ஹோட்ஜ்கின் லிம்போமா என்ற ரத்த புற்றுநோய் பாதிப்பைக் குறைக்கும் புதிய சிகிச்சை

ஹோட்ஜ்கின் லிம்போமா என்ற ரத்த புற்றுநோய் பாதிப்பைக் குறைக்கும் புதிய சிகிச்சை

எம்மில் பலருக்கும் லிம்போமா, லுகேமியா, மைலோமா என மூன்று வகையான ரத்த புற்றுநோய் பாதிப்பு ஏற்படக்கூடும். இவற்றை உரிய தருணத்தில் கண்டறிந்து முறையான சிகிச்சை பெற்றால், இவற்றின் பாதிப்பை கட்டுப்படுத்த இயலும். இந்த மூன்று வகை ரத்த புற்று நோயில் ஹோட்ஜ்கின் லிம்போமா எனப்படும் ரத்தப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு தற்போது கண்டறியப்பட்டிருக்கும் புதிய சிகிச்சைகள் மூலம் பாதிப்பை குறைத்து முழுமையான நிவாரணம் பெறலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்காக டாக்டர் ராஜ்குமார், M.S.,DNB.,M.Ch., புற்றுநோய் சிறப்பு சிகிச்சை நிபுணர்  அவர்களை சந்தித்தோம்.

ஹோட்ஜாகின் லிம்போமா எனப்படும் ரத்த புற்றுநோய் குறித்து...?
 
எம்முடைய உடலில் நிணநீர் மண்டலம் என்ற ஒரு அமைப்பு இயங்கி வருகிறது. கழுத்து, அக்குள், மார்பு, வயிறு, மண்ணீரல், எலும்பு மஜ்ஜை உள்ளிட்ட பல பகுதிகளில் நிணநீர் சுரப்பிகள், நிணநீர் நாளங்கள், நிணநீர் முடிச்சுகள் ஆகியவற்றுடன் இவை இயங்கி வருகிறது. எம்முடைய குருதியோட்டத்திற்கும், நோயெதிர்ப்பு திறனுக்கும் தேவையான வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்வதும், அதனை உடலிலுள்ள சில உறுப்புகளின் சில பகுதிகளில் சேமித்து வைப்பதும் தான் இதனுடைய பிரதான பணி. இந்த பகுதிகளில் ஏதேனும் ஒரு இடத்தில் ஏற்படும் இவ்வகையான செல்களின் கட்டுப்பாடற்ற வகையில் வளர்ச்சியடைந்தால் அதைத்தான் நாம் ரத்த புற்றுநோய் என்றும், லிம்போமா என்றும் குறிப்பிடுகிறோம். இந்த லிம்போமா, ஹோட்ஜ்கின் லிம்போமா என்றும், நான் ஹோட்ஜ்கின் லிம்போமா என்றும் இரண்டு வகைப்படும். இதில் ஹோட்ஜ்கின் லிம்போமா எனப்படும் ரத்த புற்றுநோய் எம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு செல்களாக கருதப்படும் பி செல்களில் ஏற்படுகிறது.  
 
ரத்தப் புற்றுநோய் பாதிப்புக்குரிய அறிகுறிகள் என்ன?
 
கழுத்து, அக்குள், மார்பு போன்ற பகுதிகளில் உள்ள நிணநீர் மண்டலங்களில் உள்ள நிணநீர் முடிச்சுகளில் கட்டி ஏற்படும். இந்தக் கட்டி வலியற்ற கட்டியாகத்தான் இருக்கும். இதனை தொட்டு பார்க்கும் பொழுது றப்பர் பந்தினை தொட்டு உணர்வது போல் ஏற்படும். சிலருக்கு மது அருந்திய பிறகு இந்தக் கட்டிகளில் வலி ஏற்படக்கூடும். இவை சிலருக்கு மட்டுமே ஏற்படும் பிரத்யேக அறிகுறி எனலாம். சிலருக்கு Pel- Ebstein Fever எனப்படும் காய்ச்சல் வரலாம். இத்தகைய காய்ச்சல் மூன்று முதல் பத்து நாட்கள் வரை நீடிக்கும். பிறகு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஏற்படும். இதைத்தவிர்த்து சிலருக்கு திடீரென்று உடல் எடை குறைவு, பசியின்மை, மாலை மற்றும் இரவு நேரங்களில் வழக்கத்தை விட கூடுதலாக வியர்வை ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் ஏற்படக்கூடும். இவை அனைத்தும் ஹோட்ஜ்கின் லிம்போமா புற்றுநோய் பாதிப்பின் அறிகுறிகளாகும். வேறு சிலருக்கு கல்லீரல் வீக்கம், நெப்ரோடிக் சிண்ட்ரோம் எனப்படும் சிறுநீர் வழியாக புரதசத்து வழக்கத்தை விட கூடுதலாக வெளியேறுவது, இடுப்பு வலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டாலும், உடனடியாக மருத்துவரை சந்தித்து, லிம்போமா பாதிப்புக்குரிய பரிசோதனையை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
 
லிம்போமா பாதிப்பு யாருக்கெல்லாம் வரக்கூடும்..?
 
