நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே வெற்றி!

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே வெற்றி!

மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைத்த சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். அவருக்கு மொத்தம் 164 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர்.

மகாராஷ்டிராவில் பாஜகவுடன் கூட்டணி வைத்து புதிய அரசை அமைத்த சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்டார்.
 
144 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தாலே போதும் என்றிருந்த நிலையில், அவருக்கு ஆதரவாக 164 எம்எல்ஏக்கள் ஆதரவளித்தனர்.  இதன்மூலம் ஏக்நாத் ஷிண்டே அணியில் 40 சிவசேனா எம்எல்ஏக்கள் அவருக்கு  ஆதரவு அளித்துள்ளது உறுதியானது.
 
மகாராஷ்டிரா அரசில் அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அதிருப்தி அடைந்ததை தொடர்ந்து, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் போர்க்கொடி உயர்த்தினார்.
 
இதையடுத்து, அரங்கேறிய பல்வேறு அரசியல் திருப்பங்களை அடுத்து, உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார். பின்னர், பாஜகவுடன் சேர்ந்து முதலமைச்சராக பதவியேற்றார் ஏக்நாத் ஷிண்டே.
 
துணை முதலமைச்சராக மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னவீஸ் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், ஷிண்டே அரசு மீதான வாக்கெடுப்பு சட்டசபையில் இன்று நடைபெற்றது.
 
முன்னதாக, சட்டசபையில் நேற்று நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் நடந்த தேர்தலில் சபாநாயகரான பாஜகவின் ராகுல் நர்வேக்கர் தேர்வு செய்யப்பட்டார். பாஜகவின் ராகுல் நர்வேக்கர் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு வந்தது குறிப்பிடத்தக்கது.
 
சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்ட நர்வேக்கர் நேற்றிரவு சிவசேனாவின் சட்டமன்றக் கட்சித் தலைவராக முதலமைச்சர் ஷிண்டேவை அறிவித்தார். மேலும் பரத் கோகவாலேவை சிவசேனாவின் தலைமைக் கொறடாவாக நியமித்ததையும் நர்வேக்கர் அங்கீகரித்தார்.
 
மகாராஷ்டிரா சட்டசபையில் மொத்த பலம் 288 ஆகும். ஒரு எம்எல்ஏ காலமாகிவிட்டதால், தற்போதைய பலம் 287 ஆக உள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க 144 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. சபாநாயகர் தேர்தலில் பெரும்பான்மையை காட்டிலும் 20 வாக்குகள் அதிகம் பெற்று பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top