ஆங்கிலேயப் பொறியாளர் கட்டிய கோரிப்பாளையம் AV பாலம்!
Posted on 21/12/2016

நாள் ஒன்றுக்கு 3 லட்சத்திற்கும் மேல் வாகனங்கள் சர்..சர்..சர்.. என்று சீறிப்பறக்கின்றன. அத்தனை எடையையும், அதன் வேகத்திற்கும் ஈடு கொடுத்து, இன்றும் வலுவாக இருக்கிறது, வைகை ஆற்றின் தொன்மையும், உறுதியான பாலமான ஆல்பர்ட் விக்டர் பாலம்.
127 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை, ஆற்றுக்கு அந்தப் பக்கம், ஆற்றுக்கு இந்தப் பக்கம் என்ற வகையில்தான் மதுரை இருந்தது. ஜான் பிளாக்பர்ன் என்ற ஆங்கிலேயக் கலெக்டர்தான், முதலில் மதுரையைச் சுற்றி இருந்த பாழடைந்த கோட்டைப் பகுதிகளை இடித்து அந்தச் சிதைந்த கட்டிடப் பகுதிகளைக் கொண்டு தரைப்பாலத்தைக் கட்டினார். அதற்கு முன்பாக, ஆற்றின் குறுக்கே மூங்கில் பாலம் ஒன்று கட்டப்பட்டது. அந்தப் பாலத்தில் ஆங்கிலேயர்களின் சாரட் வண்டிச் சக்கரங்கள் சிக்கின. இதனால் அந்தப் பாலத்திற்குப் பதிலாக, நிலையான, உறுதியான ஒரு பாலத்தைக் கட்ட முடிவெடுத்தனர். அந்தக் காலத்தில் இந்தப் பாலத்தைக் கட்டுவதற்காகப் போடப்பட்ட பட்ஜெட் தொகை ரூ. 3,21,000/-. ஆல்பர்ட் விக்டர் என்ற ஆங்கிலேயப் பொறியாளர்தான் இந்தப் பாலத்தினை வடிவமைத்து, கட்டினார். நன்கு திட்டமிடப்பட்டு, நல்ல உறுதியுடன் கட்டப்பட்ட இந்தப் பாலத்தை ரூ.2,75,687/- தொகையில் கட்டி, பட்ஜெட் போடப்பட்ட தொகைக்குள் கட்டி முடித்து, மீதமுள்ள தொகையைக் கருவூலத்தில் செலுத்தினார். இதற்காக அப்போதைய அரசு அவரைப் பாராட்டிக் கௌரவித்தது.
இந்தப் பாலத்தைத் திறந்து வைப்பதற்காக, இங்கிலாந்திலிருந்து ‘வேல்ஸ் இளவரசர்’ வருவ தாக இருந்தது. அப்போது, நாடெங்கும் காலரா நோய் தீவிரமாகப் பரவியிருந்தது. எதற்கும் அஞ்சாமல் இருந்த ஆங்கிலேயர்கள், காலரா நோயைக் கண்டு அஞ்சினர். என்ன செய்வது? நோயின் தாக்குதலுக்கு இன, பேதங் கள் கிடையாதே! காலரா நோயின் தீவிரத்திற்குப் பயந்த வேல்ஸ் இளவரசர் தனது பயணத்தை ரத்து செய்து விட்டார். எனவே இந் தப் பாலத்தை, இதனை வடி வமைத்துக் கட்டிய ஆல்பர்ட் விக்டரே, 1889 –ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி திறந்து வைத்தார். இவரது பெயரே இந்தப் பாலத்திற்கு வைக்கப் பட்டு, அதுவே நிலைத்து விட்டது. இதன் உறுதியைப் பற்றி சான்றிதழ் கொடுக்கத் தேவையில்லை. இன்று மதுரையின் பிரதான அடை யாளமாக இருந்து வருகிறது இந்தப் பாலம்; சில ஆண்டு களுக்கு முன்பு இந்தப் பாலத்திற்கு கீழே இருந்த ஆற்றுப் படுகையில், ஒரு பீரங்கி கண்டெடுக்கப்பட்டு, தற்போது அந்த பீரங்கி அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத் தப்பட்டுள்ளது.
சித்திரைத் திருவிழாவின் முக்கிய விழாவான, ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைப வம், இந்தப் பாலத்திற்கு அருகிலே தான் வருடம் தோறும் நடைபெறுகிறது. அந்த சமயம் ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப் பாலத்தி லிருந்து கள்ளழகரைத் தரிசனம் செய்வார்கள். இப்படிக் கணக்கில் அடங்காத மக்க ளையும், வாகனங்களையும் இன்றும் சுமந்து கொண்டு அதனைச் சுகமான சுமையாகக் கருதும் இந்தப் பாலத்தினைச் சுகமான சுமைதாங்கி என்று வர்ணித்தால் அது அதிகப்படியான வார்த்தை இல்லை!
Tags: News, Madurai News, Art and Culture