20 வயது முதல் 40 வயது வரை உள்ள ஆண்களுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறு அதிகம். சிலருக்கு பால்ய பிராயத்தில் Epstein Barr என்ற வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், நாளடைவில் இத்தகைய புற்றுநோய் வருவதற்கு சாத்தியக்கூறு உண்டு. வேறு சிலருக்கு குடும்ப பாரம்பரியம் காரணமாகவும், நோய் எதிர்ப்பு திறன் குறைவாக கொண்டவர்களுக்கும், இத்தகைய ரத்த புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறு அதிகம். பெற்றோலிய பொருட்கள் மூலம் வெளியேறும் புகையை தொடர்ந்து சுவாசிக்கக் கூடிய பணியிடங்களில் பணியாற்றக்கூடியவர்களுக்கும் இத்தகைய ரத்த புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
 
எம்மாதிரியான பரிசோதனைகளின் மூலம் இதனை உறுதிப் படுத்துவார்கள்?
 
நிணநீர் முடிச்சுகள் உள்ள திசுக்களை பரிசோதனை செய்து பாதிப்பை உறுதி படுத்துவார்கள். இதன்போது கழுத்து பகுதியில் உள்ள நிணநீர் முடிச்சுகளை சிறிதளவு வெட்டி எடுத்து, அதனை நுண்ணோக்கி மூலம் பார்வையிட்டு, பாதிப்பின் தன்மையை உறுதிப்படுத்துவார்கள். மேலும் ரத்த புற்று நோயின் நிலைகளை உறுதிப்படுத்த சிடி ஸ்கேன், பி இ டி ஸ்கேன் போன்ற பரிசோதனைகளை மேற்கொள்வார்கள். பரிசோதனையில் நோயாளிக்கு ஏற்பட்டிருப்பது Classical Hodgkins lymphoma மற்றும் Modular Lymphocyte Predominant  என்ற இரண்டு வகைகளில் எந்த வகையான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதையும் கண்டறிவார்கள். இதனை தொடர்ந்து Nodular Sclerosis, Mixed Cellularity, Lymphocyte Depleted, Lymphocyte Rich என்ற நான்கு உட்பிரிவுகளில் எத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதையும் துல்லியமாக கண்டறிவார்கள். வேறு சிலருக்கு எலும்பு மஜ்ஜையிலிருந்து திசுப் பரிசோதனையை மேற்கொண்டு, பாதிப்பை உறுதிப்படுத்துவார்கள். 
 
ஹோட்ஜ்கின் ரத்த புற்று நோயை குணப்படுத்தும் புதிய சிகிச்சை..?
 
நோடுலார் செலீறோஸிஸ் என்ற ரத்த புற்றுநோய் பெரும்பாலும் பெண்களுக்கு ஏற்படும். இவற்றை தொடக்க நிலையில் கண்டறிந்தால் கீமோதெரபி மற்றும் கதிரியக்க சிகிச்சை மூலம் முழுமையான அளவில் நிவாரணம் வழங்கி குணப்படுத்த இயலும். லிம்போஸைட் ரிச் என்ற பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், மருத்துவரின் தொடர் கண்காணிப்பில் உரிய சிகிச்சைகள் பெற்றால், முழுமையான நிவாரணம் வழங்கி, கட்டுப்படுத்த இயலும். ஆனால் லிம்போஸைட் டிப்லீடட் எனப்படும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருந்து, இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அவர்களுக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவு. மேலும் பத்து சதவீதத்தினருக்கு நோடுலார் லிம்போஸைட் ப்ரீடோமினன்ட் எனப்படும் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்படுவர். இவர்களுக்குரிய சிகிச்சையை வழங்குவதன் மூலம் குணப்படுத்தக்கூடிய வாய்ப்பு உண்டு. மேலும் சிலருக்கு ஏற்படும் ஹோட்ஜ்கின் லிம்போமா எனப்படும் ரத்தப் புற்றுநோயை.. அது ஆரம்ப நிலை மற்றும் இரண்டாவது நிலையில் கண்டறியப்பட்டால், கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சை மற்றும் டார்கெட் தெரப்பி போன்ற புதிய சிகிச்சைகள் மூலம் கட்டுப்படுத்தி, முழுமையான நிவாரணத்தை அளிக்கலாம். வெகு சிலருக்கு அவர்களின் ஆரோக்கியம், வயது ஆகியவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு எலும்பு மஜ்ஜை மாற்று சத்திர சிகிச்சையையும் செய்து இதிலிருந்து முழுமையான நிவாரணத்தை வழங்குவர். இதுதொடர்பாக மேலும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 0091 8939900500 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
 
சந்திப்பு: அனுஷா

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top