மெர்சல் தளபதி விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்!

மெர்சல் தளபதி விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்!

"All is well" என்ற வார்த்தையை கேட்டாலே அனைவரின் மனதிலும் வரும் உருவம் இளைய தளபதி விஜய். இயக்குனர் சந்திரசேகரின் மகனான ஜோசப் விஜய், தனது தந்தையின் நாளைய தீர்ப்பு எனும் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். விஜய்யின் வெள்ளித்திரை பயணத்தில் பூவே உனக்காக,  காதலுக்கு மரியாதை போன்ற படங்கள் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.பின், துள்ளாத மனமும் துள்ளும், குஷி, ப்ரெண்ட்ஸ், கில்லி, போக்கிரி, நண்பன், கத்தி, துப்பாக்கி, தெறி என தன்னையுடைய சுவட்டை வெள்ளித்திரையில் இருந்து அழிக்க முடியாத அளவிற்கு பதித்ததோடு, எண்ணிடலங்கா இரசிகர்களையும் தன்வசப்படுத்தியுள்ளார். தன்னுடைய நடிப்பினால் மட்டுமல்லாது தன்னுடைய செயலாலும் பேச்சாலும் தமிழக மக்களின் மனங்களை கவர்ந்துள்ளார் இளைய தளபதி விஜய்.

அதிலும் கடந்த சில வருடங்களாவே தன்னுடைய பக்குவப்பட்ட பேச்சினாலும் அனைத்து தரப்பினரையும் தன்வசப்படுத்தியுள்ளார். அதுபோன்ற சில சமுதாய கருத்துக்கள் நிறைந்த பேச்சுக்களை பார்க்கலாம்.

உலகின் கவனத்தை திருப்பிய மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக விஜய் பேசியதாவது: உலகம் முழுவதும் சட்டத்தை உருவாக்குவது மக்களின் கலாச்சாரத்தையும், உரிமையையும் பாதுகாக்கத்தானே தவிர பறிப்பதற்கு அல்ல. தமிழனின் அடையாளம் ஜல்லிக்கட்டு. எதையும் எதிர்பார்க்காமல், யாருடைய தூண்டுதலும் இல்லாமல் கட்சி பேதமின்றி தமிழன் என்ற ஒரே உணர்வுடன் இந்த போராட்டத்தில் குதித்துள்ள அத்தனை நெஞ்சங்களுக்கும் நான் கடமைப்பட்டிருக்கின்றேன். இவ்வளவுக்கு காரணமான பீட்டாவை வீட்டுக்கு அனுப்பினால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன்'.

ரூ.500, ரூ.1000 செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தபோது விஜய் பேசியதாவது: மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு உண்மையில் மிக துணிச்சலான முடிவு. நம்முடைய நாட்டிற்கு தேவையான, வரவேற்கத்தக்க முடிவு. நம் நாட்டின் பொருளாதாரத்தை இந்த நடவடிக்கை நிச்சயம் வளர்க்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரு நோக்கம் பெரியதாக இருக்கும்போது அதற்கான பாதிப்பு சிறிது இருக்கத்தான் செய்யும். அதே நேரத்தில் அந்த பாதிப்புகள் நோக்கத்தை விட அதிகமாகிவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும். அதே சமயத்தில் அன்றாட தேவைகளான சாப்பாடு, மருந்து பொருட்கள் வாங்குதல், வெளியூர் சென்றவர்கள் வீடு திரும்பாமல் இருக்கும் நிலை, வியாபாரிகள் ஆகியோர்கள் பாதிக்கப்படுவதை தவிர்த்திருக்க வேண்டும்.

நாட்டில் 20% பணக்காரர்கள் இருப்பார்கள். அவர்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் செய்த தவறுக்காக மீதியுள்ள 80% மக்கள் பாதிக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம். நான் திரும்ப திரும்ப கூறும் ஒரு விஷயம் என்னவெனில் இதுவரை யாரும் செய்யாத, யோசிக்க கூட இல்லாத விஷயத்தை செய்தது இந்த அரசின் சாதனைதான் இது. இதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் இதுபோன்ற முக்கிய அறிவிப்பு வெளியிடும் முன் இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முன்கூட்டியே யோசித்து அதற்கான முன்னேற்பாடுகளை செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பதுதான் என்னுடைய தாழ்மையான கருத்து.

