERD பாதிப்பு குறித்த பரிசோதனை உள்ளிட்ட பல பரிசோதனைகளுடன், சில உளவியல் சோதனைகளையும் மேற்கொண்டு இதன் பாதிப்பை உறுதிப்படுத்துவர். வேறு சிலருக்கு ரத்த அழுத்த பரிசோதனை மற்றும் ரத்த சர்க்கரையின் அளவு குறித்த பரிசோதனையும் மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்துவர். 

இதன் பாதிப்பை கட்டுப்படுத்தும் சிகிச்சை குறித்து ‌.?
 
முதல் நிலை பாதிப்பு என்றால் அவை சில வாரங்களில் தானாக சரியாகி விடும். இரண்டாம் நிலை என்றால், இத்தகைய பாதிப்பை தூண்டும் காரணிகளை கண்டறிந்து, அதனை கட்டுப்படுத்தும் சிகிச்சையை மருத்துவர்கள் வழங்குவார்கள். மது அருந்தும் பழக்கம் கொண்டவர்களாக இருந்தால் அதனை முற்றாக தவிர்க்க வேண்டும். புகை பிடிப்பதையும் தவிர்க்க வேண்டும். காரமான உணவு, சூடான திரவங்கள், குளிர்பானங்கள் ஆகியவற்றை அருந்துவதை குறைத்துக்கொள்ள வேண்டும். ஊட்டசத்து குறைபாடு காரணமாக பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அதனை நிவர்த்தி செய்வதற்கான மருந்துகளை மருத்துவர் பரிந்துரைப்பர். சிலருக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படுவதற்கு ஓராண்டுகள் ஆகலாம். அதேபோல் இத்தகைய பாதிப்பை பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்திக்கொண்ட பின்னர், இந்த பாதிப்பைக் கட்டுப்படுத்த ஓராண்டு அல்லது இரண்டு ஆண்டு வரை கூட சிகிச்சையை தொடர வேண்டியதிருக்கும். மேலும் இதற்கான உளவியல் சிகிச்சையை அவசியம் பெற வேண்டியதிருக்கும். உமிழ்நீர் சுரப்பியில் ஏதேனும் பாதிப்பு கண்டறியப்பட்டால், அதற்குரிய சத்திர சிசிச்சையற்ற சிகிச்சை அல்லது சத்திர சிகிச்சையை மேற்கொண்டு, இவற்றை கட்டுபடுத்தலாம். இதனைக் கடந்தும் வாயில் எரிச்சல் இருந்தால் மருத்துவர்கள் பிரத்தியேக மருந்தினை வழங்குவர். அதனை பயன்படுத்தி வாய் கொப்புளித்த பிறகு துப்பினால் வாய் எரிச்சல் கட்டுப்படும். மேலும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 044 4385 1002 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
 
சந்திப்பு: அனுஷா

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top