ஆரோக்கியமாக வாழ ‘இசையே மருந்து!’

ஆரோக்கியமாக வாழ ‘இசையே மருந்து!’

பல வடிவங்களில், பல மொழிகளில் நம்மை ஈர்க்கும் ஒரு விஷயமாக மாறியிருக்கிறது இசை, இசைஞானி, இசைப்புயல் இவர்களின் இசையைக் கேட்டால் நமக்கு ஒரு புதிய அனுபவம் கிடைப்பதுபோல, இன்றைய நவீன யுகத்தில், புதிய பரிமாணத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் மருத்துவ துறையில் நோய்கள் பல தீர்க்கும் ஒரு சிகிச்சை முறையாக இசை விளங்குகிறது.

மியூசிக் தெரபி எனப்படும் அந்தச் சிகிச்சையில், இசையே மருந்து. கேட்கும்போதே நம்மை ஈர்க்கும் இந்தச் சிகிச்சையைப் பற்றி பல்வேறு புதிய தகவல்களை அறிந்துகொள்ள மதுரை பந்தடி 9ம் தெருவில் இருக்கும் சர்க்கரை நோய் மற்றும் பொதுநல மருத்துவர் திரு. கார்த்திக் அவர்களை சந்தித்தோம்.

‘இன்று மக்களுக்கு உடல் ரீதியான ஆரோக்கிய குறைபாடுகள் அதிகளவில் ஏற்படுகிறது. இந்நிலைக்கு ஒரு முக்கியக் காரணம் மன நிம்மதியின்மை என்றும் கூறலாம். மன ரீதியான பிரச்சனைகளே நமக்கு உடல்ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இன்றைய மருத்துவ உலகில், நோயாளிகளுக்குத் தரப்படும் மருந்து மாத்திரைகளுக்கு மாற்றாக மெல்லிய, நல்ல இசையை வழங்கி சிகிச்சை அளிக்கிறது மியூசிக் தெரபி.

இது அமெரிக்காவில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கிறது. தற்போது இந்தியாவிலும் ஒரு சில மருத்துவமனைகளில் அளிக்கப்பட்டு வருகிறது. உளவியல் அடிப்படையில் ஒருவரை அவரது நோயின் ஆபத்திலிருந்து மீட்டெடுப்பதே இந்தச் சிகிச்சையின் சிறப்பு அம்சமாகும். கடந்த 2004ம் ஆண்டு முதல் இன்றுவரை சுமார் 3000 நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துள்ளேன்.

ஓ.சி.டி (Obsessive Compulsive Disorder (OCD)) எனப்படும் மன சுழற்சி நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு அவர்களது எண்ணங்களில் இருந்து விடுபடவும், அவர்களது எண்ண ஓட்டத்தைத் திசை திருப்பவும் மியூசிக் தெரபி அளிக்கப்படுகிறது.

தூக்கமின்மை மற்றும் மனச்சோர்வால் ஏற்படும் டிமென்ஷியா போன்ற பாதிப்பு உள்ளவர்களுக்கும் மியூசிக் தெரபி தரப்படுகிறது. பொதுவாக எந்த ஒரு நோயாக இருந்தாலும் அதற்கு எடுத்துக் கொள்ளும் மருத்துகளோடு இந்த மியூசிக் தெரபியை எடுத்துக் கொண்டால் விரைவில் குணமடைய முடியும்.

"மியூசிக் தெரபி’யில் ஒரு சில ராகங்களை கேட்கும் போது மனதுக்கு நிம்மதி, அமைதி தோன்றுகிறது. இசையால் மனம் சாந்தமடைகிறது. ‘ஆனந்த பைரவி’ கேட்டால், ரத்த அழுத்தம் குறையும். ‘அமிர்தவர்ஷினி’ கேட்பது, சர்க்கரை நோயைக் குறைக்கும். ஹிந்தோலம், கம்பீர நாட்டை கேட்டால், தலைவலி தீரும். ஸ்ரீரஞ்சனி, ஆபோகி, சுத்த சாவேலி உள்ளிட்ட ராகங்களை கேட்டால், மன அழுத்தம் நீங்கும். இசையில் ஒவ் வொரு ராகத்துக்கும், மருத்துவ குணம் உள்ளது. மன வியாதியை குறைக்கும், ஞாபக சக்தியை அதிகரிக்கும் ராகங்களும் இருக்கின்றன.

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு மியூசிக் தெரபி கொடுக்கும்போது, அவர்கள் உடலில் இருக்கும் உயர் ரத்த அழுத்தம் சீராக்கப்பட்டு, பதற்றம் தவிர்க்கப்படும். அது குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வழிவகுக்கும். அத்தோடு தற்போது ஒரு ஆய்வில் மியூசிக் தெரபியின் உதவியோடு பிறந்த குழந்தைகள் மற்ற குழந்தைகளைவிட சற்று சுறுசுறுப்பாகவும் அனைத்து இசையின் மீது ஆர்வம் உள்ளவர்களாகவும் திகழ்வதாக கூறப்பட்டுள்ளது. மேலும், தூக்கமின்மையால் பாதிக்கப்படுபவர்கள், நல்ல இசையைக் கேட்கும்போது ஆழ்ந்த உறக்கம் கொள்வர். இப்படிப்பட்ட சூழலில், மெலடி எனப்படும் மெல்லிய இசையே சிறந்தது. என கூறினார்.

Tags: News, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top