தெறி படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது விஜய் தனது ரசிகர்களுக்கு கூறிய அறிவுரை: என்னுடைய ரசிகர்கள் வாழ்க்கையில் இன்னும் பல உயரங்களை தொட வேண்டும். பிறர் அடைந்த உயரத்தை உங்கள் இலக்காக வைக்காதீர்கள் அடுத்தவர்களுக்கு நீங்கள் இலக்கு நிர்ணயம் செய்யுங்கள். உங்கள் குடும்பத்தில் நீங்கள் அனைவரும் மிகப்பெரிய உயரத்தை அடைய வேண்டும். கர்வத்தை விட்டு வாழ கற்று கொள்ளுங்கள்.

'புலி' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பக்குவப்பட்ட பேச்சு: எனக்கு உண்மையா ஒருத்தர வெறுக்க தெரியும். ஆனா பொய்யாக நேசிக்க தெரியாது. நமக்கு முதுகுக்கு பின்னாடி பேசுறவங்களை பத்தி நாம கவலைப்படவே கூடாதுங்க. உயிரோட இருக்குறவரைக்கும் அடுத்தவங்களுக்கு தீமை செய்யாமல் இருந்தாலே போதும், எல்லாரும் சொல்வாங்க.. ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் ஆணோ, பெண்ணோ இருப்பாங்கன்னு. ஆனா என்னோட வெற்றிக்குப் பின்னால நிறைய அவமானங்கள்தான் இருக்கு.  எனக்கும், என் ரசிகர்களுக்கும் மற்றவர்களை வாழ வச்சு அழகு பார்க்குறதுதான் பிடிக்கும்.

அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விஜய் பேசியதாவது: நான் பழசையெல்லாம் மறக்க மாட்டேன். நான் எப்போதும் தளபதியாகவே இருக்கிறேன். சூப்பர் ஸ்டார்லாம் அப்புறம்தான். என்னை விட நல்லா நடிக்கிறவங்க நிறைய பேர் இருக்காங்க. என்னை விட அழகா இருக்கிறவங்க நிறைய பேர் இருக்காங்க. நான் எப்பவுமே சாதாரணமான ஆளு. டைம்-ல கோல் போடற எல்லாருமே சூப்பர் ஸ்டார்தான். கோல் போடும் போது பந்து மட்டும்தான் உள்ள போகணும், நாம இல்லை.

மிகப்பெரிய பிரச்சனைகளை சந்தித்து வெளிவந்த 'கத்தி' படத்தின் விழா ஒன்றின்போது விஜய் பேசியதாவது: கத்தி படம்  எனக்கும், இயக்குனர் முருகதாஸுக்கும் மிக முக்கியமான படம். பொதுவாக என் படத்தை பற்றி நான் பெரிதாக சொல்வது கிடையாது. கத்தி படம் எடுத்தது யாருடனும் சண்டை போடுவதற்காக இல்லை.  எல்லா தரப்பு மக்களும் சண்டை சச்சரவுகளை மறந்து நிம்மதியாக சந்தோஷமாக ரசித்து பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான். எந்த மக்களுக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ இந்த படத்தை நான் கொடுக்கவில்லை. நான் தியாகி இல்லை. அதேபோல் துரோகியும் கிடையாது. உண்மைக்கு விளக்கம் கொடுத்தால் தெளிவாகும். வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்தால் உண்மையாகிவிடும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து இலங்கை ராணுவ இணையதளம் தவறான முறையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டபோது நடந்த கண்டனக்கூட்டத்தில் விஜய் பேசியதாவது: ‘ராமேஸ்வரத்தை சேர்ந்த தமிழக மீனவர்களின் கஷ்டத்தை தீர்க்க தமிழக முதல்வர் அம்மா நிறைய ஸ்டெப்ஸ் எடுத்துகிட்டு இருக்காங்க. அதை இலங்கை டிபெஃன்ஸ் வெப்சைட்ல கேலி செய்யுற மாதிரி ஒரு கமென்ட் பண்ணியிருக்காங்க. உண்மையிலேயே எங்க தாயை தப்பா பேசுன மாதிரி நாங்க உணர்றோம். இது ரொம்ப வருத்தத்தை தர்ற விஷயம். இதை நாங்க கடுமையா கண்டிக்கிறோம்’ .

இதேபோல் விஜய் சமூக அக்கறையுடனும், ரசிகர்களுக்கு அறிவுரை கூறும் வகையிலும் பல மேடையில் பேசியுள்ளதால்தான் அவர் மக்களின் மனங்களை மிக எளிதாக வென்றுள்ளார். கேமிராவுக்கு வெளியே நடிக்க தெரியாத, எளிமையான இளைய தளபதிக்கு நம் அனைவரின் சார்பாகவும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top