பாக்டீரியா தொற்று பாதிப்பிற்குரிய பாக்டீரியோபேஜ் தெரபி!

பாக்டீரியா தொற்று பாதிப்பிற்குரிய பாக்டீரியோபேஜ் தெரபி!

இன்றைய தேதியில் வைரஸ் என்று உச்சரிக்கும்போதே எம்மில் பலருக்கும் அச்சம் ஏற்படுகின்றன. ஏனெனில் அண்மைய காலத்தில் கொரோனா வைரஸால் உலகமே பாரிய அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கின்றன. விஞ்ஞான துறையும், மருத்துவ துறையும் இதுவரை வைரஸ்கள் என்றால் அவை, மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பவை என்று தான் எடுத்துரைத்திருத்திருக்கிறார்கள். ஆனால் தற்போது நன்மை விளைவிக்கும் வைரஸ் ஒன்று இருப்பதாகவும், அதிலும் மனிதனுக்கு நன்மை பயக்கும் வைரஸாக செயல்படுகிறது என்றும் கண்டறிந்திருக்கிறார்கள். இது குறித்து மேலதிக விவரங்களைத் தெரிந்து கொள்வதற்காக சென்னையைச் சேர்ந்த நுண்ணுரியல் மருத்துவ நிபுணரான டாக்டர். அனுஷா ரோஹித், M.D.,  அவர்களை சந்தித்தோம். 

மனிதர்களுக்கு நன்மை செய்யும் வைரஸ் இருக்கிறதாமே. அது குறித்து..?
 
அதன் பெயர் பாக்டீரியோபேஜ். இவை மனிதர்களை மட்டும் அல்லாமல் எந்த உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்காமல் நன்மை மட்டுமே செய்யும் வைரஸ். இந்த சிறிய வகை வைரஸின் ஒரே எதிரி பாக்டீரியாக்கள்தான். எம்முடைய உடலில் பாக்டீரியா தொற்றுகளால் ஏற்படும் பாதிப்பிலிருந்து முழுமையான நிவாரணம் பெற பாக்டீரியோபேஜ் தெரபி என்ற சிகிச்சை நல்ல பலனை அளித்து வருகிறது. அதாவது பாக்டீரியாக்களால் ஏற்படும் உடல் ஆரோக்கிய பாதிப்பச் சீராக்க பாக்டீரியோபேஜ் என்ற வைரஸை எம்முள் செலுத்தி குணப்படுத்திக் கொள்ளும் சிகிச்சைதான் பாக்டீரியோபேஜ் தெரபி என்கிறார்கள். 
 
பாக்டீரியோபேஜ் என்றால் என்ன?
 
இந்த உலகத்தில் அதிகளவில் வாழும் ஒரே உயிரினம் இந்த பாக்டீரியோபேஜ் தான். கடல் நீர், ஏரி, ஆறு, குளம், மண், பனி படர்ந்த குளிர் மலைகள், பாலைவனம், காடுகள், மரங்கள், செடி, கொடிகள் எம்முடைய இல்லங்களில் வழிந்தோடும் கழிவுநீர், எல்லா வகையான உயிரினங்கள், பறவைகளின் உடல்கள், எம்முடைய உடலில் கூட ஆயிரக்கணக்கான பாக்டீரியோபேஜ் எனப்படும் வைரஸ்கள் இருக்கின்றன. உலகில் உள்ள மற்ற உயிரினங்களை விட, பன்மடங்கு அதிக அளவில் எம்முடைய கண்ணுக்குப் புலப்படாத பாக்டீரியோபேஜ்கள் இருக்கின்றன. இது இயற்கையிலேயே உருவான வைரஸ் என்றும் குறிப்பிடலாம்.
 
இந்த வைரஸ்கள் Lytic cycle & Lysogenic cycle என இரண்டு வகையில் உற்பத்தியாகிறது. செல்களுக்கு வெளியே உயிரற்ற தன்மையுடன் இருக்கும் இந்த வைரஸ்கள், செல்லுக்குள் நுழைந்தவுடன் தன்னுடைய மரபணுவை செலுத்தி, செல்லில் உள்ள அனைத்து பகுதிகளையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, வளர்ச்சி அடைந்து உயிருள்ளவையாக வளர்கிறது. ஆயிரக்கணக்கான வைரஸ்களை கொண்ட குழுவினை தான் நாம் பாக்டரியோபேஜ் என குறிப்பிடுகிறோம்.
 
