தொழுநோயை கட்டுப்படுத்தும் மல்டி டிரக் தெரபி!

தொழுநோயை கட்டுப்படுத்தும் மல்டி டிரக் தெரபி!

‘தொழு நோய் ஒரு வகை கிருமியால் வருகிறது. காற்றின் மூலம் பரவுகிறது. ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் இனப்பெருக்கத்திற்கு பின் வெளியே தெரிய ஆரம்பிக்கிறது. அது முக்கியமாக தோலையும், நரம்புக்களையும் பாதிக்கிறது. 

அதனால் மூக்கு சப்பையாகி, காதுமடல் தடித்து, கை விரல்கள், கால்விரல்கள் மடங்கி போய் குறைந்து போதல் போன்ற ஊனங்கள் ஏற்பட்டு அவலட்சணமான தோற்றமுடையவர்களாக மாறிவிடுகிறார்கள். தகுந்த தோல்நோய் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று, தொடர் சிகிச்சையைப் பெற்றால். இதனை முழுமையாக கட் டுப்பாட்டில் வைத்துக்கொண்டே குணப்படுத்தி விடலாம்.’ என்று தொழுநோயைப் பற்றி பேசத் தொடங்குகிறார் டாக்டர். செந்தில் குமார்.

இவர் மதுரை அரசு பொது மருத்துவமனையில் எட்டாண்டுகள் வரை தொழு நோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றியவர். பல்வேறு நலத்திட்ட முகாம்களை நடத்தி தொழு நோய் குறித்த விழிப்புணர்வு விரிவடைதற்கு காரணமாக இருந்தவர். தற்போது ஜெம் ஸ்கின், ஹேர் - லேசர் சென்டரை இயக்கி கொண்டே இந்த நோய் குறித்த விழிப்புணர்வையும் சிகிச்சையும் சேவையாகவும் தொடர்பவர். இம்மாதம் 30-ம் தேதி தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம் வருவதை முன்னிட்டு இவரை நம்முடைய அட்வென்சர் இதழுக்காக சந்தித்தோம்.

தொழுநோய் ஒழிக்கப்பட்டுவிட்டதாக வெளியாகும் தகவல்கள் உண்மையா? இது குறித்து நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன?

இந்திய அரசாங்கம் சார்பில் சில ஆண்டுகளுக்குமுன் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் என்ற பெயரில் ஒரு விழிப்புணர்வு மற்றும் சிகிச்சைத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் நாடு முழுவதும் தொழுநோய் குறித்த விழிப்புணர்வு மக்களிடத்தில் எடுத்துரைக்கப்பட்டது. மக்களும் போதிய அளவில் விழிப்புணர்வைப் பெற்று இந்நோய்கான சிகிச்சையைப் பெற்றனர். இதனால் இந்த நோய் ஒழிக்கப்பட்டு விட்டதாக கருதி, இதற்காக இயங்கி வந்த திட்டத்தை ஆரம்ப சுகாதார நிலையத்துடன் இணைத்துவிட்டனர். ஆனால் தற்போது மதுரையின் ஊரகப்பகுதிகளிலிருந்து இன்றும் கூட ஒரு சில நோயாளிகள் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தொழுநோய்களில் இரண்டு வகையிருக்கிறது. அதில் உணர்ச்சியற்ற தேமல் போன்ற தொழுநோய் (Tuber Culoid) குறித்த விழிப்புணர்வை மட்டுமே மக்கள் பெற்றிருக்கிறார்கள். இந்நோய் யாருக்கும் பரவாது. Lepromatous என்ற தொழுநோயின் மற்றொரு வகையைக் குறித்து யாருமே அறிந்திருக்கவில்லை. இதற்கான அறிகுறி எளிதில் தெரியாது. இது உடலெங்கும் பரவிய பின்னர்தான் கைகளிலும் கால்களிலும் உணர்ச்சியை குறையவைத்து தன்னுடைய அறிகுறியை வெளிப்படுத்தும். இதனை யாரும் அவ்வளவு எளிதாக கண்டறிவதில்லை. இதனால் உடலில் இருக்கும் மைக்ரோபாக்டீரியம் என்ற ஒரு வகையான வைரஸ் கிருமிகளால் பரவிக் கொண்டிருக்கிறது.

