நவீன மயமாக்கப்படும் மாநகராட்சி நிர்வாகம் - கமிஷனர் சந்தீப் நந்தூரி
Posted on 05/11/2016

மதுரை மாநகராட்சியில் ஆன்லைனில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குவதற்கான பதிவுகளை மூன்று மாதங்களுக்குள் முடிக்க 24 சுகாதார ஆய்வாளர்களுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சியில் ஆன்லைனில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கியதில் அமைச்சர் ராஜூ பெயரில் இறப்பு சான்று வழங்கியது உட்பட சில குளறுபடியால் மூன்று ஆண்டுகளுக்கு முன் ஆன்லைனில் சான்றிதழ் வழங்குவது நிறுத்தப்பட்டது.
இதனால் மக்கள் மாநகராட்சியில் விண்ணப்பித்து காத்திருந்து லஞ்சம் கொடுத்து பெற வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஆன்லைனில் மீண்டும் சான்றிதழ்களை வழங்கும் நடைமுறையை அமல்படுத்த கமிஷனர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.
நூறு வார்டுகளின் 24 சுகாதார ஆய்வாளர்களும் பதிவேற்றம் செய்ய வேண்டிய பணிகளை மூன்று மாதங்களுக்குள் முடிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2012-13ம் ஆண்டுகளுக்கான ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டன. 2014-15ம் ஆண்டுக்கான பதிவுகள் பதிவேற்றம் செய்ய வேண்டும். பணிச்சுமை இருப்பதால் இப்பணியில் சுகாதார ஆய்வாளர்கள் ஆர்வம் காட்டாமல் இருந்தனர்.
மாநகராட்சி நிர்வாகத்தை நவீனப்படுத்தும் முயற்சிகளை கமிஷனர் எடுத்துள்ளார். இதன் ஒரு பகுதியாக, பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்கும் அறைக்குள் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் தவிர வேறு யாரும் செல்லமுடியாத வகையில் 'பயோமெட்ரிக்' கதவு பொருத்தப்பட்டுள்ளன. இந்த பிரிவின் செயல்பாடுகளை கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
Tags: News, Madurai News