ஜெயக்குமார் விடுதலை: அதிமுகவினர் உற்சாக வரவேற்பு!

ஜெயக்குமார் விடுதலை: அதிமுகவினர் உற்சாக வரவேற்பு!

அதிமுக முன்னாள் அமைச்சர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் மூன்று வழக்குகளிலும் ஜாமீன் வழங்கப்பட்டதால் (மார்ச் 12) காலை 6:45 மணி அளவில் விடுதலை செய்யப்பட்டார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு நாளான பிப்ரவரி 19ஆம் தேதி திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி கும்பல் வன்முறை செய்ததாக பிப்ரவரி 21 இரவு ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.
 
அதன்பின் அவர் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பதியப்பட்ட வழக்கிலும் தமிழக காவல்துறை கைது நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த இரு வழக்குகளிலும் ஜாமீன் கிடைக்கும் சூழலில் மத்திய குற்றப்பிரிவு மூலமாக ஜெயக்குமார் மீது தொழிற்சாலையை அபகரித்ததாக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு அதிலும் அவர் கைது செய்யப்பட்டார்.
 
முதல் இரண்டு வழக்குகளில் ஏற்கெனவே ஜெயக்குமாருக்கு ஜாமீன் கிடைத்த நிலையில், மூன்றாவது வழக்கிலும் நேற்று சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால் ஜாமீன் உத்தரவு புழல் சிறை நிர்வாகத்துக்கு நேற்று மாலை 6 மணிக்குள் கிடைக்கவில்லை என்பதால் அவரது விடுதலை நேற்று தாமதமானது.
 
இந்த நிலையில் நேற்று இரவே ஜெயக்குமாரின் ஜாமீன் உத்தரவு நகல் சிறை நிர்வாகத்திடம் சென்று சேர்க்கப்பட்ட நிலையில் இன்று காலை ஜெயக்குமார் நிர்வாக நடைமுறைகள் முடிந்து காலை 6.45 மணி அளவில் ஜெயக்குமார் சிறையிலிருந்து வெளியே வந்தார்.
 
ஜெயக்குமாரை நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் வழக்கறிஞர்களும் வரவேற்றனர். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், "தமிழக முதல்வர் ஸ்டாலின் ஹிட்லரின் மறு உருவமாக இருக்கிறார். தான் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு நிறைவேற்றாமல் எதிர்க்கட்சியான அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களை, தலைமை கழக நிர்வாகிகளை, மாவட்டச் செயலாளர்களை பழி வாங்குவதில் தான் அவர் குறியாக இருக்கிறார்.
 
தேர்தல் தினத்தில் கள்ள ஓட்டு போடும் திமுகவைச் சேர்ந்த சமூக விரோதிகளை அதிமுகவினர் பிடித்து வந்தனர். அவர்களை ஜனநாயக முறையில் காவல்துறையிடம் ஒப்படைத்தோம்.
 
என்னைக் கைது செய்வதற்காக புகார் கொடுத்த அவர் மீது பல வழக்குகள் உள்ளன. செயின் பறிப்பு, இரும்புத் தடியால் ஒருவரை தாக்கிய வழக்கு, கொரோனா ஊரடங்கு நேரத்தில் கள்ளச் சாராயம் விற்ற வழக்கு. இதெல்லாம்தான் திமுகவில் உறுப்பினராக இருப்பதற்கு தகுதி போல" என்று கூறினார்.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top