மே 8–ந் தேதி அழகர்கோவிலிலிருந்து தங்கப்பல்லக்கில் கள்ளழகர் புறப்பாடு!

மே 8–ந் தேதி அழகர்கோவிலிலிருந்து தங்கப்பல்லக்கில் கள்ளழகர் புறப்பாடு!

அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சித்திரை திருவிழாவாகும். இந்த திருவிழா அடுத்த மாதம் (மே) 6–ந் தேதி அழகர்கோவிலில் தொடங்குகிறது. 7–ந் தேதி கோவிலிலேயே சாமி புறப்பாடு நடைபெறும். 8–ந் தேதி இரவு 7 மணிக்கு மேல் 7.45 மணிக்குள் கள்ளழகர் என்ற சுந்தரராஜபெருமாள் தங்கப்பல்லக்கில் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவில் முன்பிருந்து மதுரையை நோக்கி புறப்படுகிறார்.

அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்து அழகரை வணங்கி வழியனுப்பி வைக்கின்றனர். அதன்பின்பு மதுரை வரும் வழியில் உள்ள பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி உள்ளிட்ட பல மண்டபங்களில் சாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

9–ந் தேதி அதிகாலையில் மூன்றுமாவடி, புதூர் பகுதிகளில் பக்தர்கள் எதிர்சேவை செய்து அழகரை வரவேற்பார்கள். அன்று இரவு தல்லாகுளம் பிரசன்னவெங்கடாசலபதி கோவிலில் பெருமாள் எழுந்தருளி அருள்பாலிப்பார். பின்னர் அங்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் சூடிகொடுத்த நாச்சியார் ஆண்டாளுடைய திருமாலை சாத்துபடி செய்யப்படுகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 10–ந் தேதி காலை 6.15 மணிக்கு மேல் 7 மணிக்குள் தங்ககுதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார். அப்போது, லட்சக்கணக்கான பக்தர்கள் அழகரை தரிசனம் செய்வார்கள். பின்னர் ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீச்சுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

இதன்பின்பு அண்ணாநகர் வழியாக வண்டியூர் வீரராகபெருமாள் கோவிலுக்கு போய் இரவு அங்கு எழுந்தருளுகிறார். 11–ந் தேதி அங்கிருந்து சே‌ஷ வாகனத்தில் கள்ளழகர் புறப்படுகிறார். பின்னர், கருட வாகனத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கிறார். அன்று இரவு விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி நடைபெறுகிறது.

12–ந் தேதி அதிகாலையில் மோகனவதாரத்திலும், பிற்பகல் ராஜாங்க திருக்கோலத்திலும் கள்ளழகர் அனந்தராய பல்லக்கில் காட்சி தருகிறார். அன்று இரவு பூப்பல்லக்கு திருவிழா நடக்கிறது. 13–ந் தேதி அதிகாலை தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலில் இருந்து பிரியாவிடைபெற்று கள்ளழகர் திருமலை நோக்கி புறப்பட்டு செல்கிறார்.

அன்று இரவு மறவர் மண்டபம், அப்பன்திருப்பதி உள்ளிட்ட பல மண்டபங்களில் சுவாமி எழுந்தருளி காட்சி தருகிறார். 14–ந் தேதி காலையில் கள்ளழகர், அழகர்கோவில் சென்று இருப்பிடம் சேருகிறார். திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வி.ஆர்.வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர்கள், திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top