கை-பாதம்-வாய் நோய் பாதிப்பிற்குரிய முழுமையான நிவாரண சிகிச்சை

கை-பாதம்-வாய் நோய் பாதிப்பிற்குரிய முழுமையான நிவாரண சிகிச்சை

இன்றைய சூழலில் கொரோனாவிற்கு எதிராக இரண்டு தடவை தடுப்பூசி செலுத்தி கொண்ட பிறகும் உருமாற்றம் பெற்ற புதிய வகை கொரோனாத் தொற்றான ஓமிக்ரான் தொற்று பாதிப்பு பரவல் குறித்த தகவல்களை அறிந்து கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அதே தருணத்தில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக மழைக்காலம் மற்றும் குளிர்காலம் தொடங்கியிருப்பதால் தற்போது டெங்கு காய்ச்சல் மற்றும் குழந்தைகளை தாக்கும் பிரத்யேக காய்ச்சலான கை பாத வாய் நோய் குறித்தும் மக்கள் அறிந்துகொள்வதில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். இந்நிலையில் குழந்தைகளை பாதிக்கும் கை-பாத-வாய் நோய் குறித்து கூடுதல் தகவல்களையும், மருத்துவ ரீதியான விளக்கங்களையும் தெரிந்து கொள்வதற்காக சென்னையைச் சேர்ந்த டாக்டர். அபிநயா M.D., குழந்தைகள் நல நிபுணர் அவர்களை சந்தித்தோம்.

கை-பாத-வாய் நோய் என்றால் என்ன?
 
இந்த நோயின் பெயரிலேயே எத்தகைய பாதிப்பு..? எங்கு ஏற்படும்..? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம். பொதுவாக பிறந்தது முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகளில் 70 சதவீதத்துக்கும் மேலானவர்கள் கை-பாத-வாய் நோய் பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். இதற்கு உரிய முறையில் சிகிச்சை எடுத்துக் கொண்டால், எதிர்காலத்தில் எத்தகைய பாதிப்பும் ஏற்படாமல் தற்காத்துக் கொள்ளலாம். லட்சத்தில் 6 பேருக்கு இத்தகைய பாதிப்பின் காரணமாக நாளடைவில் பாரிய உடலியக்க சிக்கலை எதிர் கொள்கிறார்கள் என அண்மைய ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது. 
 
டெங்கு காய்ச்சலைப் போலவே இதுவும் Entero virus  மற்றும் Cox sackie virus என்ற இரண்டு வகை வைரஸ் தொற்றின் காரணமாக இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது. இந்த தொற்று பாதிப்பு ஒரு குழந்தையிடமிருந்து மற்றொரு குழந்தைக்கு மிக எளிதாகவும், விரைவாகவும் பரவும் தன்மை கொண்டது. ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் தான் பாரிய அளவில் இத்தகைய பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்றாலும், நோய் எதிர்ப்பு திறன் குறைந்த 12 வயதுக்குட்பட்டவர்களுக்கும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும்.
 
எத்தகைய அறிகுறிகள் மூலம் இதனை உணர்ந்து கொள்ளலாம்?
 
லேசான காய்ச்சல், தொண்டை வலி, தோலில் ஏற்படும் கொப்புளங்கள், குறிப்பாக உள்ளங்கை, உள்ளங்கால், வாய், உதடு, மேலண்ணம், நாக்கு, உள்நாக்கு, முழங்கை, முழங்கால், கன்னத்தின் உள் பகுதி, ஈறு போன்ற இடங்களில் கொப்புளங்கள் மற்றும் புண்கள் உருவாகி இருக்கும். கொப்புளங்கள் தனித்தும், குழுவாகவும் ஏற்படக்கூடும். அரிப்பு, சில குழந்தைகளுக்கு உடலில் தடிப்புகள் ஏற்படக்கூடும். சில குழந்தைகளுக்கு திரவ உணவையோ, திட உணவையோ விழுங்க இயலாத நிலை கூட ஏற்படும். குழந்தைகளுக்கு இயல்பாக அதிக அளவில் சுரக்கும் உமிழ் நீரை கூட அவர்களால் விழுங்க இயலாத நிலை ஏற்பட்டு, அவை வாய் வழியாக ஒழுகக்கூடும். பெற்றோர்கள் குழந்தைகளின் இத்தகைய அறிகுறிகளை கண்டு அம்மை நோய் பாதிப்பு  ஏற்பட்டிருப்பதாக அஞ்சுவர். ஆனால் இது அம்மை நோய் பாதிப்பு அல்ல. வைரஸால் ஏற்படும்  பாதிப்பு என்பதை உணர்ந்து சிகிச்சை பெறவேண்டும். 
 
