நல்ல கதை அமையும்போது மீண்டும் ஒரு படம் இயக்குவேன் – அழகம் பெருமாள்!

நல்ல கதை அமையும்போது மீண்டும் ஒரு படம் இயக்குவேன் – அழகம் பெருமாள்!

தரமணி திரைப்படத்தில் “பர்னபாஸ்“ என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்ற நடிகர் அழகம் பெருமாளின் தன்னுடைய அனுபவங்களை பற்றி கூறியது! ரொம்ப நாளைக்கு அப்பறம் தரமணி திரைப்படத்தில் நான் நடித்துள்ள பரண்பாஸ் கதாபாத்திரம் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

“பரண்பாஸ் வாக்கு, பைபிள் வாய்க்கு லே“ என்ற வசனம் இப்போது பிரபலம். இந்த படத்தை பொருத்தவரை இயக்குநர் ராம் ஒவ்வொரு காட்சிகளுக்கும் 4 நடிகர்களை நடிக்க வைத்து கருத்து சொல்லுறமாதிரி நீளமான காட்சியா இல்லாம போறபோக்குல நம்ம மனச தொடுற மாதிரி சொல்லிட்டு போறது எனக்கும் படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்திருந்தது.

இப்போது ட்ரோல் மற்றும் மீம்ஸ் தான் உலகம் என்றாகிவிட்டது. எல்லாம் போராடி போராடி பாத்துட்டாங்க விளைவுகள் ஒன்னும் நடக்கமாட்டேன்குது. படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளும், வசனங்களும் மீம்ஸ் மற்றும் ட்ரோல் போல் அமைந்துள்ளது. ராம் என்னிடம் கதை சொல்லும் போது இந்த காட்சிகள் இவ்வளவு ஸ்ட்ராங்காக வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. சமூகத்துக்கு தேவையான கருத்து சொல்றேன் என்று எல்லாரும் உட்கார்ந்து ஒப்பாரி வச்சு சென்டிமெண்டா திரும்ப திரும்ப இந்த விஷயங்களை பேசி ஒன்னும் நடக்கப்போவது கிடையாது. அதை யாரவது பிரேக் செய்ய வேண்டும் என்று விரும்பினேன் அதை இயக்குநர் ராம் உடைத்துவிட்டார்.

இப்போது மாற்று சினிமாவுக்கான காலம் வந்தாச்சு, எவ்வளவு நாள் தான் ஒரே படத்தை போட்டு பார்த்து பார்த்து ஒரு பார்மலாவுக்குலேயே சிக்கிக்கொண்டுடிருப்பது?? எனக்கு கடைசி வரை தெரியாது ராம் தரமணியில் இப்படி ஒரு முயற்சியை தான் படத்துக்குள் கொண்டுவர போகிறார்னு. என் கேரக்டர் இதான்னு சொன்னாரு ஷூட்டிங் போனேன், நடிச்சி கொடுத்தேன். பிறகு படமா பார்க்கும்போது தான் தெரிகிறது இயக்குநர் ராமின் வாய்ஸ் மிக பெரிய அளவில் படத்துக்கு உதவியிருக்கு. அது ஒரு ஆரோக்கியமான வரவேற்க வேண்டிய விஷயமாகும்.

இப்போ ஒரு ஆறு ஏழு படம் புதியதலைமுறை இளம் இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றுகிறேன். இப்போ என்ன பிரச்சனைனா படத்துக்கு டைட்டில் வைப்பதே கிடையாது. மனோஜ் என்று புதிதாக ஒரு இயக்குநர் அமெரிக்காவில் இருந்து வந்து அவரே படத்தை இயக்கி, தயாரிக்குறார், அவரே எல்லாவற்றையும் பண்றார் கேமராமேன் கூட அமெரிக்காவில் தன் கூட படிச்சவரையே கூட்டிட்டு வந்து இந்த D16 படம் மாதிரி புதுசா முயற்சி பண்றாங்க. அடுத்தது இயக்குநர் செல்வராகவன் மற்றும் நடிகர் தனுஷ் “புதுப்பேட்டை 2“ பண்ணுற முயற்சில இருக்குறாங்க. அது நடந்தால் எனக்கும் அதில் முக்கிய ரோல் இருக்கும் என்று நினைக்கிறன். ஜி. வி. பிரகாஷ் உடன் ஒரு படம் போயிட்டு இருக்கு.

