அற்றோபிக் ரைனிடீஸ் என்ற நாசியழற்சி பாதிப்பிற்குரிய நிவாரண சிகிச்சை

அற்றோபிக் ரைனிடீஸ் என்ற நாசியழற்சி பாதிப்பிற்குரிய நிவாரண சிகிச்சை

இன்றைய திகதியில் எம்மில் பலருக்கும் கொரோனாத் தொற்று பாதிப்புக்கு பிறகு நாசியழற்சி பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக 20 வயது முதல் 50 வயதிற்குட்பட்ட ஆண், பெண் என இருபாலாருக்கும் இத்தகைய பாதிப்பு ஏற்படுவது அதிகரித்திருக்கிறது. அண்மைய ஆய்வின் படி உலகளவில் பத்து மில்லியன் மக்கள் இத்தகைய பாதிப்பிற்கு ஆளாகியிருப்பதாக கண்டறியப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்வதற்காக காது-மூக்கு-தொண்டை சத்திர சிகிச்சை நிபுணரான டொக்டர் வேணுகோபால், M.S., அவர்களை சந்தித்தோம்.

அற்றோபிக் ரைனிடீஸ் என்ற நாசியழற்சி பாதிப்பு குறித்து..?
 
எம்முடைய மூக்கின் உட்பகுதியில் இயல்பாக அமையப்பெற்றிருக்கும் ரத்தநாளங்கள், திசுக்கள் உள்ளிட்டவற்றின் செயல்பாட்டில் ஏற்படும் இயங்கா தன்மையையே அற்றோபிக் ரைனிடீஸ் என குறிப்பிடலாம். இது ஒரு நாட்பட்ட பாதிப்பின் விளைவாகும். எம்முடைய மூக்கின் உட்பகுதியில் இன்டீரியர் டர்பினேட், மிடில் டர்பினேட், சுப்பீரியர் டர்பினேட் என்ற மூன்று வகையான  தன்னிச்சையாக சுருங்கி விரியும் தன்மையுடன் கூடிய மென் திசு படலம் இருக்கிறது. இதன் மூலம் சுவாசிக்கும் காற்று உள்ளிழுத்து வெளியே விடும் செயல் நடைபெறுகிறது. பாக்டீரியாத் தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த திசு படலம் பாதிக்கப்பட்டு, செயல்படாத நிலையே அற்றோஃபிக் ரைனிடீஸ் என வகைப்படுத்தலாம். 
 
இத்தகைய பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?
 
பொதுவாக அற்றோபிக் ரைனிடீஸ் பாதிப்பு பிரைமரி, செகண்டரி என இரண்டு வகையாக ஏற்படும். இவற்றில் பிரைமரி பாதிப்பு ஏற்படுவதிலும் இரண்டு வகையுண்டு. இதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய பிரத்யேக காரணங்கள் இல்லை என்றாலும், பிரைமரி பாதிப்பு ஏற்படுவதற்கு பரம்பரை மரபணுவில் நிகழும் மாற்றம் ஒரு காரணம். என்டோகிரைன் சுரப்பிகள் எனப்படும் பாரா தைராய்ட் சுரப்பிகளின் செயல்பாட்டில் ஏற்படும் சமச்சீரற்ற தன்மை காரணமாகவும் இவை உருவாகக்கூடும். ஊட்டச்சத்து குறைபாடு, இரும்பு சத்து குறைபாடு போன்றவற்றின் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். சிலருக்கு மூக்கு பகுதியில் வேறு ஏதேனும் சத்திரசிகிச்சை மேற்கொண்டிருந்தால்.., அதன் பக்க விளைவாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். தொழுநோய், சிபிலிஸ் எனப்படும் தொற்றுநோய், காசநோய், ரைனோசிலிரிமா, மையோஸிஸ்  போன்ற நாட்பட்ட பாதிப்புகள் இருந்தாலும், இத்தகைய பிரச்சனை உண்டாகும். மூக்குப் பகுதியில் கதிர்வீச்சு சிகிச்சை மேற்கொண்டாலும் இத்தகைய பாதிப்பு சிலருக்கு ஏற்படக்கூடும்.

எம்மாதிரியான அறிகுறிகளின் மூலம் இதனை தெரிந்துகொள்ளலாம்.?
 