எம்முடைய உடலில் எந்த உறுப்பில் உற்பத்தியாகிறது என்பதைப் பொறுத்து, ஒவ்வொரு பாக்டீரியோபேஜ் வைரஸ்களுக்கு மருத்துவ உலகினர் ஒவ்வொரு பெயரை குறிப்பிட்டிருக்கிறார்கள். எந்த பாக்டீரியாக்களுக்கு எதிராக எந்த வகையிதான பாக்டீரியோபேஜ்கள் பணியாற்றுகிறது என்பதை குறித்தும் இதற்கு சில பெயரைச் சூட்டியிருக்கிறார்கள்.

இந்த தெரபி எப்போது அறிமுகமானது? தற்போது இத்தகைய சிகிச்சை பயன்பாட்டில் இருக்கிறதா?
 
இந்த பாக்டீரியோபேஜ் தெரபி நூற்றாண்டுக்கு முன்னரே கண்டறியப்பட்டது. இதனுடைய பயன்பாட்டை மக்களாகிய நாம் மறந்து விட்டோம். தற்போது கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டு, பல வகையினதான ஆன்டிபயாடீக் மருந்துகள் எடுத்தும் பயனளிக்காததாலும், நாம் இதுவரை எடுத்துக் கொண்ட ஆன்டிபயாடீக் மருந்துகளுக்கு எதிராக எம்முடைய உடலில் பாக்டீரியாகள் எதிர்வினையாற்றி, வலிமையான தொற்று பாதிப்பாக உருவாகி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தற்போது பாக்டீரியோ பேஜ் எனும் தெரபி பலனளிப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். 
 
Shigella Dysenteriae என்ற பாக்டீரியாக்கள் கடுமையான வயிற்று வலியையும், ரத்தத்துடன் கலந்த மலத்தையும் வெளியேற்றுகிறது. இத்தகைய பாதிப்பால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறாருக்கு அதற்கரிய பாக்டீரியோபேஜ் என்ற வைரஸ்களை செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. சில தினங்களிலேயே அந்த சிறார் பரிபூரணமாக குணமடைந்தார். 1930களில் சோவியத் யூனியன் பிரதேசத்தில் இத்தகைய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வெற்றி அளித்தது.
 
ரஷ்யா, ஜோர்ஜியா குடியரசு மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் மட்டும் தான் இத்தகைய பாக்டீரியோபேஜ் தெரபி வெற்றிகரமாக வழங்கப்பட்டு வருகிறது.
 
கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக எம்முடைய சுகவீனத்திற்காக ஆன்டிபயாடிக் மருந்துகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டு வருகிறோம். இதன்காரணமாக எம்முடைய உடலில் Antibiotic Resistant Bacteria என்ற திறன்வாய்ந்த பாக்டீரியாக்கள் உருவாகிறது. தற்போது உலக அளவில் ஃபிப்த் ஜெனரேஷன் என்ற பெயரில் ஆன்டிபயாடிக் மருந்துகளை உற்பத்தி செய்து வருகிறோம். இதன் மூலம் எம்முடைய உடலில் சாதாரணமாக இருந்த பக் எனப்படும் கிருமி, சூப்பர் பக் எனப்படும் வலிமை வாய்ந்த கிருமியாக வளர்வதற்கு வாய்ப்பளித்துவிட்டோம். 
 
இந்த சூப்பர் பக் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய பாக்டீரியாக்கள். இதற்கு எதிராக எத்தகைய மருந்துகள் வழங்கினாலும் அவற்றை கட்டுப்படுத்த இயலாது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையின்படி 2050 ஆம் ஆண்டில் இத்தகைய வலிமை வாய்ந்த சூப்பர் பக் பாக்டீரியாக்களால் 10 மில்லியன் மக்கள் உயிரிழக்கக் கூடும் என்ற எச்சரிக்கை விடுத்திருக்கிறது. சூப்பர் பக் பாக்டீரியாக்களால் கடுமையான தொற்று பாதிப்பு ஏற்படும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது. இத்தகைய சூப்பர் பக் கிருமிகளை அழிக்கக்கூடிய= அதிலிருந்து காப்பாற்ற கூடிய மருத்துவ சிகிச்சையாக பாக்டீரியோபேஜ் சிகிச்சை அமைந்திருக்கும். 
 
