ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா தீர்மானம்!

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா தீர்மானம்!

உக்ரைன் விவகாரத்தில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா கொண்டு வந்த மனிதாபிமான வரைவு தீர்மானத்தின் மீதான வாக்களிப்பை இந்தியா புறக்கணித்தது.

உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்திற்கு மேலாக போரிட்டு வருகிறது. இதனால் உக்ரைனில் மக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறார்கள். இந்த போரை நிறுத்த ரஷ்யாவிடம் உலக நாடுகள் அறிவுறுத்தின. எச்சரிக்கையும் விடுத்து பார்த்தன. ஆனால் ரஷ்யாவோ விடாமல் போரிட்டு வருகிறது.
 
உக்ரைனும் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் விவகாரத்தில் மனிதாபிமான வரைவு தீர்மானத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா கொண்டு வந்தது. ஆனால் இந்த தீர்மானத்தில் உக்ரைன் மீதான போரை ரஷ்யா மறைத்துள்ளது. இந்த கவுன்சிலில் மொத்தம் 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
 
இந்த தீர்மானம் நிறைவேற ரஷ்யாவுக்கு ஆதரவாக 9 வாக்குகள் தேவை. ஆனால் ரஷ்யா கொண்டு வந்த தீர்மானத்தின் மீது இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்பட 13 நாடுகள் வாக்களிக்காமல் நடுநிலை வகித்தன. தான் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது ரஷ்யாவும் அதன் நட்பு நாடான சீனாவும் மட்டுமே வாக்களித்தன.
 
இதனால் இந்த தீர்மானம் போதிய ஆதரவு இல்லாததால் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தோல்வி அடைந்தது. உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக ஐநா பாதுகாப்பு கவுன்சில், ஐநா பொது சபையில் மற்ற நாடுகள் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி தீர்மானம் கொண்டு வந்தன. இதில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தனக்கு எதிரான தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரஷ்யா தோல்வி அடையச் செய்தது.
 
இந்த தீர்மானத்தின் மீதும் இந்தியா வாக்களிக்கவில்லை. அது போல் ஐநா பொது சபையில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 141 வாக்குகளும் 5 உறுப்பு நாடுகள் எதிராகவும் வாக்களித்திருந்தன. அப்போதும் இந்தியா வாக்களிக்கவில்லை. அப்போது இந்த தீர்மானங்களின் மீதான வாக்களிப்பின் போது ஐநாவுக்கான இந்திய தூதர், நடுநிலை வகிக்கிறோம் என்றும் அதே நேரம் பேச்சுவார்த்தை மூலம் அனைத்து பிரச்சினைகளும் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் போரை நிறுத்த வேண்டும் என்றும் பேசியிருந்தார்.
 
பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனும் ரஷ்ய அதிபர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யா கொண்டு வந்த தீர்மானத்துடன் சேர்த்து 3 தீர்மானங்கள் ஐநா பொது சபை முன்பும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் முன்பும் வைக்கப்பட்டன.
 
ரஷ்யா மீது பல நாடுகள் பொருளாதார தடைகளை விதித்த போதிலும் இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கூடுதலாக எண்ணெயை வாங்கி வந்தது. இது உலக நாடுகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தன. சில நாடுகள் இந்தியா, ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் தெரிவித்திருந்தன. ஆனால் ரஷ்யா கொண்டு வந்த தீர்மானத்தின் மீது வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்ததன் மூலம் தனது நடுநிலைத்தன்மை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top