இளவயதினரை அதிகமாகத் தாக்கிவரும் இருதயநாள அடைப்பு!

இளவயதினரை அதிகமாகத் தாக்கிவரும் இருதயநாள அடைப்பு!

“மருத்துவ விஞ்ஞானம் புதிய புதிய சிகிச்சைகளைக் கண்டுபிடித்துக்கொண்டே இருந்தாலும், அதற்கு இணையாக புதிய புதிய சவால்களும் தோன்றியவாறே இருக்கின்றன. இருதய நாள அடைப்பு நோயும் அவ்வகையானதே” என்கிறார் டாக்டர். மோகன கிருஷ்ணன். MS., MCH. இவர், வேலம்மாள் மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை தலைமை மருத்துவர். அட்வென்சருக்காக அவரைச் சந்தித்தபோது, இருதய நாள அடைப்பு நோய் பற்றி அவர் கூறிய தகவல்களை வாசகர்களாகிய உங்களுக்குத் தருகிறோம்.

“இருதய நாள அடைப்பு நோய் என்று நீங்கள் இதைக்கூறினாலும், இது நோயே அல்ல என்றுதான் மருத்துவத்துறை இதுவரை காலமும் நம்பி வந்தது. காரணம், அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களே இருதய நாள அடைப்பினால் பாதிக்கப்பட்டு வந்தார்கள். எனவே, இது வயது முதிர்ச்சியின் ஒரு விளைவு - அதாவது, வயது போகப்போக உடலில் ஏற்படும் மாற்றங்களில் ஒன்று - என்றுதான் மருத்துவத்துறை எண்ணியிருந்தது.

“ஆனால் இன்று, ஆண்- பெண் வேறுபாடின்றி முப்பது, நாற்பது வயதினரும் சர்வசாதாரணமாக இந்நோயால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே, இது நிச்சயமாக ஒரு நோய்தான் என்று தற்போது நிரூபணமாகியுள்ளது. குறிப்பாக, இனப்பெருக்கப் பருவத்தில் உள்ள பெண்களுக்கு இந்த நோய் ஏற்பட வாய்ப்பே இல்லை என்ற நிலையே இதுவரை இருந்தது. ஆனால், இன்று அதிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில், இதற்கு என்ன காரணம் என்பதைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

“இருதய நாள அடைப்பு நோய்க்கான காரணங்களை நாம் மூன்று வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, மாற்ற முடியாத காரணம். இரண்டாது, சில அம்சங்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருப்பது. மூன்றாவது, முற்றாக நிறுத்தப்படவேண்டிய சில அம்சங்களைத் தொடர்ந்தும் செய்து வருவது. இவை பற்றித் தனித்தனியே பார்க்கலாம்.

“இருதய நாள அடைப்பு நோய் மரபணுக்கள் மூலம் பரம்பரைக்குக் கடத்தப்படக்கூடிய ஒரு நோய். இதை மாற்ற முடியாத காரணியாகச் சொல்லலாம். அதீத இரத்த அழுத்தம் மற்றும் அதீத கொழுப்புச் சத்து என்பன இந்நோய்க்கு முக்கிய காரணங்கள். இந்த இரண்டையும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடிந்தால் இந்நோயைத் தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் கிட்டும். முற்றாக நிறுத்தப்படவேண்டிய புகைத்தல், உணவுக் கட்டுப்பாடின்மை என்பவற்றை அலட்சியம் செய்வது மிக முக்கியமான காரணமாகும்.

“கணினிசார் தொழில்கள் பெருகிவிட்டதால், ஏராளமானோர் உடலை வருத்தி வேலை செய்வதற்கான வாய்ப்புகள் குறைந்து விட்டன. மேலும், நேர இலக்குகளை மையமாக வைத்தே அவர்களது பணிகளும் அமைவதால், மன அழுத்தத்தை அவர்களால் தவிர்க்க முடிவதில்லை. மன அழுத்தத்தைப் போக்குவதாகச் சொல்லி புகைபிடிக்க ஆரம்பிக்கிறார்கள். இரவுநேரப் பணியும் இன்று பரவலாகச் செய்யப்பட்டுவருகிறது. இதன்போது உணவுக் கட்டுப்பாடு அலட்சியம் செய்யப்படுகிறது. அதிக கலோரிகள் செறிந்த உணவு வகைகளைச் சாப்பிடுகிறார்கள். இதனால் உடல் எடை அதிகரிக்கிறது. இவையனைத்தும் சேர்ந்து இருதய நாளங்களைக் குறிவைத்துத் தாக்குகின்றன.