நாங்களும் தற்போது பொது மருத்துவர்கள் மற்றும் தோல் மருத்துவர்கள் ஆகியோர்களுக்கு இந்த தொழுநோயிற்கான அறிகுறிகள் குறித்து அறிவுரைகளையும், வழிகாட்டுதல்களையும், கண்டறியும் முறைகளையும் மாதந்தோறும் கற்பிக்கிறோம். இதற்கான தடுப்பூசி இன்னும் கண்டறியப்படவில்லை. ஆய்வு நிலையிலேயே இருக்கிறது.

அத்துடன் இவ்வகையான தொழுநோய் இருப்பது உறுதியாக கண்டறியப் பட்டவுடன் மருத்துவர்கள் தரும் மாத்திரைகளையும், மருந்துகளையும் தொடர்ந்து ஒரு வருடத்திற்கு சாப்பிட வேண்டும். பின்னரே மீண்டும் பரிசோதனை செய்து, தொழுநோயை பரப்பும் கிருமிகளின் செயல்பாடு குறித்து கண்டறிய இயலும். இதற்கான பரிசோதனை காது மடல்களின் பின்புறத்திலும், மூக்கின் உட்பகுதியிலும் மேற் கொள்ளப்படும்.

தொழு நோயின் பரவலுக்கு பருவநிலை தான் காரணமா?

அப்படி ஒரேயொரு பருவநிலை தான் காரணம் என்று உறுதியாக கூற முடியாது. அனைத்து தட்பவெப்ப நிலைகளிலும் இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அதன் பரவும் தன்மைக்கும் பருவநிலைக்கும் தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

தொழுநோய் பரவாமல் தடுக்க, அதனால் பாதிக்கப்பட்டவர்களை எப்படி பாதுகாக்க வேண்டும்?

தொழுநோய் பாதித்தவர்களை மக்கள் தனிமைப்படுத்துகிறார்கள். ஆனால் என்னைக் கேட்டால் அவர்களை தனிமைப்படுத்துவதைக் காட்டிலும் அவர்கள் முழுமையாக சிகிச்சைக்கு ஒத்துழைக்கவேண்டும். காசநோய் போல் இது அவ்வளவு எளிதில் பரவக்கூடிய நோயல்ல என்றாலும், எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மேலும் தனியார் மருத்துவமனைகளைக் காட்டிலும் இந்த நோய்க்கான சிகிச்சை, மருந்து, மாத்திரை ஆகியவை அரசு பொது மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தரமாக கிடைக்கின்றன.

இரண்டு வகையான தொழு நோய்க்கான அறிகுறிகள் குறித்து..?

புருவ முடிகள் உதிர்ந்து போகுதல், எண்ணெய் பூசியது போன்ற பளபளப்பான மினுமினுப்பான தோல் தோற்றம், காதின் பின்பகுதி (மடல்) லேசாக தடித்து இருத்தல், குதிக்காலில் பெரிய அளவிலான வெடிப்பு ஏற்பட்டு அவை பின்பக்கமாக கணுக்காலை நோக்கி இருத்தல் இவையெல்லாம் பரவும் தன்மைக் கொண்ட Lepromatous என்ற தொழு நோயின் அறிகுறிகளாகும். அதேபோல், அரிப்பு இல்லாத சிவந்த அல்லது சற்று வெளிறிய உணர்ச்சி அற்ற தேமல்கள், கை, கால்களில் மதமதப்பு (உணர்ச்சி குறைந்து இருத்தல்) ஆகிய இரண்டும் மற்றொரு வகையான Tuber Culoid தொழு நோய்க்கான அறிகுறிகளாகும்.

இதற்கான சிகிச்சை என்ன?

முதல் வகையான தொழுநோயாளிகளுக்கு தினமும் இரண்டு மாத்திரைகள் வீதம் ஆறு மாதம் சாப்பிடேவேண்டும். மற்றொரு வகையான தொழுநோயாளிகள் தினமும் மூன்று மாத்திரைகள் வீதம் ஒரு வருடம் வரை சாப்பிட்டு மீண்டும் பரிசோதனை செய்து, நோயின் கட்டுப்பாடு குறித்து உறுதி செய்துகொள்ளவேண்டும். இதுதான் மல்டி டிரக் தெரபி என்கிறார்கள்.

மேலும் சந்தேகங்கள் ஏதேனும் இருந்தால் 9443760570 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

Tags: News, Beauty, Madurai News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top