சில குழந்தைகளுக்கு இத்தகைய வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டால் முதல் ஐந்து தினங்கள் கை, வாய், பாதம் உள்ளிட்ட பல பகுதிகளில் கொப்புளங்கள் ஏற்பட்டு, பரவக்கூடும். சிலருக்கு ஏழு நாட்களுக்குப் பிறகு அல்லது  10 நாட்களுக்கு பிறகு இத்தகைய கொப்புளங்கள் தானாகவே மறையக் கூடும். மேலும் இதன்போது தோலில் வடுக்களும், தழும்புகளும் உருவாவதில்லை. அதே தருணத்தில் இதற்குரிய முழுமையான நிவாரண சிகிச்சைகளை பெறவில்லை என்றால், 6 சதவீத குழந்தைகளுக்கு நாளடைவில் பாரிய பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
 
அறிகுறிகள் ஏற்பட்டிருக்கும் தருணத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் என்ன?
 
குழந்தைகளுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருக்கும் பொழுது அவர்களிடமிருந்து எச்சில், புண் மற்றும் கொப்புளங்களிலிருந்து வெளியேறும் சீழ் போன்ற திரவம், தோலில் ஏற்படும் கொப்புளங்களிலிருந்து வெளியேறும் திரவம், மூச்சுக்காற்று, அந்த குழந்தையை தொடுவது, தொட்டு தூக்குவது என பல வழிகளில் எளிதாக இந்த நோய் மற்றவர்களுக்கு பரவக் கூடும். இதனால் மிகுந்த எச்சரிக்கையுடன் குழந்தைகளை அணுக வேண்டும். குழந்தைகள் இருக்கும் பகுதியை சுத்தமாகவும், ஆரோக்கியமானதாகவும் பராமரிக்க வேண்டும். அப்போதுதான் அந்த வைரஸ் கிருமிகளின் தொற்று பரவலை முழுமையாக கட்டுப்படுத்த இயலும்.
 
எத்தகைய பரிசோதனைகள் மூலம் இதனை உறுதிப்படுத்துவார்கள்?
 
குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக்கும் கொப்புளங்களை பார்த்தவுடன் மருத்துவர்கள் அவதானிப்பார்கள். சிலருக்கு தொண்டையில் உள்ள உமிழ்நீர் பரிசோதனை மற்றும் மல பரிசோதனையை செய்து இதனை உறுதிப் படுத்துவார்கள்.
 
கை பாத வாய் பாதிப்பிற்கு எம்மாதிரியான சிகிச்சையை வழங்குவார்கள்?
 
வைரஸ் கிருமியால் ஏற்படும் இந்த தொற்று பாதிப்பு, 10 நாட்களுக்குள் தானாக சரியாகிவிடும். சிலருக்கு இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும் போது முழுமையான நிவாரண சிகிச்சைகளை வழங்குவார்கள். இதன்போது மருந்துகள், களிம்புகள், பிரத்யேக திரவ உணவுகள் போன்றவற்றை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.
 
தானாக சரியாக கூடும் என்பதால் இதற்கு சிகிச்சை அவசியமா..?
 
அவசியம்தான். உரிய தருணத்தில் சிகிச்சை பெறவில்லை என்றால் நாளடைவில் டீஹைட்ரேஷன் எனப்படும் நீர்ச்சத்து குறைபாடு, கை விரல்கள் மற்றும் கால் விரல்களில் உள்ள நகங்கள் இழப்பு, வைரஸ் மூளைக்காய்ச்சல், மூளை அழற்சி, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இதனை வராமல் தடுக்க இயலுமா?
 
இயலும். குழந்தைகள் பிறக்கும் தருணத்திலிருந்து அவர்கள் இருக்கும் இடத்தை சுத்தமாக பராமரித்தால், இத்தகையப் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம். மேலும் அவர்களுடைய கை, கால்கள், வாய் ஆகிய பகுதிகளில் எப்போதும் சுத்தமாக இருக்கும் வகையில் அக்கறையுடன் கவனித்துக் கொள்ள வேண்டும். மேலும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 0091 6379310220 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

சந்திப்பு: அனுஷா

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top