எல்லா வித கேரக்டரும் பண்ணுறேன். அப்பானா அப்பா கதாபாத்திரம், வில்லனா வில்லன், இப்படி தான் நடிப்பேன் அப்படித்தான் நடிப்பேன்னு இல்லாம எந்த கதாபாத்திரத்தில் நடிச்சாலும் அதுல நம்ம விஷயத்தை சரியா பண்ணனும் என்பது என்னுடைய விருப்பம்.

இதில் கன்னியாகுமரி தமிழ் எனக்கு ஒரு ப்ளஸ், இருந்தாலும் எல்லாருக்கும் புரிதல் அவசியம் என்பதால் கொஞ்சம் காம்ப்ரமைஸ் பண்ணிகிட்டேன். ஏனென்றால் தரமணி படத்தை பொருத்தவரை நிறைய விஷயங்கள் எமோஷனலா சொல்லுறோம் எல்லா ஆடியன்ஸ்க்கும் புரியாம இருக்கக்கூடாது என்பதால் கொஞ்சம் சினிமா தமிழும் கலந்துகிட்டேன். இருந்தாலும் சொல்லவரும் விஷயத்தை நாம் அந்த ஸ்லாங்கில் புரியும்படி சொல்ல வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். இந்த படத்தில் எனக்கு நல்ல கேரக்டர் அமைந்துள்ளது இதை நிறைய பேர் பார்த்திருக்கிறார்கள், சில ஆடியன்ஸ் பேஸ்புக்குல பரண்பாஸ் கேரக்டரை பொறுத்தவரை நீங்க கலக்கிட்டீங்கனு சொல்லி இருந்தாங்க. கேக்கும் போது பெருமையாக இருந்தது.

நானும் ஒரு சரியான படத்தை பண்ணிட்டு தான் நண்பர்களை சந்திக்கணும்னு தள்ளி போட்டுக்கிட்டே இருந்தேன். ஏன்னா முன்னாடி நிறைய படங்களில் நடித்தேன், அந்த படங்கள் நன்றாக அமைந்தும் மக்களிடம் அது சரியா போய் சேரவில்லை. அதுக்கு உண்டான காரணங்களை பேசுறத விட, வேலூர் மாவட்டம்னு ஒரு படம் பண்ணேன், அதுல முழுநீள வில்லன் பாத்திரம். படம் சரியாக மக்களிடம் போய் சேராததால் எனக்கான அங்கீகாரம் பெரிதாக கிடைக்கவில்லை. இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சி. இயக்குநர் ராமுக்கு நன்றி.

பிலிம் இன்ஸ்டிடியுடில் படித்து முடித்து 1989 ல் இயக்குநர் மணிரத்தினம் அவர்களிடம் நான் உதவி இயக்குநராக பணியாற்ற துவங்கினேன். நான் உதவி இயக்குநராக பணியாற்றிய முதல் திரைப்படம் “தளபதி“. பணியாற்றிய முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மம்மூட்டி என்று மிகப்பெரிய ஜாம்பவான்கள் இருந்த படம் அது. அப்போது ஆரம்பித்து இப்போது வரை இயக்குநர் மணிரத்தினத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறேன், அவரோடு பணியாற்றியும் வருகிறேன். மணிரத்னம் சாரின் குரு படத்துக்கு நான் தான் தமிழில் வசனம் எழுதினேன். மேலும் ரோஜா, பாம்பே, கடல் போன்ற படங்களில் இடம்பெற்ற திருநெல்வேலி, நாகர்கோவில் வட்டார தமிழ் வசனங்களுக்கு நான் தான் பொறுப்பு. விஜய், சிம்ரன் நடித்த உதயா படத்தை இயக்கினேன் அந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹமான் இசை. பின்னர் மணிரத்னம் சார் தயாரித்த ”டும் டும் டும்“ படத்தை இயக்கினேன். படம் வெற்றி பெற்று எனக்கு நல்ல பெயரை வாங்கிதந்தது. இப்போது நடித்து வருகிறேன். மீண்டும் எப்போது படம் இயக்குவீர்கள் என்று எல்லோரும் கேட்கிறார்கள். இவ்வளவு நாள் படம் இயக்காமல் கேப் விழுந்துவிட்டது. அதற்கு எல்லாம் பதில் செல்லும் வகையில் நல்ல கதையோடு ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன் என்றார் நடிகர் அழகம் பெருமாள்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top