கழிவுகளில் கவின்மிகு கலைப்பொருட்கள்!

கழிவுகளில் கவின்மிகு கலைப்பொருட்கள்!

நம்முடைய வாழ்வில் அன்றாடம் நாம் பயன்படுத்தி வந்த பொருள் ஒரு கட்டத்தில் பயனற்றதாக மாறிவிடுகிறது. இப்படி சேர்க்கப்படும் கழிவுகளை மக்கள் குப்பைகளிலும் எடைக்கடைகளிலும் போட்டுவிடுகின்றனர். நம்முடைய வீட்டைப் போலத்தான் மாநகராட்சிக்காக ஓடும் வாகனங்களிலும் கழிவுகள் பிரித்தெடுக்கப்பட்டு சேர்க்கப்படுகிறது. ஆனால் அவை குப்பைகளாக அல்ல.. கவின்மிகு கலைப்பொருட்களாக!

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் முன்னோடியாக ஒரு அசத்தலான செயலை நிகழ்த்தியுள்ளது மதுரை மாநகராட்சி. இந்த உலகில் எதுவுமே தேவையில்லாத பொருட்கள் இல்லை என்பதை நிரூபித்துள்ளனர். அது என்ன அவர்களையே கேட்போமென மதுரை செல்லூர் பகுதியில் இயங்கிவரும் மதுரை மாநகராட்சியின் வாகன பணிமனைக்கு விரைந்து, வாகன பராமரிப்பு உதவிப் பொறியாளர் திரு. அமர்தீப் அவர்களை சந்தித்தோம்.

தமிழகத்தில் மொத்தம் 11 மாநகராட்சிகள் உள்ளது. அதில் மதுரை மாநகராட்சியைப் பொருத்தவரை இங்கு சுமார் 300 வாகனங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு பராமரிப்பின் போதும் ஒரு சில பாகங்கள் கழிக்கப்பட்டு அந்த இரும்பு கழிவுகளை சேகரித்து அவற்றை ஏலம் விடுவது வழக்கம். ஆனால் இம்முறை அப்படி செய்யவில்லை.

கடந்த ஆண்டு எங்களின் பணிமனைக்கு சோதனைக்கான மதுரை மாவட்ட ஆணையர் திரு. சந்தீப் நந்தூரி அவர்கள் வந்திருந்தார். அப்போது நாங்கள் வைத்திருந்த இரும்பு கழிவுகளைப் பற்றி கேட்டறிந்தார். அதன்பின் இதை ஏலம் விடவேண்டும். நான் ஒரு யோசனை சொல்கிறேன் என சென்றுவிட்டார். அதன்பின் கடந்த மாதம் என்னை தம்முடைய அலுவலகத்திற்கு அழைத்து விஜயவாடாவிலிருந்து வந்த திரு. ஸ்ரீநிவாசன் அவர்களை அறிமுகப்படுத்தி, அவரை பணிமணைக்கு அழைத்துச் செல்லும்படி கேட்டுக்கொண்டார். திரு. ஸ்ரீநிவாசன் அவர்கள் கழிவுகளை கலைச் சிற்பம் செய்பவர். எனினும் இரும்பு கழிவுகளில் எப்படி செய்யப் போகிறார்கள் என்பது புரியாமலே இருந்தது.

அதன்பின் ஒருவாரத்தில் திரு.ஸ்ரீநிவாசன் அவர்களும் அவர் குழுவைச் சேர்ந்த 15 பேரும் வந்திருந்தனர். அவர்களுக்கு இரும்பு கழிவுகளை ரகவாரியாக பிரித்தெடுத்து அவர்கள் தேவையளவிற்கு பொருட்களை கொடுத்தோம். மேலும், இவர்கள் கழிவுப் பொருட்களை மட்டுமே கொண்டு கலைச் சிற்பங்கள் எழுப்புவதால் இருக்கும் பொருட்களைத் தவிர கூடுதலாக ஏதும் அவர்கள் கேட்கவில்லை. அத்தோடு அவர்களும் மதுரை சார்ந்த சில விஷயங்களையும் இந்த சிற்பகங்களில் ஏற்படுத்தவும் திட்டமிட்டனர். அதில் சிறப்பம்சமாக மதுரைக்கே பெருமையான ஜல்லிக்கட்டைக் கொண்டு சிற்பம் ஏற்படுத்த மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

அதன்படி மிகவும் பிரமாதமான முறையில் நேர்த்தியாக அந்த சிற்பங்கள் செய்யப்பட்ட உருவங்களின் உண்மைத்தன்மை மாறாமல் செய்து முடித்தனர். அத்தோடு கூட குதிரை, நாய், மான், ஆந்தை, மரத்தில் மரங்கொத்தி பறவை, தாயும் சேயும், அன்னப்பறவை, நீளமான பழைய கால புல்லட் பைக், 12 அடி உயரத்தில் காந்தியின் சில என அற்புதமான 15 சிற்பங்களை ஏற்படுத்தினர். தமிழகத்தை பொருத்தவரை மதுரைதான் இரும்பு கழிவுகளில் சிற்பம் ஏற்படுத்தி மற்ற மாவட்டங்களின் முன்னோடியாக திகழ்கிறது.

இனி வரவிருக்கும் நாட்களில் இந்த சிற்பங்களை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அதிகம் நேரத்தை செலவிடும் ஈக்கோ பார்க்கில் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்காக பணிகள் நடைபெற்று வருகிறது. இது நிச்சயம் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவராலும் இரசிக்கப்படும் ஒன்றாகவே அமைத்திடும். அத்தோடு இது, எந்த பொருட்களும் வீணானது இல்லை என்கிற ஒரு பாடத்தையும் நம்மிடம் எடுத்துரைக்கும். மேலும் இந்த சிற்பங்கள் எதற்குமே வண்ணம் ஏற்றப்படாமல் என்ன பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என மக்கள் அறிந்துக் கொள்ளும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. இது மெக்கானிக்கல் படிக்கும் மாணவர்களுக்கு இன்னும் அதிகமான ஆர்வத்தை ஏற்படுத்தும்.' என கூறினார்.

Tags: News, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top