கொரோனாவின் மூன்றாவது அலையிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

கொரோனாவின் மூன்றாவது அலையிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

கொரோனாவின் மூன்றாவது அலை குறித்த அச்சம் உலகளவில் மக்களிடையே இருந்து வருகிறது. மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா? இல்லையா? என்ற விவாதமும் எழுந்திருக்கிறது. எனினும் உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியிருக்கும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்றாவிட்டால், மூன்றாம் அலை ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மூன்றாவது அலை ஏற்பட்டால், குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. ஏனெனில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி இதுவரை செலுத்தப்படவில்லை. இதன் காரணமாக அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 50 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகள் கொரோனாத் தொற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளதும், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் விரைவில் குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் அறிமுகமாகும் என்றும், அதனை குழந்தைகளுக்கு செலுத்தினால் அவர்கள் கொரோனாத் தொற்று பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம். மேலும் தற்போது தடுப்பூசியை செலுத்தி கொள்ளாத மக்கள் தான், கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே மக்கள் கால தாமதம் ஏதுமின்றி கொரோனாத் தடுப்பூசியை இரண்டு தடவையும் செலுத்திக் கொள்ள வேண்டும். கொரோனாத் தடுப்பூசி செலுத்திய பிறகும், கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மோசமான உயிரிழப்பு பாதிப்புகள் ஏற்படுவதில்லை என்பது கண்டறியப்பட்டிருக்கிறது.’ என்ற தகவலை பகிர்ந்து கொண்டே எம்முடன் பேசத் தொடங்குகிறார் சென்னையை சேர்ந்த டாக்டர். சதீஷ்குமார், MBBS.,DCH.,DNB.,PGPN., இவரிடம் குழந்தைகளுக்கு கொரோனாவின் மூன்றாவது அலையிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி? என்பது குறித்து அவரிடம் மருத்துவரீதியான விளக்கம் கேட்டோம்.

கொரோனாத் தொற்றின் முதன்மையான அறிகுறிகளான சளி மற்றும் இருமல் குழந்தைகளுக்கு ஏற்பட்டால்.., அவை கொரோனாத் தொற்று என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது எப்படி? அதற்குரிய சிகிச்சை மேற்கொள்வது எப்போது?
 
பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படும் சளியை Upper Respiratory Tract மற்றும் Lower Respiratory Tract என இரண்டு வகையாக மருத்துவர்கள் வகைப்படுத்துவர். நுரையீரல் மற்றும் நுரையீரல் அருகே உள்ள மூச்சுக் குழாய் ஆகிய இடங்களில் தொற்று ஏற்பட்டால் அதனை லோயர் ரெஸ்பிரேற்றறி டிராக்ட் இன்ஃபெக்சன் என்றும், தொண்டை, மூக்கு, காது ஆகிய இடங்களில் தொற்று ஏற்பட்டால் அதனை அப்பர் ரெஸ்பிரேற்றறி ட்ராக்ட் இன்ஃபெக்சன் என்றும் குறிப்பிடுவார்கள். இதில் மூக்கு பகுதியில் தொற்றின் காரணமாக உருவாகும் சளியை குறித்து அதிகம் கவலைப்பட தேவையில்லை. ஏனெனில் இத்தகைய சளி, மூன்றிலிருந்து ஐந்து தினங்களுக்கு பிறகு தானாகவே சரியாகக்கூடும்.  இதன்போது Running Nose எனப்படும் மூக்கு ஒழுகுதல், Sore Throat எனப்படும் தொண்டை வலி. Cough எனப்படும் சாதாரண இருமல். Sneezing  எனப்படும் தும்மல், Low Fever எனப்படும் சாதாரண காய்ச்சல், கண்களில் நீர் வடிதல், தலைவலி, காது வலி, குமட்டல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும். வைரஸ் கிருமிகள் தொண்டைப் பகுதிகளில் இருந்தால் தொண்டை வலி உண்டாகும். அவையே உள்காது பகுதிகளில் இருந்தால் காது வலி ஏற்படும். மூக்கின் பின் பகுதியில் உள்ள சைனஸ் அறையை பாதித்தாலும் தலைவலி ஏற்படலாம். இதன்போது மூக்கிலிருந்து இளம் மஞ்சள் நிறத்தில் சளி வெளியேறக் கூடும். மேற்கூறிய அனைத்தும் அப்பர் ரெஸ்பிரேற்றறி ட்ராக்ட் இன்ஃபெக்சன் என்று குறிப்பிடுவார்கள் இதனால் பெற்றோர்கள் பெரிதாக அச்சம் கொள்ள தேவையில்லை. இதற்கு மருத்துவரிடம் முறையான ஆலோசனைப் பெற்று சிகிச்சை பெற்றால் குணமடையும். இதில் சைனடீஸ், காது வலி, பாக்டீரியா தொண்டை வலி போன்ற சில குறிப்பிட்ட தொற்றுகளுக்கு மட்டுமே மருத்துவரின் அறிவுரையுடன் ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டியதிருக்கும்.
 
