அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் குண்டுகட்டாக கைது!
Posted on 16/01/2017

ஜல்லிக்கட்டு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க மத்திய மாநில அரசுகள் ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து நேற்று காலை அலங்காநல்லூரில் ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் விடிய விடிய நடந்தது. கடுங்குளிரிலும் இளைஞர்கள் பட்டாளம் ஆர்ப்பாட்டத்தை கைவிடவில்லை. அங்குள்ள பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு உணவு பரிமாறியும், சுக்குகாப்பி கொடுத்தும் ஆதரவு கொடுத்தனர்.
இந்நிலையில் விடிய விடிய நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் இன்று அதிகாலை போலீசாரின் நடவடிக்கை காரணமாக முடிவுக்கு வந்தது. அலங்காநல்லூரில் உள்ள வாடிவாசல் முன்பு கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து செல்ல செய்வதற்காக போலீசார் பல்வேறு முயற்சிகள் செய்தனர். எனினும் அதனைப் பொருட்படுத்தாமல் தங்கள் போராட்டத்தில் உறுதியாக இருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை இன்று அதிகாலை 6:15 மணி அளவில் வலுகட்டாயமாக கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் பெண்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கைதாக மறுத்த ஒருசில இளைஞர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று போலீஸ் வேனில் ஏற்றினர். 20 மணி நேரத்திற்கும் மேல் நடந்த இந்த போராட்டம் தற்போது கைது நடவடிக்கை காரணமாக முடிவுக்கு வந்துள்ளது. இருப்பினும் அந்த பகுதி பதட்டம் நிறைந்ததாகவே காணப்படுகிறது.
Tags: News, Madurai News, Art and Culture