கலக்கலான கலகல தீபாவளி! பாத்திமா கல்லூரி மாணவிகளோடு ஒரு சாட்

கலக்கலான கலகல தீபாவளி! பாத்திமா கல்லூரி மாணவிகளோடு ஒரு சாட்

தீபாவளி வருகிறது என்றாலே அது அந்த மாதம் முழுதும் கொண்டாட்டம் தான். ஷாப்பிங், பர்சேஸ் என எப்போது பிசியாகவே இருப்பது போல இருக்கும்.கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு கேட்கவே தேவையில்லை. அந்தளவிற்கு அவர்கள் இந்த நாளை எதிர் நோக்கிக் கொண்டிருப்பார்கள். அவர்களின் எதிர்பார்ப்பு எப்படியுள்ளது, அவர்கள் இந்த தீபாவளியை எப்படி கொண்டாடவிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள பாத்திமா கல்லூரி மாணவிகளை சந்தித்து கலக்கலான உரையாடலை நடத்தினோம்.

1. தீபாவளி கொண்டாட்டம் உங்களின் பார்வையில்...

கார்த்திகா : பொதுவாக, தீபாவளி என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் நினைவுக்கு வருவது பட்டாசு தான். பட்டாசு இல்லாத தீபாவளியை யாரும் நினைத்தும் பார்க்க முடியாது. அந்தளவிற்கு பட்டாசு என்பது தீபாவளியோடு ஒன்றிவிட்டது. நாம் ஆயிரக்கணக்கில் பட்டாசுக்கு செலவளித்தாலும் அது வெடித்து வீணாகத் தான் போகப்போகிறது. கொஞ்சமாக பட்டாசுகளை வாங்கிக் கொண்டு, இல்லாதவர்களுக்கும், ஏழைகளுக்கும் உதவி செய்யலாமே. அப்படி நாம் செய்யும் பொழுது அவர்களின் முகத்தில் நாம் காணும் மகிழ்வே மிகச்சிறப்பான தீபாவளி.

கௌசிகா தேவி: தீபாவளி அன்று மக்கள் தங்களின் மகிழ்வினை மற்றவர்களுடன் இனிப்புகளை பரிமாறி கொண்டாடுகிறார்கள். ஆனால், அவர்ககளின் பகிருதல் அவர்களேடே முடிந்துவிடுகிறது. கார்த்த்pகா கூறியது போல, யார் துணையும் இன்றி, கஷ்டப்பட்டு தவிப்பவர்களுக்கும், ஏழை எளியவர்களுடனும் பலகாரத்தை பகிர்நது, அவர்களுக்கு நம்மால் இயன்றால் புத்தாடை எடுத்துக்கொடுத்து கொண்டாடலாம்.

விஷ்ணுப் பிரியா: முன்பெல்லாம் தீபாவளி என்றால் அதில் ஒரு பாரம்பரியம் இருக்கும். ஆனால், இன்று பட்டாசு மற்றும் புத்தாடை மட்டுமே தீபாவளியாகிப் போனது.

சிவசங்கரி: விஷ்ணுப் பிரியா கூறியது மிகவும் சரியாது. இன்று அளவுக்கு தொழிற்நுட்பங்கள் எல்லாம் இல்லாத காலகட்டங்களில் எல்லாம் தீபாவளி கொண்டாட அவ்வளவு ஆசையாக இருந்தது. இன்று வாழ்க்கையே ரெடிமேட் போல மாறிவிட்டது. கடையில் வாங்கிய பலகாரங்கள், டிவி நிகழ்ச்சிகள், குடும்பத்துடன் மட்டும் உணவு என வட்டம் மிகவும் குறுகிவிட்டது. இன்று வெரும் பட்டாசு, புத்தாடைகள் என்றே மாறிவிட்டது. அன்று ஒருநாளாவது எந்த ஒரு டெக்னாலஜியும் இன்று குடும்பத்தோடு மகிழ்ச்சியை பகிரும் ஒரு திருநாளாக இருக்க வேண்டும்.

2. தீபாவளிக்கு பட்டாசு என்பது முக்கியமானதா?

சிவசங்கரி: பட்டாசு என்பது காற்று மாசு எற்படுத்துவதோடு, ஒலி மாசையும் ஏற்படுத்துகிறது. இன்று சீனப் பட்டாசுகளின் விற்பனையும் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இதனை நாம் கட்டுப்படுத்த வேண்டும். மேலும், நம்மை சுற்றி பல முதியவர்களுக்கு உடல் நலம் குன்றியவர்களும் இருப்பார்கள். அவாகளுக்கு பட்டாசு என்பது மிகவும் இடையூறான ஒன்றாக இருக்கும். அத்தோடு பட்டாசுகளில் இருக்கும் வேதியியல் பொருட்களால் நம்முடைய சுற்றுப்புறம் அதிகளவில் மாசு அடைகிறது. இதனை எல்லாம் அறிந்தப்பின் நான் வெடி வெடிப்பதை முற்றிலுமாக நிறுத்திக்கொண்டேன்.

