மதுரையில் மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கானப் பூங்கா!

மதுரையில் மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கானப் பூங்கா!

முதன்முறையாக தமிழகத்தில் மதுரை மாநகராட்சியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்காக மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானம் அருகிலுள்ள தாமரைத் தொட்டி என்னுமிடத்தில், பொது நிதி, தனியார் நிதியுதவி பெற்று ரூ.40 லட்சத்தில் நவீன பூங்கா ஒன்று  அமைக்கப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறன் குழந்தைகளும், சராசரி குழந்தைகளைப் போல ஊஞ்சல் விளையாட ஆசைப்படுவர். ஆனால், கீழே விழுந்து விடுவோம் என்ற அச்சத்தில் விளையாட மாட்டார்கள். அவர்கள் ‘சீட்’ பெல்ட் அணிந்து தனியாக ஆடுவதற்கும், நடக்க முடியாத குழந்தைகள் வீல் சேருடன் அமர்ந்தும், பெற்றோருடன் அமர்ந்து ஆடுவதற்கும் பிரத்தியேகமாக ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சறுக்கு விளையாட்டில் சாதாரண குழந்தைகள் வேகமாக சறுக்கி கீழே விழுந்து விடுவர். அப்படி விளையாடுவதற்கு ஆட்டிசம், மன வளர்ச்சி குழந்தைகள் அச்சப்படுவர். அதனால், மெதுவாக விழும் வகையில் ரோலர் ப்ளேடு சறுக்கு விளையாட்டு உபகரணம் உள்ளது. மற்றொருபுறம் வீல்சேரில் சென்று விளையாடும் பேஸ்கட் பால் மைதானமும் தயாராகிறது. மாற்றுத்திறன் குழந்தைகள் நடப்பதற்கு ஏற்ப பிரத்யேகமான டைல்ஸ்களை கொண்டு பூங்காவின் தரைத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

மின்விசிறியுடன் ஓய்வு அறை கள், சாப்பிடுவதற்கு தனி அறைகள், குழந்தைகளும், அவர்கள் பெற்றோரும் கலந்துரையாடும் அரங்கும் உள்ளது. இப்படி இங்குள்ள ஒவ்வொரு விளையாட்டு உபகரணமும், பூங்காவின் அமைப்பும் மாற்றுத்திறன் குழந்தைகளை மனதில் கொண்டு பாதுகாப்பு வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது இந்த பூங்காவின் சிறப்பு அம்சம் ஆகும். இங்கு, 10 வகை விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பூங்காவைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்க உள்ள மதுரை குரூப் லிவ்விங் பவுண்டேசன் அமைப்பின் தலைவர் ஏ.சந்திரசேகரன் கூறியதாவது:

பூங்காவில் 50 சதவீத இடத்தில் விளையாட்டு உபகரணங்களும், 50 சதவீத இடத்தில் ஐம்புலன் ஊக்குவிப்புத் தோட்டமும் (sensory garden) உருவாக்கப்படுகிறது. பூக்கள், செடி, கொடிகளைத் தொடுவது, காண்பது, சுவைப்பது, நுகர்வது அடிப்படையில் குழந்தைகள் குதூகலமடையவும், புத்துணர்ச்சி தரும் வகையிலும் இந்த தோட்டம் உருவாக்கப்படுகிறது. சிறிய குன்றில் இருந்து நீர் வழிந்தோடும் சத்தத்தைக் கேட்கவும், மீன் தொட்டிகளைப் பார்த்து மகிழும் வகையிலும், தொட்டால் சத்தம் கேட்கும் வகையிலான இசைக்கருவிகள் வைக்கவும் திட்டமிடப்பட் டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள இதுபோன்ற பூங்காக்களை வீடியோவில் பார்த்து இந்த பூங்கா அமைக்கப்படுகிறது’ என்றார்.

Tags: News, Madurai News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top