“இது ஒரு நோயே அல்ல, வயது முதிர்ச்சியின் ஒரு அங்கம் என்று நான் முன்னரே குறிப்பிட்டேன் அல்லவா? அதன்படி பார்த்தோமானால், இருதய நாள அடைப்புக்கு சிகிச்சைகள் என்று எதுவும் இல்லை. அதை வரவிடாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்துமே சிகிச்சைகள் என்ற பதத்துக்குள் வந்துவிடுகின்றன. அப்படியே இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குக்கூட, அதற்கான காரணங்களை ஆராய்ந்து அவற்றைக் கட்டுப்பாட்டில் வைப்பது எப்படி என்று சொல்லித் தருவதே சிகிச்சையாக அமைகிறது.

“பொதுவாக, மூன்று வயது முதலே உணவுகள் மூலம் உள்ளெடுக்கப்படும் மேலதிக கொழுப்புச்சத்து சேகரிக்கப்பட ஆரம்பிக்கிறது. இதனால், இளவயதிலேயே உடல் பருமனால் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் தமது உடல் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வதற்காக எடுக்கும் முயற்சிகள் இருதய நாள அடைப்பு நோயைத் தள்ளிப்போட உதவும். எனவே, இதற்கான சிகிச்சைகள் என்பதைவிட, இதை வரவிடாமல் தவிர்ப்பதிலேயே மக்கள் கவனம் செலுத்த வேண்டும்.

“இன்றைய இளம் தலை முறையினர் உடற்பயிற்சிக்கு என்று தனியே நேரம் ஒதுக்கி அதில் ஈடுபட்டு வருவது பாராட்டுக்குரியதே! என்ற போதும், உடல் எடையைக் குறைப்பதற்கு உடற்பயிற்சிகள் மட்டும் போதாது. உணவுக்கட்டுப்பாடு மிகமிக அவசியம். உடற்பயிற்சியில் அவர்கள் காட்டும் ஆர்வத்தை உணவுக்கட்டுப்பாட்டிலும் செலுத்த வேண்டும். அப்போதுதான் அவர்கள் எதிர்பார்க்கும் முழுமையான பலன் கிடைக்கும்.

“சுருக்கமாகச் சொல்வதானால், இருதய நாள அடைப்பு நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதைவிட அதை வரவிடாமல் தவிர்ப்பதே சிறந்தது. இதற்கான முயற்சிகள் இளம் வயதில் இருந்தே மேற்கொள்ளப்படுவது மிகமிக அவசியம். தேர்ந்தெடுத்த உணவுகளை ஒரு கட்டுப்பாட்டில் உட்கொள்ள வேண்டும். அடுத்து, போதியளவு உடற்பயிற்சிகளைச் செய்யவேண்டும். குறைந்த பட்சம், நாளொன்றுக்கு ஐந்து கிலோ மீட்டர் தூரமாவது நடப்பது அவசியம். உடல் எனும் இயந்திரம் ஓய்வே இன்றி உழைத்து வருகிறது. அதற்கு ஓய்வு கொடுக்கவும் முடியாது. அப்படியானால், அதன் இயக்கத்தில் ஏற்படக்கூடிய தடைகள், சிரமங்களைக் குறைக்க வேண்டும். அதற்கு உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் அவசியம். அவற்றைச் சீராகச் செய்து வந்தாலே போதும், இருதய நாள அடைப்பு நோய் மட்டுமன்றி, பல்வேறு நோய்களையும் முற்றாகத் தவிர்த்துவிட முடியும்.”

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top