ரத்த சர்க்கரையின் அளவை துல்லியமாக கண்டறியும் HbA1c பரிசோதனை!

ரத்த சர்க்கரையின் அளவை துல்லியமாக கண்டறியும் HbA1c பரிசோதனை!

இன்றைய தேதியில் இளைய தலைமுறையினரும் கூட ஆரோக்கியம் குறித்து விவாதிக்க தொடங்கியிருக்கிறார்கள். இதில் தவறாமல் அவர்களுடைய ரத்த சர்க்கரையின் அளவு குறித்த பேச்சும் இடம் பெறுகிறது. ஒவ்வொரு 30 நிமிடத்திற்கு உலகளவில் புதிதாக ஒரு சர்க்கரை நோயாளி உருவாகிறார் என அண்மைய ஆய்வின் மூலம் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதனால் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கான விவரங்களை அறிந்து கொள்வதில் இளைய தலைமுறையினர் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரும் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்நிலையில் ரத்த சர்க்கரையின் அளவை கண்டறிய சர்க்கரை நோய் நிபுணர்கள் பரிந்துரைக்கும் HbA1c என்ற பரிசோதனை குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்வதற்காக சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர். ராஜேஷ் கிருஷ்ணன் அவர்களை சந்தித்தோம்.

சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன..?
 
பரம்பரை மற்றும் மரபியல் காரணிகளால் இவை வரக்கூடும். முதுமையின் காரணமாகவோ காய்ச்சலின் காரணமாகவோ அல்லது குறிப்பிட்ட மருந்துகளை தொடர்ச்சியாக பயன்படுத்துவதாலும் இத்தகைய சர்க்கரை நோய் ஏற்படக்கூடும். அதே தருணத்தில் ஒரு காலகட்டத்தில் எம்மில் சிலருக்கு உண்டாகும் சர்க்கரை நோய், ஆயுள் முழுவதும் அவர்களுக்கு நீடிக்கும் என உறுதியாக கூற இயலாது. குறிப்பாக சில மருந்துகளின் பக்க விளைவாக ஏற்படும் சர்க்கரை நோய், அந்த மருந்தை மருத்துவர்களின் அறிவுரையுடன் பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ளும் பொழுது சர்க்கரை நோய் குணமாகும். மேலும் சில வகையினதான சர்க்கரைநோய் சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகு குணமாகக் கூடும். மேலும் பெண்களுக்கு பேறு காலத்தின் போது உண்டாகும் சர்க்கரை நோய் அவர்களின் பிரசவத்திற்குப் பிறகு இயல்பான நிலைக்கு திரும்பிவிடும். அதேபோல் பெண்களுக்கு முதல் பிரசவத்தின் போது ஏற்படும் சர்க்கரைநோய் அடுத்த பிரசவத்தின் போதும் ஏற்படலாம். அதன் பிறகு அவை மீண்டும் இயல்பான நிலைக்கு திரும்ப கூடும். அதனால் எம்மில் பலரும் அவர்களின் ரத்த சர்க்கரையின் அளவு இயல்பான அளவை விட அதிகரித்து விட்டால்... அதற்காக அச்சம் கொள்ளத் தேவையில்லை. இதுதொடர்பாக சர்க்கரை நோய் நிபுணரை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற்றால் ஆயுள் முழுவதும் சர்க்கரையின் அளவை முழுமையான கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள இயலும்.
 
சர்க்கரை நோய் ஏற்பட்டால் பாதிப்பு ஏற்பட்டால், ஆயுள் முழுவதும் தொடர்ந்து மருந்துகளை சாப்பிட வேண்டியதிருக்குமா...?
 