விஷ்ணுப் பிரியா: தீபாவளிக்கு பின்னால் ஒவ்வொரு கதைகள் இருந்து வருகிறது. ராமன் ராவணனைக் கொன்றது, ராமன், சீதை, இலட்சுமணன் மீண்டும் அயோதிக்கு வந்ததை விளக்கேற்றி கொண்டாடினர். என பலரும் பல கதைகள் கூறுவார்கள். ஆனால் வடஇந்தியாவில் தீபாவளி அன்று விளக்குகளை மட்டுமே ஏற்றி தீபாவளியை கொண்டாடுவார்கள். ஆனால் நம்முடைய தென்னிந்தியாவில் தான் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடுகிறார்கள். நாமும் அவர்களைப் போல் தீபத்திற்கு அதிகப்படியான முக்கியத்துவம் அளித்து, பட்டாசுகளை குறைத்துக்கொள்ள வேண்டும்.

3. தீபாவளி அன்று பட்டாசு, இனிப்பு வகையோடு அதிகப்படியான முக்கியத்துவம் பெறுவது ஆடைகள், தீபாவளிக்கு புத்தாடை எடுக்கும் அனுபவம்..
சிவசங்கரி: கல்லூரியில் படிக்கும்போது புத்தாடை எடுப்பதைவிட பள்ளி படிக்கும் போது எடுப்பதில் தான் சுவாரசியம். சீருடையே அணிந்திடும் காலத்தில், தீபாவளிக்கு மறுநாள் தீபாவளிக்கு எடுத்த புத்தாடையில் செல்வது தான் கெத்து. வகுப்புக்கு சென்று, 'உன் ட்ரெஸ் என்ன விலை, என் ட்ரெஸ் இந்த விலை இந்த கடையில் தான் வாங்கினேன்' என பெருமைபட்டுக்கொள்வோம்.

கௌசிகா தேவி: எங்களுடைய வீட்டில் பெண் பிள்ளை அடக்கமாக வீட்டில் இரு! உனக்கு தேவையான ஆடைகளை நாங்களே வாங்கி வருகிறோம் என அவர்கள் ஷாப்பிங் போய்விடுவார்கள்.

சிவசங்கரி: பசங்களைப் பொறுத்தவரை பெற்றோர்கள் அவர்களின் இஷ்டத்திற்கு விட்டுவிடுவார்கள். அத்தோடு அவர்கள் என்ன ஆடை எடுத்தாலும் அதைப்பற்றி கேட்பதில்லை. ஆனால் எங்களுக்கு ஆடை எடுக்கும் பொழுது குடும்பமே கூட வருவார்கள். அத்தோடு எடுக்கும் துணியும் 6 வருடம் உழைக்க வேண்டுமென்று தான் பெற்றோர்கள் நினைக்கிறார்கள்.
விஷ்ணுப் பிரியா: எப்போது நாங்கள் போன முதல் கடையிலேயே துணிகள் எடுக்கமாட்டோம். இப்படியே ஒரு நாள் முழுவதும் கடத்திவிடுவோம்.

சிவசங்கரி: அதேப்போல், தீபாவளிக்கு இவ்வளவுக்கு உனக்கு துணி எடுத்துக்கொள் என பஜ்ஜெட் போட்டுவிட்டு, அந்த பஜ்ஜெட்டிற்குள் 5 துணி எடுத்துக்கொடுத்துவிடுகிறார்கள். இன்று எல்லாம் ரெடிமேட் துணிகளாகிவிட்டது. முன்பெல்லாம் கடைகளுக்கு சென்று, நமக்கு பிடித்தமான துணியை எடுத்து, அதை நமக்கு பிடித்த டிசைனில் தையல் செய்பவர்களிடம் செய்ய சொல்லி கொடுத்து அது வரும் வரை காத்திருப்பது ஒரு சுகம்.

4. இந்த தீபாவளியை எப்படி கொண்டாட திட்டமிட்டுள்ளீர்கள்?
சிவசங்கரி:
சிறு வயதுகளில் தீபாவளிக்கு பல விஷயங்களுக்கு அடம்பிடித்ததுண்டு. ஆனால் தற்போது நாங்கள் வளர்ந்துவிட்டோம். குடும்ப சுமை எந்தளவு உள்ளது என்பதை அறிகிறோம். எனவே, அதிப்படியான செலவை வைக்காமல் எளிமையான தீபாவளியை கொண்டாடவுள்ளேன்.

விஷ்ணுப் பிரியா: எனக்கு வெடி என்றால் ரொம்ப பிடிக்கும். அதிகமாக அடம் பிடிப்பேன். ஆனால், இப்போது வெடித்து புகையாய் போவதற்கு ஏன் செலவளிக்க வேண்டுமென்று தான் தோனுகிறது. எனவே, சுமார் 4 ஆண்டு பட்டாசு இல்லா தீபாவளியையே கொண்டாடி வருகிறேன். இவ்வாண்டும் அப்படியே.

கௌசிகா தேவி: என்னுடைய பெற்றோர் எனக்கு மட்டுமே செலவளிக்கிறார்கள். நானும் எனக்கு கிடைத்தால் போதும் என இது வரை இருந்து வந்தேன். இந்த ஆண்டு எனக்கு புத்தாடை எடுக்காமல் என்  பெற்றோரை எடுத்துக்கொள்ள வேண்டுமென முடிவெடித்துள்ளேன். அத்தோடு இவ்வாண்டு டிவியோடு நேரத்தை குறைத்து குடும்பத்தோடு அதிக நேரத்தை செலவிடவுள்ளேன்.

Tags: News, Madurai News, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top