இரவு நேர ரத்த சர்க்கரையின் அளவு குறைவால் ஏற்படும் பாதிப்பிற்கான நிவாரண சிகிச்சை

இரவு நேர ரத்த சர்க்கரையின் அளவு குறைவால் ஏற்படும் பாதிப்பிற்கான நிவாரண சிகிச்சை

இன்றைய தேதியில் எம்மில் பலரும் சர்க்கரை நோயாளிகளாகவும், பலர் சர்க்கரை நோய் வருவதற்கான அறிகுறி உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். இந்நிலையில் சர்க்கரை நோயாளிகள், ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தாலும், அவர்களில் சிலருக்கு இரவு நேரத்தில் சர்க்கரையின் அளவில் சமச்சீரற்ற தன்மை ஏற்பட்டு பாரிய பாதிப்புக்குள்ளாகிறார்கள். இந்நிலையில் இது குறித்து கூடுதல் விவரங்களை அறிந்துகொள்வதற்காக சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர். H.ராஜேஷ் கிருஷ்ணன், MBBS., FID.(Dia) சந்தித்தோம்.

Nocturnal Hypoglycemia எனப்படும் இரவு நேர ரத்த சக்கரை அளவில் குறைபாடு ஏற்படுவதன் மருத்துவ ரீதியிலான விளக்கம் என்ன?
 
பொதுவாகவே சர்க்கரை நோயாளிகளுக்கு அவர்களின் ரத்த சர்க்கரையின் அளவில் ஏற்படும் மாற்றம் குறித்த முழுமையான விழிப்புணர்வு இருப்பதில்லை. அதிலும் குறிப்பாக இரவு நேரத்தில் உறங்கும்போது அவர்களுடைய உடலில் தேவையான ரத்த சர்க்கரையின் அளவு குறித்து முழுமையாக அறிந்து வைத்திருப்பதில்லை. ஆனால் சர்க்கரை நோயாளிகளில் 50 சதவீதத்தினருக்கு இரவு நேரத்தில் உறங்கும்போது தேவையான ரத்த சர்க்கரையின் அளவில் குறைபாடு ஏற்பட்டு அதற்குரிய பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். அவர்கள் வழக்கம்போல் இரவு நேரத்தில் மருத்துவர்கள் பரிந்துரைத்த மாத்திரையை சாப்பிட்டு விட்டு, உறங்கச் சென்று விடுகிறார்கள். வேறு சில சர்க்கரை நோயாளிகள் சுயமாகவே மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வதை நிறுத்திக்கொண்டு உறங்கச் சென்று விடுவார்கள். இவர்களுக்கு இரவு நேரத்தில் ரத்த சர்க்கரையின் அளவில் சமச்சீரற்ற தன்மை ஏற்பட்டு, அதனால் உடலியல் சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள். இதனை மருத்துவ மொழியில் நோக்டர்னல் ஹைபோக்ளைஸீமியா ( Nocturnal Hypoglycemia) என்ற இரவு நேர ரத்த சர்க்கரை அளவு குறைபாடு என‌ வகைப்படுத்துவார்கள்.

இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருப்பதன் அறிகுறிகள் என்ன?
 
தூக்கமின்மை, அமைதியற்ற தூக்கம், எரிச்சலூட்டும் உறக்கம், இயல்பான அளவைவிட கூடுதலாக இரவில் வியர்த்தல், கை கால்களில் நடுக்கம் ஏற்படுதல், ‌சீரற்ற சுவாசம், சீரற்ற இதயத்துடிப்பு, அருகில் உறங்கிக் கொண்டிருப்பவரை அபாயகரமான வகையில் எழுப்புதல்... போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உங்களுக்கு இரவு நேரத்தில் ரத்த சர்க்கரையின் அளவு குறைகிறது என உணர்ந்து, உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, அவரின் வழிகாட்டல்களை முழுமையாக பின்பற்ற வேண்டும். இதனை புறக்கணித்தாலோ அல்லது அலட்சியப்படுத்தினாலோ பாதிப்பு தீவிரமடைந்து, சர்க்கரை நோயாளிகள் கோமா நிலைக்கு சென்று விடக்கூடிய அபாயம் உண்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சிலருக்கு பாதிப்பு தீவிரமடைந்தால் திட உணவுகளை உண்பதற்கும், திரவ ஆகாரங்களை பருகுவதற்கும் சிரமப்படுவார்கள். அவர்களுக்கு வலிப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்புண்டு. சிலருக்கு மன நிலையில் மாற்றம் ஏற்பட்டு, செய்வது அறியாது திகைத்து நிற்பர். வேறு சிலர் இத்தகைய பாதிப்பின் காரணமாக உரத்து அழுவர். 
 
