கால்சியம் குறைபாட்டை களைவதற்கான புதிய சிகிச்சை முறை

கால்சியம் குறைபாட்டை களைவதற்கான புதிய சிகிச்சை முறை

கொரோனாத் தொற்றுப் பாதிப்பிற்கு பின்னரான காலகட்டத்தில் எம்மில் பெரும்பான்மையானவர்களுக்கு கழுத்துவலி, முதுகு வலி, கால் வலி, மூட்டு வலி என பல்வேறு  வலியால் பாதிக்கப்படுவது அதிகரித்திருக்கிறது. இவர்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறும் பொழுது, அவர்கள் எக்ஸ்ரே பரிசோதனையை மேற்கொள்ள பரிந்துரைக்கிறார்கள். இதன்பிறகு மருத்துவர்கள் நோயாளியிடம் கால்சியம் சத்து குறைவாக இருக்கிறது என எடுத்துரைத்துரைக்கின்றனர். இந்நிலையில் கால்சியம் சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்து கொள்வதற்கான சிகிச்சை முறை குறித்து சென்னையை சேர்ந்த டாக்டர். ஆர். முகுந்தன் M.D., மருத்துவ நிபுணர் விளக்கம் கேட்டோம்.
 
கால்சியச்சத்து குறைபாடு என்றால் என்ன.?
 
எம்முடைய உடலில் 8.5 லிருந்து 10.5 மில்லிகிராம் வரை கால்சியம் சத்தின் அளவு இயல்பாக இருக்க வேண்டும். இதில் 8.5 மில்லிகிராம் அளவை விட குறைந்திருந்தால் கால்சியம் சத்து குறைபாடு இருக்கிறது என்று பொருள்கொள்ளலாம். இதனை மருத்துவர்கள் ஹைபோக்ளைசீமியா என்றும் குறிப்பிடுவர். அதாவது கருத்தரித்திருக்கும் பெண்களுக்கும், தாய்ப் பாலூட்டும் பெண்களுக்கும் நாளாந்தம் 1200 மில்லிகிராம் அளவும், 8 முதல் 20 வயதுள்ள வரை ஆண்களுக்கும், பெண்களுக்கும் நாளாந்தம் ஆயிரத்து 300 மில்லி கிராம் அளவிற்கும், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளாந்தம் 1000 மில்லி கிராம் அளவிற்கும் கால்சியம் சத்து அவசியம். 
 
எம்முடைய மூளையின் இயல்பான செயல்பாட்டிற்கும், பற்கள், எலும்புகள் மற்றும் தசைகளின் வலிமை மற்றும் இயல்பான இயக்கத்திற்கும் கால்சியம் சத்து அவசியம். இதைத் தவிர்த்து எம்முடைய இதயத் தசைகள் சுருங்கி விரியும் இயல்பான தன்மைக்கும் கால்சியம் சத்து அவசியம் தேவை. தோல், தலைமுடி, நினைவுத்திறன், ஒருமுக தன்மை போன்றவைக்கும், இதன் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டிற்கும் கால்சியம் சத்து இன்றியமையாததாகிறது. கால்சியம் சத்து குறைந்தால் எலும்பு தேய்மானமும் ஏற்படும்.
 
கால்சியம் சத்து குறைந்திருந்தால் எம்மாதிரியான அறிகுறிகளை வெளிப்படுத்தும்?
 