நிச்சயமாக இல்லை. உங்களின் ரத்த சர்க்கரை அளவை HbA1c என்ற பரிசோதனைக்கு பிறகு துல்லியமாக அவதானித்து. அதனை கட்டுப்படுத்துவதற்குரிய வழிகாட்டல்களை உங்களது மருத்துவர் பரிந்துரைப்பார். குறிப்பாக வாழ்க்கை நடைமுறை மாற்றம், உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, உணவு முறை ஆகியவற்றை நீங்கள் உறுதியாக பின்பற்றி, ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள முடியும். காய்ச்சல், கொரோனாத் தொற்று பாதிப்பு போன்ற வேறு சில காரணங்களால் ரத்த சர்க்கரையின் அளவு அதிகரித்து சர்க்கரை நோய் ஏற்பட்டால், அதனை மருந்துகளின் மூலம் கட்டுப்படுத்தலாம்.இதன்போது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள், குறிப்பிட்ட காலகட்டம் வரை தற்காலிகமாக பயன்படுத்தலாம். ரத்த சர்க்கரையின் அளவு மீண்டும் இயல்பான நிலைக்கு திரும்பிவிட்டால்., மருந்துகளை பயன்படுத்துவதை கைவிடலாம். மேலும் சர்க்கரை நோய் குறித்த காரணமற்ற= தேவையற்ற பயம் தான் அதன் முதல் எதிரி. சர்க்கரை நோய் ஏற்பட்டால் ஆயுள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டும் என்ற நிலை தற்போது இல்லை. ஏராளமான நவீன மருந்துகள் அறிமுகமாகி, நோயாளிக்கு நல்ல பலனை வழங்கி வருகிறது. முதுமையின் காரணமாக உண்டாகும் நீரிழிவு நோய்க்கு மருந்து மூலம் தீர்வு காண்பதுதான் சரியானது.
 
பேறுகாலத்தின் போது பெண்களுக்கு அதிகரிக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த இன்சுலின் ஊசியை செலுத்துகிறார்கள். இதுகுறித்து...?
 
பெண்கள் கருவுற்றிருக்கும் காலத்தில் அவர்களுக்கு அதிகரிக்கும் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த இன்சுலின் பயன்படுத்துவது சரியானதுதான். ஏனெனில் சில பெண்களுக்கு அதிகரித்திருக்கும் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதற்காக மருத்துவர்கள் வழங்கும் மருந்துகள் எதிர்பார்த்த பலனை வழங்காத நிலையில், இன்சுலின் மூலம் தான் அவர்களின் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த இயலும். இத்தகைய தருணத்தில் இன்சுலின் செலுத்துவது தான் பாதுகாப்பானது. வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு எத்தகைய பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது என்பதும் ஆய்வின் மூலம் உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது. அதே தருணத்தில் கருவுற்றிருக்கும் பெண்களின் முதல் மூன்று மாதத்திற்கு ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த இன்சுலின் ஊசியை மருத்துவர்கள் பரிந்துரைப்பதில்லை. பெண்களின் இரண்டாவது மூன்று மாதம் மற்றும் மூன்றாவது மூன்று மாத கரு வளர்ச்சியின் போது வயிற்றில் வளரும் குழந்தைகளின் வளர்ச்சியை உறுதிப்படுத்தவும், சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும் இன்சுலின் பயன்படுத்தப்படுகிறது. குழந்தை பிரசவித்த பிறகு அப்பெண்களுக்கு ரத்த சர்க்கரையின் அளவு இயல்பான நிலையில் இருக்கும். அவர்களுக்கு இன்சுலினின் தேவை ஏற்படுவதில்லை. மேலும் கட்டுப்படுத்தப்படாத ரத்த சர்க்கரை அளவின் காரணமாக பாதங்களில் ஏற்படும் புண்களை மருந்துகளின் மூலம் குணப்படுத்துவதற்காக மருத்துவர்கள் அவர்களுக்கு இன்சுலினை பயன்படுத்த பரிந்துரைப்பார்கள். இவர்களுக்கும் காலில் உள்ள புண்கள் ஆறும் வரை தற்காலிகமாக இன்சுலின் பயன்பாடு நீடிக்கும். இந்த தருணத்தில் கால்களில் ஏற்படும் புண்களை குணமடைய இன்சுலின் நல்லதொரு பலனை அளிக்கிறது. மருந்துகள், இன்சுலின் ஆகியவை இருந்தாலும் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த வாழ்க்கை நடைமுறை மாற்றம் அவசியம் என்பதை எப்போதும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
 
hba1c என்ற பரிசோதனையின் அவசியம் குறித்து..?
 