மூக்கடைப்பு, சுவாசிப்பதில் சீரற்ற நிலையை உணரும் நிலை, சுவாசம் இயல்பாக நடைபெறாததால் வெளியே இருந்து உள்ளே செல்லும் அழுக்குகள் அங்கே தேங்கும் நிலை ஏற்பட்டு, சிலருக்கு வலி கூட ஏற்படலாம். இதன் காரணமாக சுவாசத்திணறல் ஏற்படும். துர்நாற்றம் ஏற்படலாம். வாசனை நுகரும் திறனை இழக்கலாம் அல்லது கணிசமாகக் குறையலாம். தொண்டை வறண்டு போகும். மூக்கின் மெல்லிய தண்டு பகுதியில் நாட்பட்ட பாக்டீரியா தொற்று பாதிப்பின் காரணமாக சிறிய அளவிலான துளை ஏற்படக்கூடும். சிலருக்கு கண்களில் நீர் சுரந்து கொண்டே இருக்கும். வேறு சிலருக்கு இதன் காரணமாக பிரத்யேக தலைவலி ஏற்படலாம். 
 
எம்மாதிரியான சோதனைகளை மேற்கொண்டு இத்தகைய பாதிப்பை உறுதிப்படுத்துவர்?
 
திசு பரிசோதனை மூலமே இதனை உறுதிப்படுத்துவார்கள். பிரைமரி பாதிப்பா? அல்லது செகண்டரி பாதிப்பா..? என்பதையும், அங்கு ஏற்பட்டிருக்கும் நோயின் தன்மை குறித்தும் இதன் மூலம் துல்லியமாக அவதானிக்கலாம். மேலும் சிலருக்கு பாதிப்பை அறிந்துகொள்ள சி டி ஸ்கேன், எக்ஸ்ரே பரிசோதனை, எம்ஆர்ஐ பரிசோதனை போன்றவையும் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். நாசல் ஸ்வாப் எனப்படும் மூக்கில் உள்ள சளி பரிசோதனை செய்து, அங்கு எம்மாதிரியான பாக்டீரியா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதையும் அவதானிப்பார்கள்.
 
இதனை களைவதற்கான சிகிச்சை என்ன?
 
மூக்கின் பகுதியில் உள்ள வறண்ட தன்மை காரணமாகவும், அதிலிருந்து வெளியாகும் துர்நாற்றத்தில் காரணமாகவும் இவர்களுக்கு அதற்குரிய முழுமையான நிவாரண சிகிச்சை வழங்கப்படுகிறது. நாசல் வாஷ் எனப்படும் மூக்கை பிரத்தியேகமாக சுத்திகரிக்கும் சிகிச்சையை முதற்கட்ட நிவாரண சிகிச்சையாக மேற்கொள்வர்.  ஈஸ்ட்ரோஜன் தெரபி, டிராப்ஸ் எனப்படும் மூக்கில் இடுவதற்கான திரவநிலை சொட்டு மருந்துகள், இத்தகைய சிகிச்சையின் காரணமாக மூக்கின் உட்பகுதியில் அமையப்பெற்றுள்ள திசுக்கள் போதிய சத்துக்களை பெற்று சீராக இயங்குவதற்கான சூழல் உருவாக்கப்படுகிறது. மிகச் சிலருக்கு மட்டுமே பாதிப்பின் தன்மை, வயது, உடலியக்கக் கோளாறுகள் ஆகியவற்றை அவதானித்து யங்'ஸ் சத்திரசிகிச்சை, லாடன் ஸ்லெகர்'ஸ் சத்திரசிகிச்சை, வில்சன் மற்றும் விட்மேக்'ஸ் சத்திரசிகிச்சை போன்ற சத்திர சிகிச்சைகள் மூலம் முழுமையான நிவாரணம் வழங்கப்படுகிறது. இத்தகைய சத்திரசிகிச்சையின் போது மூக்கின் ஒரு பகுதியை தற்காலிகமாக மூடி விடுவர். இதன் பிறகு மருத்துவரின் தொடர் அவதானிப்பில் நீங்கள் இருப்பீர்கள். நான்கு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அங்கு இயல்பான தன்மை ஏற்பட கூடிய வாய்ப்பு உருவாகும். மேலும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 0091 44 3994 2517 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
 
சந்திப்பு: அனுஷா

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top