சில பிள்ளைகளுக்கு இந்த அறிகுறியுடன் ஐந்து தினங்களுக்கு பிறகு இருமல் ஏற்படக்கூடும். இந்த இருமலும் சில பிள்ளைகளுக்கு நுரையீரல் தொற்று காரணமாக ஏற்படுவதில்லை. ஆனால் நுரையீரல் தொற்றின் காரணமாகவோ அல்லது மூச்சுக்குழாயில் தொற்று ஏற்பட்டதன் காரணமாகவோ இருப்பின் அதற்கு மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். 100 சதவீத சளி பாதிப்புள்ள குழந்தைகளில், 10 சதவீதத்தினருக்கு மட்டும் தான் நுரையீரல் மற்றும் மூச்சுக்குழாய் பகுதியில் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்படுகிறார்கள் இவர்களுக்குத்தான் நெஞ்சு சளி என்ற நிமோனியா பாதிப்பு ஏற்படுகிறது. இத்தகைய பாதிப்பை தொடக்க நிலையில் கண்டறிந்து சிகிச்சை வழங்கினால் மட்டுமே குழந்தைகளை பாதுக்காக்கலாம். இல்லையென்றால் உயிரிழப்பு ஏற்படக் கூடிய அச்சுறுத்தல் உண்டாகும்.
 
நிமோனியா தொற்று பாதிப்பை கண்டறிவது எங்ஙனம்?
 
குழந்தை வீட்டில் உறங்கும் பொழுது குழந்தை மூச்சுவிடும் நிலையை பெற்றோர்கள் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும். ஒரு வயதிற்கு மேல் உள்ள குழந்தை ஒரு நிமிடத்திற்கு 50 என்ற எண்ணிக்கைக்கு மேல் மூச்சு விட்டாலோ...ஒரு வயதிலிருந்து ஐந்து வயதுக்குள் இருக்கும் குழந்தைகள், ஒரு நிமிடத்திற்கு 40 முறை மேல் மூச்சு விட்டாலோ... ஐந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தை ஒரு நிமிடத்திற்கு முப்பது முறைக்கு மேல் மூச்சு விட்டாலோ.. அதனை Tachypnea பாதிப்பு என வகைப்படுத்துவர். மேலும் குழந்தைகள் மூச்சு விடும் பொழுது ஏதேனும் சிரமங்களை எதிர் கொள்கிறார்களா..? என்பதையும் பெற்றோர்கள் அவதானிக்க வேண்டும். ஏதேனும் வித்தியாசம் இருந்தால், அதனை மருத்துவர்கள் Retraction என வகைப்படுத்துவர். மேலும் இத்தகைய பாதிப்பின் போது குழந்தைகளின் நாளாந்த நடவடிக்கைகளையும் அவதானிக்க வேண்டும். அவர்கள் இயல்பாக இல்லாமல் மிகுந்த சோர்வுடன் இருந்தால்.., அவர்களுக்கு சுவாசப் பாதையில் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, சிகிச்சைக்காக மருத்துவரிடம் அழைத்துச் செல்லலாம். வேறு சில குழந்தைகளுக்கு இத்தகைய தருணத்தில் மூச்சு விடும் போது வேறு சில ஒலிகளும் ஏற்படக்கூடும். இந்த அறிகுறிகளும் மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரல் தொற்று பாதிப்பு என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் இவை அறிகுறியாக இருப்பதால், சரியான தருணத்தில் குழந்தைகளை மருத்துவரிடம் அழைத்துச் சென்று, சிகிச்சை அளித்து, குணம் பெறலாம். கொரோனாத் தொற்றின் முதல் மற்றும் இரண்டாவது அலையில் குழந்தைகளுக்கு கொரோனாத் தொற்றால் உண்டாகும் நிமோனியா காய்ச்சல் பாரிய அளவில் ஏற்படவில்லை என்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இவை நல்ல விடயம் என்றாலும், எப்போதும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மேலும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 0091 9750269815 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
 
சந்திப்பு: அனுஷா

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top