கழுத்து வலிக்கு முழுமையான நிவாரணமளிக்கும் பிஸியோதெரபி

கழுத்து வலிக்கு முழுமையான நிவாரணமளிக்கும் பிஸியோதெரபி

மருந்து மாத்திரை உபகரணம் என்று எதுவுமின்றி பயிற்சிகளால் மட்டுமே ஒருவரின் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதுதான் உடல்இயன்முறை மருத்துவம். தசைகள் பிசகாமல் இயல்பாக வைத்திருப்பதற்கும், ஹார்மோன் சுரப்பிகளின் செயல்பாடுகளில் ஒரு ஒழுங்கினை உருவாக்குவதற்கும் இயன்முறை மருத்துவம் பயன்படுகிறது.

எப்போதும் மனிதர்கள் தங்களின் கைகளை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இந்த கையை ஆரோக்கியமாக பயன்படுத்த ஹாண்ட் தெரபி என்ற ஒரு தெரபி தற்போது உருவாகி பலனளித்து வருகிறது. இதன்மூலம் ஜாயிண்ட்ஸில் ஏற்படும் வலிகளுக்கு முழுமையான நிவாரணம் கிடைக்கிறது.’ என்று இயன்முறை மருத்துவம் அதாவது பிஸியோதெரபியை பற்றி எம்மிடம் விளக்கம் அளித்துக்கொண்டே இயல்பாக பேசத் தொடங்குகிறார் டாக்டர். ரேகா கிருஷ்ணமூர்த்தி.

இவர் மதுரையில் உள்ள ஜெயின் மருத்துவமனையில் இயன்முறை மருத்துவநிபுணராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

* பிஸியோதெரபி எனப்படும் உடல் இயன்முறை மருத்துவத்தை மக்கள் ஏன் நாட வேண்டும்?

உடல் இயன்முறை மருத்துவம் (பிஸியோதெரபி) இன்று உலக அளவில் ஒரு வளர்ச்சியடைந்த நவீன மருத்துவ முறையாகும். இன்று இலங்கை, இந்தியா உள்ளிட்ட தெற்காசியா முழுவதும் பரவலாக பின்பற்றப்படும் மருத்துவமுறையாக உருவெடுத்துள்ளது. உடலியக்க செயல்பாட்டை விஞ்ஞான ரீதியாக அறிந்து உடலியக்க குறைபாடுகளைப் போக்கும் நவீன மருத்துவ வடிவமாக இன்று பிஸியோதெரபி மருத்துவம் வளர்ந்துள்ளது.

வலியைத் தோற்றுவிக்கும் அனைத்து உடல் குறைபாடுகளையும் பின்விளைவு ஏற்படுத்தாத வகையில் சரி செய்வது, வலு விழந்த தசை, தசைநார், நரம்புகளை உடலியக்க அணுகுமுறையில் வலுப்படுத்துவது, இதய சம்பந்தமான நோய்களின் உடலியக்க பயிற்சிகளின் மூலம் சரி செய்வது, மூளை வளர்ச்சி கோளாறுகள், பெண்களுக்கு குறிப்பாக கர்ப்ப காலங்களில் ஏற்படும் உடலியக்க கோளாறுகளை சரிசெய்வது, எலும்புமுறிவு சத்திர சிகிச்சை உள்ளிட்ட அனைத்து சத்திர சிகிச்சைகளுக்கு பின்னர் தேவைப்படக்கூடிய ஒரு உடன் மருத்துவம் , நூறு சதவீதம் உடலியக்க நோய்களுக்கான பிரிக்க முடியாத மருத்துவமுறை என பிஸியோதெரபி மருத்துவம் இன்று வளர்ச்சியடைந்து வருகிறது.

* இன்றைய தேதியில் இளம் ஆணும் பெண்ணும் கடின உழைப்பில்லாத பணியை செய்துவருகிறார்கள். இதனால் இவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறதா?
ஓரளவிற்கு இவர்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. தற்போதுள்ள சூழலில் இளவயது ஆணும் பெண்ணும் கல்லூரியில் படிக்கும்போதே கம்ப்யூட்டர் மற்றும் பொறியியல் பட்டதாரி அல்லது மருத்துவ பட்டதாரியாகி பணியில் இணையும் போது அவர்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அத்துடன் சமச்சீரான சத்துள்ள உணவையும் எடுத்துக் கொள்வதில்லை.