இத்தகை சிகிச்சையின் சாதக அம்சங்கள் என்ன?
 
எம்முடைய உடலில் எந்த வகை பாக்டீரியாக்களால் தொற்று ஏற்பட்டிருக்கிறதோ... அந்த பாக்டீரியாக்களை அழிக்கக் கூடிய பாக்டீரியோபேஜ் வைரயை மட்டும் சிகிச்சையாக எடுத்துக்கொண்டால் போதுமானது. உலகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் இத்தகைய பாக்டீரீயோ பேஜ் வைரஸ்கள் கிடைப்பதால் எமக்கு தேவையானவற்றை மட்டும் தனியாக பிரித்தெடுத்து பயன்படுத்த இயலும்.
 
பாக்டீரியாக்களால் கண்களில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் இதனை கண்களுக்காக பயன்படுத்தப்படும் டிராப்ஸ் எனப்படும் சொட்டு மருந்தாகவும் பயன்படுத்தலாம். தோலில் பாதிப்பு ஏற்பட்டால் லோஷன் எனப்படும் களிம்பு போன்று இதனை பயன்படுத்தலாம். பாக்டீரியாவால் காய்ச்சல் ஏற்பட்டால் ஊசி மூலமாகவும் இதனை செலுத்திக் கொள்ளலாம். இது எம்முடைய உடலில் ஊசி மூலமாக செலுத்தப்படும் போது, ரத்தத்திற்கு சென்று, நலம் பயக்கிறது. அதே தருணத்தில் வேறு எந்த தீங்கையும் பக்கவிளைவாக ஏற்படுத்துவது இல்லை.
 
உடலில் பல பாக்டீரியாக்களால் அதாவது சூப்பர் பக்குகளால் பாதிப்பு ஏற்பட்டால், பல வகையான பாக்டீரியோபேஜ்களை ஒன்றிணைத்து, ஒருங்கிணைந்த சிகிச்சை (Phage Cocktail)-யாகவும் வழங்க இயலும். உடலில் நோயை உண்டாக்கும் பாக்டீரியா தொற்றுக்கள் வளரும் வேகத்தைவிட, உடலில் செலுத்தப்பட்ட இந்த பாக்டீரியோபேஜ் வைரஸ் வேகமாக வளர்ச்சியடைந்து அதனை அழிக்கும்.

இந்த பாக்டீரியோபேஜ் எந்த வகையினதான பாக்டீரியாக்களை அழிக்க பயன்படுத்தப்பட்டிருக்கிறது?
 
Acinetobacter Baumannii என்ற சூப்பர் பக் கிருமிகளால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டபோது, அவருக்கு பாக்டீரியோபேஜ் தெரபி என்ற சிகிச்சை வழங்கப்பட்டது. சில நாட்களில் அவர் குணமடைந்தார். Cystic Fibrosis என்ற நுரையீரல் தொற்று பாதிப்பு ஏற்பட்டு, நுரையீரல் மாற்று சத்திர சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு, சிகிச்சைக்குப் பின்னர் தீவிர தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கும் இந்த பாக்டீரியோபேஜ் தெரபி வழங்கப்பட்டது. அவரும் குணமடைந்தார். மேலும் Prostatitis என்ற ஆணுறுப்பு பகுதியில் சூப்பர் பக் என்ற கிருமி தொற்று பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்டது. அவருக்கும் பாக்டீரியோ பேஜ் தெரபி மூலம் சிகிச்சை வழங்கப்பட்டு, குணமடைந்தார். 
 
தற்போதைய சூழலில் எம்மிடமுள்ள ஆன்டிபயாடிக் மருந்துகள் முழுமையான நிவாரணத்தை வழங்காத நிலையில், இந்த பாக்ரியோபேஜ் தெரபி என்ற சிகிச்சை முழுமையான நிவாரணத்தை அளிக்கிறது. இந்த பாக்டீரியோ பேஜ் தெரபி, ஒவ்வொரு நோயாளிகளுக்கும் பிரத்யேகமான சிகிச்சை (Customized Therapy) என்பதால் இதற்கான வரவேற்பு நோயாளிகளுடன் குறைவாகவே இருக்கிறது. மேலும் இது தொடர்பான சந்தேகங்கள் இருந்தால் 0091 4466738000 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். 
 
சந்திப்பு: அனுஷா

Tags: News, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top