சர்க்கரை நோயாளிகள் என்னென்ன காரணங்களால் இதற்கு ஆளாகிறார்கள்?
 
டைப் 1 மற்றும் டைப் 2 சர்க்கரை நோயாளிகளாக இருந்து, ரத்த சர்க்கரையின் அளவை முழுமையான கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்காக மருத்துவர்கள் அறிவுரையுடன் சிகிச்சை எடுத்துக் கொண்டு வருபவர்கள், வழக்கமாக சாப்பிடும் இரவு உணவை தவிர்ப்பது அல்லது இரவு உணவை தாமதமாக சாப்பிடுவது அல்லது போதுமான அளவு கார்போஹைட்ரேட் சத்துள்ள உணவை சாப்பிடாது இருப்பது, இரவு உணவிற்குப் பிறகு சற்று கூடுதலாக உடற்பயிற்சியை மேற்கொள்வது, மருத்துவர்களின் அறிவுரை மாறாக மது அருந்துவது, ஏதேனும் காய்ச்சல் அல்லது தொற்று பாதிப்பின்  காரணமாகவும் இத்தகைய பாதிப்பு  ஏற்படும்.
 
இவர்களுக்கு என்ன பரிசோதனைகளை செய்து இந்தப் பாதிப்பை உறுதிப்படுத்துவீர்கள்.?
 
வழக்கமான ரத்த சர்க்கரையின் அளவு குறித்த பரிசோதனையுடன், இரவு நேரத்தில் உறங்குவதற்கு முன்னர் அவர்களின் ரத்த சர்க்கரையின் அளவு குறித்த பரிசோதனை மேற்கொள்வர். சிலருக்கு ஒரு வார காலத்திற்கும், வேறு சிலருக்கு ஒரு மாத காலம் வரைக்கும் இத்தகைய பரிசோதனை நடைபெறும். பரிசோதனையின் மூலம் கிடைக்கும் முடிவுகளை வைத்து அவர்களின் ரத்த சர்க்கரையின் அளவு சீரான நிலையில் இருப்பதற்கான மருந்து மாத்திரைகளை மருத்துவர்கள் வழங்குவார்கள். அத்துடன் இத்தகைய பாதிப்பு வராமல் தடுப்பதற்கான ஆலோசனைகளையும் வழங்குவார்கள்.
 
நீங்கள் வழங்கக்கூடிய ஆலோசனையும், சிகிச்சையும் என்ன?
 
இரவு நேரத்தில் நேரம் தவறாமல் உணவு உட்கொள்ள வேண்டும். இரவு நேரத்தில் ரத்த சர்க்கரையின் அளவைப் பரிசோதித்து, அதற்கேற்ப மருத்துவர்கள் பரிந்துரைத்த உணவை சாப்பாட்டுடன் இணைத்துக்கொள்ள வேண்டும். இரவு உணவு உண்ட பிறகு நீண்ட நடைப் பயிற்சி மேற்கொள்வது அல்லது சிறிய அளவிலான உடற்பயிற்சியை மேற்கொள்வது முற்றாக தவிர்க்கப்பட வேண்டும். மது அருந்துவதை முற்றாக கைவிட வேண்டும். ரத்த சர்க்கரையின் அளவு மற்றும் இரவு நேர இரத்த சக்கரையின் அளவு பரிசோதனையை உறுதியாக நாளாந்தம் மேற்கொள்ள வேண்டும். மேலும் இரவு நேரத்தில் ரத்த சர்க்கரையின் அளவில் குறைபாடு ஏற்பட்டால், அதற்காக அச்சப்படாமல் மருத்துவர்கள் பரிந்துரைத்த வழிமுறைகளை உறுதியாக பின்பற்ற வேண்டும். இந்த ஆலோசனைகளை முறையாக கடைப்பிடித்தால், இரவு நேரத்தில் ரத்த சர்க்கரையின் அளவில் ஏற்படும் குறைபாட்டை முழுமையாக களையலாம். இதன்மூலம் ஆரோக்கியமான இரவுநேர உறக்கத்தை உறுதிப்படுத்தி கொள்ளலாம். ஆழ்ந்த உறக்கமும், ரத்த சர்க்கரையின் அளவும் சீரடைவதால் நோயாளிகளின் ரத்த சர்க்கரையின் அளவு முழுமையான கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர இயலும். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 0091 44 4680 5544 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
 
சந்திப்பு: அனுஷா

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top