சோர்வு, நினைவு திறன் இழப்பு, தூக்கமின்மை, தலைமுடி உதிர்வு, தசைகளின் இயக்கத்தில் பலவீனம் ஏற்பட்டு தசைப்பிடிப்பு உண்டாகும். சிலர் துவி சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது அவர்களுடைய தொடை மற்றும் கால் பகுதியில் பிடிப்பு ஏற்பட்டு, சிறுது நேரம் அவதியுறுவர். இவையும் கால்சியம் சத்து குறைபாட்டின் அறிகுறிகள் தான். இவை அனைத்தும் கால்சியம் சத்துக் குறைபாட்டின் தொடக்கநிலை அறிகுறிகள்தான். இதனை இந்தத் தருணத்தில் கண்டறிந்து முறையாக சிகிச்சை மேற்கொண்டால் மேற்கொண்டு கால்சியம் சத்து குறைபாடு நீடிக்காமல் தவிர்க்கலாம். புறக்கணித்தால் எலும்புகளின் வலிமை குறைய தொடங்கி, எலும்பு இணைந்திருக்கும் மூட்டுகளில் வலி ஏற்பட தொடங்கும். இதனை மருத்துவர்கள் ஓஸ்டியோபோரோசிஸ் என்பார்கள். சில பிள்ளைகள் அரைமணிநேரம் விளையாடியவுடன் காலில் வலி என்பார்கள். இதுவும் கால்சியம் சத்து குறைபாட்டின் அறிகுறிகள்தான். சில குழந்தைகளுக்கு கால்சியம் சத்து குறைபாடு நீடித்திருந்தால் அவர்களின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டு, அவர்களின் உயரம் குறைந்தவர்களாகவேயிருப்பர்.  
 
கால்சியம் சத்து குறைபாடு ஏன் உண்டாகிறது?
 
கால்சியம் சத்து நிறைந்துள்ள உணவுகளை அதிக அளவில் உட்கொள்ளாததன் காரணமாகவும், சிலருக்கு கால்சியம் சத்து நிறைந்துள்ள உணவை உட்கொண்டாலும், உடல் அதனை உட்கிரகித்துக் கொள்வதில் ஏதேனும் தடைகளோ அல்லது இடையூறுகளோ இருப்பதன் காரணமாகவும் இத்தகைய குறைபாடு ஏற்படக்கூடும்.
 
இத்தகைய குறைபாடு தடையின்றி நீக்கப்பட வேண்டும் என்றால் விற்றமின் டி எனப்படும் சத்து அவசியமாகிறது. விற்றமின் டி சத்தின் காரணமாகத்தான் குடல் கால்சியம் சத்தினை உட்கிரகிக்கிறது. கால்சியம் சத்தின் வளர்சிதை மாற்றத்திற்கு பாரா தைரொய்ட் ஹோர்மோன் அவசியம். அண்மைய ஆய்வுகளில் தெற்காசிய நாடுகளில் விற்றமின் டி சத்து குறைபாடு 80 சதவீதத்தினருக்கு மேல் இருப்பதாக கண்டறியப்பட்டிருக்கிறது. சிலருக்கு தைரொய்ட் பிரச்சினையின் காரணமாக தைரொய்ட் சுரப்பி மற்றும் பாரா தைரொய்ட் சுரப்பி ஆகியவற்றை சத்திர சிகிச்சையின் மூலமாக அகற்றி இருப்பார்கள். இவர்களுக்கு கால்சிய சத்து குறைபாடு உண்டாகும். இவர்கள் ஆயுள் முழுவதும் கால்சியம்சத்திற்காக மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டியதிருக்கும்.
 
நாளொன்றுக்கு மூன்று கோப்பைக்கு மேல் கோப்பி, தேநீர், கோலா போன்ற திரவங்களை அருந்துபவர்களுக்கு, உணவிலிருந்து கால்சியம் சத்தினை உறிஞ்சிக் கொள்ளும் சக்தியை இழப்பு உண்டாகி, பாரிய பாதிப்பு ஏற்படுகிறது. பதப்படுத்தப்பட்டு பக்கற்றுகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் உணவு வகைகள், துரித உணவு வகைகள் போன்றவைகளில் சுவைக்காகவும், அவை கெட்டுப் போகாமல் இருப்பதற்காகவும் சேர்க்கப்படும் சில ரசாயனங்களில் உப்பின் அளவு அதிகமாக இருக்கும். இதனால் குடல், கால்சியம் சத்தினை உட்கிரகித்தலில் பாரிய தடை உண்டாகும். இதன்போது கால்சியத்தைவிட சோடியம் அதிக அளவு சேமிக்கப்படுவதால் இத்தகைய பாதிப்பு உண்டாகிறது.
 
