ஷேன் வாட்சனை பயிற்சியாளராக நியமித்த ஐபிஎல் அணி..!

ஷேன் வாட்சனை பயிற்சியாளராக நியமித்த ஐபிஎல் அணி..!

டெல்லி கேபிடள்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக ஷேன் வாட்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல்லில் ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத டெல்லி கேபிடள்ஸ் அணி, கடந்த சில சீசன்களாக நன்றாக ஆடிவருகிறது. ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பிறகு, அவரது வழிகாட்டுதலில் சிறப்பாக செயல்படுகிறது. 
 
ஐபிஎல் 15வது சீசனுக்கு ரிக்கி பாண்டிங்கின் வழிகாட்டுதலில் ரிஷப் பண்ட்டின் கேப்டன்சியில் வலுவான அணியை கட்டமைத்துள்ளது டெல்லி கேபிடள்ஸ் அணி நிர்வாகம். 
 
ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக ரிஷப் பண்ட், அக்ஸர் படேல், பிரித்வி ஷா மற்றும் அன்ரிக் நோர்க்யா ஆகிய 4 வீரர்களை தக்கவைத்தது. ஏலத்தில் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், ரோவ்மன் பவல், டிம் சேஃபெர்ட், லுங்கி இங்கிடி ஆகிய வெளிநாட்டு வீரர்களையும், ஷர்துல் தாகூர், சர்ஃபராஸ் கான், குல்தீப் யாதவ், கமலேஷ் நாகர்கோடி, சேத்தன் சக்காரியா, மந்தீப் சிங், லலித் யாதவ், யஷ் துல், கலீல் அகமது ஆகிய இந்திய வீரர்களையும் ஏலத்தில் எடுத்தது.
 
சிறந்த வீரர்களை எடுத்து அணியை வலுவாக கட்டமைத்தது மட்டுமல்லாது, பயிற்சியாளர் குழுவையும் வலுப்படுத்துகிறது டெல்லி அணி. ரிக்கி பாண்டிங் தலைமை பயிற்சியாளர், உதவி பயிற்சியாளர்களாக அஜித் அகார்கர், பிரவீன் ஆம்ரே, பவுலிங் பயிற்சியாளராக ஜேம்ஸ் ஹோப்ஸ் ஆகியோர் உள்ள நிலையில், ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவானும், ஐபிஎல்லில் நீண்ட நெடிய அனுபவம் கொண்ட முன்னாள் மேட்ச் வின்னருமான ஷேன் வாட்சனும் உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் டைட்டிலை வென்ற ஷேன் வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அங்கம் வகித்தவர் ஷேன் வாட்சன். அப்போதைய இளம் வீரரான ஷேன் வாட்சன், ராஜஸ்தான் அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். 2008ம் ஆண்டிலிருந்து 2015ம் ஆண்டுவரை ராஜஸ்தான் அணியில் ஆடிய ஷேன் வாட்சன், அதன்பின்னர் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகளுக்காகவும் ஆடினார். சிஎஸ்கே அணி 2018ல் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தார். சிஎஸ்கே அணியின் மேட்ச் வின்னராக இருந்த ஷேன் வாட்சன், 2020ம் ஆண்டு ஐபிஎல்லுடன் ஓய்வுபெற்றார்.
 
145 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 3874 ரன்களை குவித்துள்ள ஷேன் வாட்சன், 92 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அவரது ஐபிஎல் அனுபவம் டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு கண்டிப்பாக பெரியளவில் உதவும்.

Tags: News, Hero, Sports

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top