மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்துக்கு 32 ஆண்டு சிறை தண்டனை!

மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்துக்கு 32 ஆண்டு சிறை தண்டனை!

2019ஆம் ஆண்டு முதல் லாகூர் சிறையில் உள்ள ஹபீஸ் சயீத் இன்று தீர்ப்புக்காக நீதிமன்றத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டார்.

சர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் சயீத்துக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவரான ஹபீஸ் சயீத்துக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதாகக் கூறி இரண்டு வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹபீஸ் சயீத் மீதான குற்றம் நிரூபணமானதால் அவருக்கு 32 வருட சிறை தண்டனையும் பாகிஸ்தான் மதிப்பில் ரூ.3.40 லட்சம் பணம் அபராதமும் விதித்து நீதிபதி இஜாஸ் அகமது புட்டார் தீர்ப்பளித்தார். 70 வயதான ஹபீஸ் சயீத் ஏற்கனவே வேறொரு வழக்கில் 36 ஆண்டு கால சிறை தண்டனை பெற்றுள்ளார். 2019ஆம் ஆண்டு முதல் லாகூர் சிறையில் உள்ள ஹபீஸ் சயீத் இன்று தீர்ப்புக்காக நீதிமன்றத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டார்.
 
இன்று வழங்கப்பட்ட சிறை தண்டனையுடன் சேர்த்த மொத்தம் 68 ஆண்டு காலம் ஹபீஸ் சயீத் சிறையில் கழிக்க வேண்டும்.ஹபீஸ் சயீத்தை சர்வதேச பயங்கரவாதியாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. அவரது தலைக்கு அமெரிக்கா பத்து மில்லயன் டாலர் பரிசுத்தொகை அறிவித்துள்ளது.
 
இந்தியா தேடும் முக்கிய பயங்கரவாதிகளில் ஒருவர் ஹபீஸ் சயீத். இந்தியாவுக்கு எதிராக லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை தோற்றுவித்தவரான ஹபீஸ், 2008ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலின் மூளையாகக் கருதப்படுகிறார். இந்த பயங்கரவாத தாக்குதலில் ஆறு அமெரிக்கர்கள் உள்பட மொத்தம் 166 பேர் கொல்லப்பட்டனர்.
 
பாகிஸ்தானில் தற்போது அசாதாரண அரசியல் சூழல் நிலவுகிறது. அந்நாடு பயங்கரவாத செயல்களுக்கு நிதி வழங்கிவருவதாக சர்வதேச நிதி அமைப்புகள் பாகிஸ்தானை கிரே பட்டியலில் வைத்துள்ளன. இதன் காரணமாக அந்நாடு பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துவருகிறது. இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிரக்கட்சிகள் ஒன்று திரண்டு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளனர்.
 
வாக்கெடுப்புக்கு முன்னதாக நாடாளுமன்றத்தை களைப்பதாக இம்ரான் கான் உத்தரவிட்டார். இந்த உத்தரவு செல்லாது என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், ஏப்ரல் 10ஆம் தேதி காலை நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இந்த வாக்கெடுப்பில்தான் இம்ரான் கானின் அரசியல் எதிர்காலமும், பாகிஸ்தான் அரசியலின் அடுத்தகட்ட நகர்வுகளும் முடிவு செய்யப்படும்.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top