புகையிலை, மாதவிடாய் சுழற்சி நின்ற பெண்கள் இவர்களுக்கும் கால்சியம் சத்து குறைவாகவே இருக்கும். பி சி ஓ டி என்ற குறைபாடு உள்ள பெண்களுக்கும் கால்சியம் சத்து குறைவாகவே இருக்கும்.
 
ஹைபோகிளைசீமியா பாதிப்பை எப்படி கண்டறிவார்கள்..?
 
மூளையில் இதன் குறைபாடு காரணமாக சிலருக்கு ஃபிட்ஸ் வரலாம். சீரற்ற இதயத்துடிப்பு காரணமாகவும் வரலாம். Tetany எனப்படும் தசைப்பிடிப்பு ஏற்படும். கை, கால், தொண்டை ஆகிய பகுதிகளில் தசைப்பிடிப்பு ஏற்படும். தொண்டையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இதனை Trousseau's மற்றும் Chvostek's என்ற இரண்டு அறிகுறிகளை பிரத்யேக பரிசோதனைகளின் மூலம் கண்டறிவார்கள். உங்களுடைய ரத்த அழுத்தத்தை பரிசோதிப்பதற்காக உங்கள் கைகளில் பொருத்தப்படும் உறையில் ரத்த அழுத்தத்தை அதிகரித்து, பரிசோதனை செய்வார்கள். மூன்று நிமிடங்கள் வரை நீடிக்கும் இந்த பரிசோதனையின்போது உங்களுடைய கை விரல்களின் செயல்பாட்டில் ஏதேனும் மாற்றங்கள் தென்பட்டால், உங்களுக்கு கால்சியம் சத்து குறைபாடு இருக்கிறது என உறுதிப்படுத்துவார்கள். 
 
இதனைத்தொடர்ந்து உங்களது காதுகளை ஒட்டி உள்ள கன்னக் கதுப்பில் அமையப்பெற்றிருக்கும் எலும்புகளைத் தட்டிப் பரிசோதிக்கும்போது வாய் மற்றும் அதனை சுற்றியுள்ள தசைகளில் மாற்றம் ஏற்படும். இந்த மாற்றம் ஏற்பட்டாலும், கால்சியம் சத்துக் குறைபாடு உள்ளது என உறுதிப்படுத்துவார்கள். இதனைத் தவிர்த்து கை கால் பகுதிகளில் நம்னஸ் எனப்படும் மதமதப்பு ஏற்பட்டால், அவையும் கால்சியம் சத்துக் குறைபாட்டின் வெளிப்பாடுகள் தான். சிலருக்கு தோலின் அடிப்பகுதியில் ரத்தக் கசிவு ஏற்படக் கூடும். இவையும் கால்சியம் சத்துக் குறைபாட்டின் அறிகுறிகள் தான் என உறுதிப்படுத்துவார்கள் 

கால்சிய சத்துக் குறைப்பாட்டை களைவதற்கான சிகிச்சை முறைகள் என்ன?
 
உங்களுடைய உணவில் கால்சியம் சத்து அதிகமுள்ள உணவு வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். மருத்துவரின் கண்காணிப்பில் மூன்று மாதத்திற்கு பிறகு உங்களுடைய உணவின் மூலமான கால்சியம் சத்து உடலால் உட்கிரகிக்கப்படவில்லை என்றால், அதன் பிறகு மருத்துவர் பரிந்துரைக்கும் வழிமுறைகளையும், மருந்து, மாத்திரைகள் ஆகியவற்றை உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும். இதன்பிறகு நாளாந்தம் மாலை அல்லது காலையில் சூரிய ஒளி நம்மீது படும்படி குறைந்தபட்சம் 15 லிருந்து 30 நிமிடம் வரை மிதமான உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இது குறித்த சந்தேகங்கள் இருந்தால் 0091 8508303030 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
 
சந்திப்பு: அனுஷா

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top