அடுத்ததாக போதிய அளவிற்கு தண்ணீர் அருந்துவதில்லை. இதனால் பல சிக்கல்கள் உருவாகின்றன. அத்துடன் போதிய உடற்பயிற்சியையும் மேற்கொள்வதற்கு நேரம் கிடைப்பதில்லை. தங்களின் நேரம் முழுவதையும் பணிக்காகவே செலவிடுகின்றனர். அதனால் நாங்கள் தற்போது உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு காலை எழுந்தவுடன் காலியான வயிற்றில் சற்று இளஞ்சூடான தண்ணீரை பருகவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
இதனால் மலச்சிக்கல் வராமல் தற்காத்துக்கொள்ள முடியும். அதே போல் தண்ணீர் அருந்திய ஒரு மணிநேரம் கழித்து பால் சாப்பிடுவது குறிப்பாக பெண்களுக்கு நல்லது. வசதியுள்ளவர்களோ அல்லது ஆரோக்கியத்தின் மீது அக்கறையுள்ளவர்களோ இதையும் கடந்து கேரட் ஜுஸ், கருவேப்பிலை ஜுஸ் போன்ற சாறுகளை அருந்தினால் ஆரோக்கியம் சீராக இருக்கும். அதனையடுத்து பழம் சாப்பிடலாம்.
 
* பெண்களும் சரி ஆண்களும் சரி முதுகுவலியால் அவதிப்படுகிறார்கள். இதற்கு காரணம் அவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவா?அல்லது பணியிடச் சூழலா?
இரண்டுமே காரணங்கள் எனலாம். ஏனெனில் இன்றைய தேதியில் ஜங்க் ஃபுட்ஸ் மற்றும் ஃபாஸ்ட் ஃபுட்ஸ் அதிகரித்துவிட்டது. அத்துடன் முன்பே தயாரிக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளையும் நாம் சாப்பிடத் தொடங்கிவிட்டோம். சுவை ஒன்றையே பிரதானமாக கொண்டிருக்கும் இவற்றை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிப்பிற்கு ஆளாகிறோம். அதேபோல் அலுவலகத்தில் அமர்ந்து பணியாற்றும் பாங்கு அதாவது ஸ்டைல் ஒவ்வொருவருக்கும் வேறுபடும் என்றாலும் யாரும் நேர்த்தியாக அமர்ந்து பணியாற்றுவதில்லை.

தொப்பை ஏற்பட ஏற்பட முதுகில் உள்ள தண்டுவடம் பாதிப்படையத் தொடங்கும். அதேபோல் தொடர்ச்சியாக இருபது நிமிடங்களுக்கு மேல் ஒரே பொசிசனில் உட்கார்ந்து பணியாற்றக்கூடாது. இருபது நிமிடத்திற்கொரு முறை எழுந்து சென்று தண்ணீர் அருந்துவதோ அல்லது வேறு ஏதேனும் ஒரு சிறுபணியை காலாற நடந்துவிட்டு வந்து மீண்டும் நேர்த்தியாக அமர்ந்து பணியாற்றவேண்டும். இவை முதுகுவலி வராமல் தடுப்பதற்கான முறை.

* நின்றுகொண்டே பணியாற்றுபவர்கள் சந்திக்கும் ஆரோக்கிய சவால் குறித்து?
நின்றுகொண்டே பணியாற்றுபவர்களுக்குத்தான் அவர்களின் உடல் எடையின் அழுத்தம் அதிகரித்து அவர்களின் முதுகுதண்டு பாதிக்கத்தொடங்குகிறது. அதனால் இத்தகைய சூழலில் இருப்பவர்கள் தொடர்ச்சியாக நின்று கொண்டே பணியாற்றுவதை தவிர்த்து விட்டு சீரான இடைவெளியில் சிறிது நேரம் அமர்ந்து விட்டு, பின்னர் பணியை தொடரலாம்.

* கழுத்து வலியை பிஸியோதெரபி மூலம் முழுமையாக குணப்படுத்தி விட முடியும் என்கிறார்களே எப்படி?
கழுத்து தசை பலவீனம், தோள்பட்டை பிடிப்பு, கழுத்தினை குனிந்தவாறு வேலை செய்தல், முதுமை, மன அழுத்தம், வாகனங்களில் அதிகமாக பயணிப்பது, ஒரு பக்கமாக சாய்ந்து உறங்கும் போது தலைக்கு இரண்டு கைகளையும் வைத்து படுப்பது என பல காரணங்களால் கழுத்துவலி வரக்கூடும். ஒரு சிலருக்கு கீழ் முதுகில் ஏற்படும் வலியினாலும் கூட கழுத்தில் வலி ஏற்படும். இவர்களுக்கு கழுத்து தசைகளுக்கு பயிற்சி அளிப்பது, கழுத்துதசை பிடிப்பை நீட்டிப்பு செய்வது, கழுத்து எலும்புகளை மேனிபுலேசன் முறையில் துல்லியமாக வைப்பது போன்ற பயிற்சிகளின் மூலம் இதற்கு நிவாரணம் தர இயலும். மேலும் ஒரு சிலருக்கு Kinesiology taping மூலம் கழுத்து தசைகளின் வலியையும், அதன் அழுத்தத்தையும் குறைத்து நிவாரணமளிக்க இயலும்.

விவரங்களுக்கு:
ஜெயின் மருத்துவமனை, 0452-4212151

Tags: News, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top