விஜய் மல்லையா விசாரணைக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை வட்டாரங்கள் அளித்த ஆலோசனை

விஜய் மல்லையா விசாரணைக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை வட்டாரங்கள் அளித்த ஆலோசனை

""இந்தியாவுக்கு வரவே விரும்புகிறேன்; ஆனால், எனது கடவுச் சீட்டை இந்திய அதிகாரிகள் முடக்கியிருப்பதால், என்னால் இந்தியா வர இயலவில்லை'' என்று தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவலை, அவரது வழக்குரைஞர் ரமேஷ் குப்தா, தில்லி பெருநகர நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

கடந்த 1996, 1997, 1998-ஆம் ஆண்டுகளில் ஐரோப்பிய நாடுகளில் "ஃபார்முலா ஒன் சாம்பியன்ஷிப்' கார் பந்தயப் போட்டிகள் நடைபெற்றன. போட்டி நடைபெறும் இடங்களில் கிங் ஃபிஷர் விமான நிறுவனத்தின் விளம்பரங்கள் இடம்பெறச் செய்வதற்காக, ரிசர்வ் வங்கி விதிகளை மீறி, பிரிட்டனைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு 2 லட்சம் டாலர்களை மல்லையா கொடுத்ததாகப் புகார் எழுந்தது.

இதுதொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத் துறை பல முறை அழைப்பாணை அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகவில்லை. அதையடுத்து, அவருக்கு எதிராக அன்னியச் செலாவணி சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை கடந்த 2000-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது.

இதுதொடர்பான வழக்கு தற்போது விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், வழக்கை கடந்த ஜூலை மாதம் 9-ஆம் தேதி விசாரித்த நீதிமன்றம், மல்லையாவுக்கு நேரில் ஆஜராவதில் இருந்து அளிக்கப்பட்டிருந்த விலக்கை ரத்து செய்து, அவரை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மல்லையா அனுப்பியிருந்த மின்னஞ்சலின் நகல் ஒன்றை அவரது தரப்பு வழக்குரைஞர் ரமேஷ் குப்தா, தில்லி பெருநகர நீதிமன்ற நீதிபதி சுமித் தாஸிடம் வெள்ளிக்கிழமை சமர்ப்பித்தார். அதில், ""நான் விசாரணைக்கு நேரில் ஆஜராவதற்கு சிறிது அவகாசம் தரப்பட வேண்டும்; எனது கடவுச்சீட்டு கடந்த ஏப்ரல் மாதம் முடக்கப்பட்டுவிட்டது'' என்று மல்லையா குறிப்பிட்டிருந்தார்.

அப்போது ""மல்லையா ஏற்கெனவே பல விசாரணைகளுக்கு நேரில் ஆஜராகவில்லை. எனவே, அவருடைய கோரிக்கைக்கு பதிலளிக்க அவகாசம் தேவைப்படுகிறது'' என்று அமலாக்கத் துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். அதையடுத்து வழக்கு விசாரணயை, அடுத்த மாதம் 4-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
மாற்று கடவுச் சீட்டு பெறுவது எப்படி?: இதனிடையே, விஜய் மல்லையா மாற்று கடவுச் சீட்டு எப்படிப் பெறுவது என அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:

குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால் கடவுச் சீட்டு முடக்கப்பட்ட விஜய் மல்லையா அல்லது வேறு நபர் யாராக இருந்தாலும், அவர்கள் தங்கியுள்ள நாட்டில் இருக்கும் இந்தியத் தூதரகத்தின் உதவியை நாடலாம்.

அங்கிருந்து அவசரக் கால அல்லது மாற்றுப் பயண ஆவணத்தைப் பெற்று அவர்கள் இந்தியா திரும்பலாம். இந்தச் சட்ட வழிமுறையைப் பின்பற்றி மல்லையா நாடு திரும்பி, விசாரணைக்கு ஒத்துழைப்பு தரலாம் என்று அந்த வட்டாரங்கள் யோசனை தெரிவித்தன.

Tags: News, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top