தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் காங். ராஜ்யசபா வேட்பாளர் ப.சிதம்பரம் வாழ்த்து பெற்றார்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் காங். ராஜ்யசபா வேட்பாளர் ப.சிதம்பரம் வாழ்த்து பெற்றார்!

தமிழகத்தில் ஜூன் 10-ந் தேதி நடைபெறும் ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

நாடு முழுவதும் 15 மாநிலங்களில் 57 ராஜ்யசபா இடங்களுக்கு ஜூன் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி. இடங்கள் காலியாக உள்ளன. இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 24-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ராஜ்யசபா தேர்தல் வேட்புமனுத் தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்.
 
தமிழகத்தில் சட்டசபையில் எம்.எல்.ஏக்கள் பலத்தின் அடிப்படையில் திமுகவுக்கு 4; அதிமுகவுக்கு 2 ராஜ்யசபா எம்.பி.க்கள் கிடைக்கும். திமுகவில் கல்யாணசுந்தரம், ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். மூவரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
 
திமுக தமது கூட்டணிக் கட்சியான காங்கிரஸூக்கு ஒரு இடத்தை ஒதுக்கியது. காங்கிரஸ் கட்சியில் யார் ராஜ்யசபா வேட்பாளர் என்பது அறிவிக்கப்படாமல் இழுபறியாகவே இருந்தது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, அவரது அரசியல் குருநாதரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் இருவரில் ஒருவருக்கு ராஜ்யசபா சீட் கிடைக்கும் என கூறப்பட்டது.
 
இந்நிலையில் ப.சிதம்பரம், காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட ப.சிதம்பரத்தின் பதவி காலம் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் மேலிடம் ப.சிதம்பரத்துக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளது.
 
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ப.சிதம்பரம், எங்களுக்கு ஆதரவு தருகின்ற தி மு கழகம், அதன் தலைவர் மாண்புமிகு திரு மு க ஸ்டாலின் மற்றும் தோழமைக் கட்சியினருக்கு என் இதயம் நிறைந்த நன்றி என கூறியிருந்தார். பின்னர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ப.சிதம்பரம் வாழ்த்துப் பெற்றார்.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top