பொதுவாக எம்மில் பலருக்கும் ரத்த சர்க்கரையின் அளவு குறித்த பரிசோதனை என்றால், காலையில் எழுந்தவுடன் எதுவும் சாப்பிடாத நிலையில் கை விரலிலிருந்து ஒரு துளி ரத்தத்தை எடுத்து பரிசோதிப்பதும், பிறகு சாப்பிட்ட பின் ஒன்றரை மணிநேரம் கழித்து மீண்டும் ஒரு துளி ரத்தத்தை எடுத்து பரிசோதிப்பதும் தான் தெரிந்திருக்கும். இத்தகைய பரிசோதனையின் முடிவுகள் நோயாளியின் அன்றைய திகதியில் அவர்களுடைய ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மட்டும் அறிய முடிகிறது. இந்த பரிசோதனையின் முடிவைப் வைத்து ஒருவர் சர்க்கரை நோயாளி என தீர்மானிப்பது பல தருணங்களில் தவறாகி விடுகிறது. இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது தான் HbA1c பரிசோதனை. எம்முடைய ரத்த தட்டணுக்களில் ஹீமோகுளோபின் என்ற இரும்பு சத்தும், புரத சத்தும் இணைந்த மூலக்கூறுகள் உள்ளன. இவை நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள ஓக்ஸிஜனை உடலெங்கும் ஒவ்வொரு செல்களுக்குள்ளும் எடுத்துச் செல்வதில் முக்கிய பங்காற்றுகின்றன. இவை நாம் சாப்பிடும் உணவிலிருந்து குளுக்கோஸ் எனப்படும் சர்க்கரை சத்தை உறிஞ்சி, அதனை ஒவ்வொரு செல்களுக்கு எடுத்துச் செல்லும் பணியையும் செய்கிறது. இதனை மருத்துவத் துறையினர் Glycosylated Hemoglobin என குறிப்பிடுகிறோம். இவற்றின் ஆயுள் மூன்றிலிருந்து நான்கு மாதங்கள் என்பதால், இதனை பரிசோதித்து எம்முடைய ரத்த சர்க்கரையின் அளவை உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள். இத்தகைய பரிசோதனையின் போது எம்முடைய உடலில் கடந்த மூன்று மாத கால ரத்த சர்க்கரையின் அளவு எந்த நிலையில் இருந்தது என்பதனை கண்டறியலாம். மேலும் இதன் அளவு 6 சதவீதம் மற்றும் அதற்கு குறைவாக இருந்தால் சர்க்கரையின் அளவு இயல்பான நிலையில் இருக்கிறது என அறிந்து கொள்ளலாம். 6 சதவீதத்திற்கு மேலிருந்தால் சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வை பெற்றுக்கொண்டு, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வழிமுறையை உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும். நோயாளிகள், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வழிகாட்டலைப் பின்பற்றி உறுதியாகப் பின்பற்றினால் மூன்று மாதத்திற்கு பிறகு மீண்டும் ஒருமுறை இத்தகைய பரிசோதனை செய்து உங்களின் ரத்த சர்க்கரையின் அளவை தெரிந்துகொள்ளலாம். அதன்போது சதவீதம் குறைந்திருந்தால் மகிழ்ச்சியுடன் அதே கட்டுப்பாட்டில் ஆரோக்கியத்துடன் வாழ இயலும்.
 
இந்த பரிசோதனையை மேற்கொள்ளாவிட்டால் எத்தகைய பின்விளைவு ஏற்படக்கூடும்..?
 
தற்போது இந்த பரிசோதனை எளிமைப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு நாளில் எந்த தருணத்தில் வேண்டுமானாலும் இத்தகைய பரிசோதனையை மேற்கொள்ளலாம். பரிசோதனையின் முடிவுகளில் துல்லியம் இருப்பதால், சர்க்கரை நோய் குறித்த முழுமையாக புரிந்து கொள்ள இயலும். மேலும் இத்தகைய பரிசோதனையை மேற்கொள்ளாதிருந்தால், அவர்களுக்கு ரெட்டினோபதி எனப்படும் கண் பார்வை திறன் தொடர்பான பாதிப்பு, டயாபட்டிக் நெஃபரோபதி எனப்படும் சிறுநீரகம் தொடர்பான கோளாறுகள், நியூரோபதி எனப்படும் நரம்பியல் மற்றும் நரம்பு மண்டலம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படக்கூடும். மேலும் சிலருக்கு அவர்களில் பாதங்களில் கூட பாதிப்பு ஏற்படக்கூடும்.  மேலும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் 0091 44 4680 5544 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
 
சந்திப்பு: அனுஷா

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top