நிலம் எங்கள் உரிமை: ஒன்றிணையும் ராமாபுரம் மக்கள்!

நிலம் எங்கள் உரிமை: ஒன்றிணையும் ராமாபுரம் மக்கள்!

ராமாபுரத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வீடுகளை காலி செய்யுமாறு வருவாய்த்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாழும் நிலங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்படுவது உலகப் பொதுமறை அரசியல். அரசின் திட்டங்களாலோ, ஆக்கிரமிப்பு காரணத்தினாலோ உலகில் எங்கோ ஒரு மூலையில் சிறிய நிலப்பரப்பில் வாழும் மக்கள் வெளியேற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். எத்தனையோ பூர்வக் குடிகள் சொந்த மண்ணில் இருந்து போர்க் காரணங்களாலும், ஆதிக்க அரசியல் காரணங்களாலும் இன்னபிற எத்தனையோ காரணங்களாலும் துரத்தப்படும் சூழல் இருந்துகொண்டே இருக்கிறது. வெளியேற்றப்படும் மக்களின் துயரங்கள் படைப்புகளாகவும், இலக்கியங்களாகவும ஒருபுறம் உலகம் முழுக்க குவிந்துக் கிடக்கின்றன. சமீபத்தில் கண்ணகி நகர் மக்களை செம்மஞ்சேரியில் குடியமர்த்திய விவகாரம் அனைவருக்கும் தெரிந்த நிலையில், தற்போது ராமாபுரம் மக்கள் தங்கள் நில உரிமைக்காக போராடி வருகின்றனர். ‘நிலம் எங்கள் உரிமை’ என்ற வலுவான கோரிக்கையோடு போராட்டத்தில் இறங்கியுள்ளனர் ராமாபுரம் மக்கள். முதலில் பிரச்சனைதான் என்ன ?
 
சென்னை வளசரவாக்கம் அடுத்துள்ள ராமாபுரத்தில், 27 ஏக்கர் பரப்பளவிலான ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, ராமாபுரம் சமூகநல கூட்டமைப்பு சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ராமாபுரம் ஏரியைச் சுற்றி 90 சதவீதம் ஆக்கிரமிப்பு நடைபெற்றுள்ளதாகவும், மீதமுள்ள 10 சதவீதத்தில் மட்டுமே ஏரி இருப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது ஆஜரான மாநகராட்சி தரப்பு வழக்கறிஞர், ராமாபுரம் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிப்பதாகவும், அவர்களுக்கு மாற்று இடம் அளிக்க, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் அனுமதி கேட்டுள்ளதாகவும் வாதிட்டார். ஆக்கிரமிப்பை அரசு அதிகாரிகள்தான் ஊக்குவிப்பதாக குறுக்கிட்ட தலைமை நீதிபதி, இதுவரை ஆக்கிரமிப்புகளை அகற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினார். ராமாபுரம் ஏரி ஆக்கிரமிப்புக்கு அரசு மற்றும் மாநகராட்சி அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறிய தலைமை நீதிபதி, முதலில் எப்படி அங்கு ஆக்கிரமிப்பு அனுமதிக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினார். 
 
நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அடுத்து வருவாய்த்துறையினர் களத்தில் இறங்கினர். முதற்கட்டமாக, ராமாபுரத்தில் ஏரியை ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை அகற்றுமாறு நோட்டீஸ் கொடுப்பதற்காக வருவாய்த்துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு வந்தனர். திடீரென வீடுகளை காலி செய்யுமாறு நோட்டீஸ் வழங்கியதால் பதட்டமடைந்த மக்கள், அதிகாரிகளை உள்ளே விடாமல் தடுத்துநிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் வீடுகளை அகற்றுமாறு நோட்டீஸ் அளிக்க வந்தனர். ராமாபுரம் பெரியார் சாலை மற்றும் திருமலை நகர் ஆகிய பகுதிகளில் ராமாபுரம் ஏரியை ஆக்கிரமித்து, வீடுகள் கட்டப்பட்டு இருப்பதாகவும், இந்த வீடுகளை எல்லாம் கணக்கெடுப்பு செய்து அகற்ற வேண்டும் எனவும் அங்கு வாழும் மக்களிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் முறையிட்டனர். அதைத் தொடர்ந்து, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள வீடுகளில் நோட்டீஸ் ஒட்டும் பணியுத் தொடர்ந்து நடைபெற்றது. இதனால் அடுத்த எங்கு செல்வது என தெரியாமல் அந்தப் பகுதி மக்கள் செய்வதறியாது புலம்பி வருகின்றனர். 
 
ஆக்கிரமிப்பு என அரசும், நீதிமன்றமும் சொன்னாலும் இந்தப் பகுதி மக்கள் சில வாதங்களை முன்வைக்கின்றனர். மதுரவாயல் தொகுதி 155வது வட்டத்தில் உள்ள ராமாபுரத்தில் திருமலை நகர், வ.உ.சி தெரு, நேதாஜி நகர், பெரியார் சாலை, கண்ணகி தெரு, மூவேந்தர் தெரு ஆகிய பகுதிகள் ஆக்கிரமிப்பு பகுதிகளாக கூறப்படுகிறது. இந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர். நீதிமன்றத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் என கணக்குச்சொன்னாலும் இந்தப் பகுதி மக்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இங்கு வசிப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல், ஆக்கிரமிப்பு இடங்கள் என கூறும் இந்த இடத்தில் கடந்த 50 ஆண்டுகளாக வீட்டுமனைப் பட்டா, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, வீட்டு வரி என அனைத்தும் முறையாக செலுத்தி அதற்கான ஆவணங்கள் இருப்பதாகவும், அப்படியிருக்க திடீரென வீடுகளை காலிசெய்யுமாறு நோட்டீஸ் ஒட்டினால் என்ன செய்வது ? என்றும் அந்தப் பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.  
 
இதனால் அங்கு செல்லும் அதிகாரிகளுக்கும், குடியிருப்பு வாசிகளுக்கும் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்படுவதால் தொடர்ந்து அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். நிலப் பிரச்சனையால் தற்போது அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களும் தங்களின் உரிமைகளுக்காக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ‘நிலம் எங்கள் உரிமை’ என்ற கோரிக்கையோடு முதலில் தெருக்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள், வரும் 4ம் தேதி ராமாபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top