மதுரைதான் தமிழ் சினிமாவின் முன்னோடி!
Posted on 01/04/2017

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பான சினிமா தற்போது பல்வேறு பரிணாமங்களை எட்டியிருக்கிறது. சினிமா என்ற சிறந்த பொழுதுபோக்கு சாதனம் மக்களின் வாழ்வியலில் முக்கியபங்கு வகித்தது. இந்த சினிமா அறிமுகமான போது, தமிழ்நாட்டில் அதன் துவக்கம் மதுரையில்தான் ஆரம்பித்தது என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? ஆனால் இது மறுக்க முடியாத உண்மை!
சினிமா எடுப்பதற்கென்றே முதன்முதலில் ஸ்டூடியோ உருவானது மதுரையில் தான். மதுரை திருநகர் பகுதியில்தான் சித்ரகலா ஸ்டூடியோ முதன்முதலாகத் துவங்கப்பட்டது. அப்போது, நாடகங்கள் பிரபலமாக இருந்த காலம். எனவே பல நாடகங்கள் திரைப்படமாக உருமாறின.
சினிமாவிற்கென்றும் தனிக்கதைகளை உருவாக்கியும் தயாரித்திருக்கிறார்கள். அல்லி அர்ச்சுனா, தாய்நாடு, பரமகுரு போன்ற படங்கள் இங்கு தயாரிக்கப்பட்டு தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் நன்றாக ஓடி வசூலை வாரிக்குவித்தன. அதேபோல் மதுரையில் சிங்களப் படங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. சித்ரகலா ஸ்டூடியோ மதுரையில் உருவான பின்பு தான் காரைக்குடியிலும், சேலம், திருச்சி, கோவையிலும் ஸ்டூடியோக்கள் தொடாந்து உருவாகின. சென்னையில் திரைப்படத்தொழில் துவங்கப்பட்டதெல்லாம் இதற்குப்பிறகுதான். மதுரையின் முதல் திரையரங்கம் இம்பீரியல் தியேட்டர்தான். அப்போது சினிமாவிற்கு மின்சார வசதி பற்றாக்குறை ஏற்பட்டிருந்தது. 1890ஆம் ஆண்டில் ஜெனரேட்டரை வைத்து படத்தை ஓட்டினார்கள். நாடகங்களும் அக்காலத்தில் வெற்றிகரமாகப் போய்க்கொண்டிருந்தது. அதனால் மதுரை மேலமாசி வீதியில் உள்ள சந்திரா தியேட்டரில் பகலில் ஒரு காட்சி சினிமாவும், மாலையில் அதே அரங்கில் நாடகங்களும் நடைபெற்றன.
நாடக உலகின் தந்தை எனப் போற்றப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்கள், பாஸ்கரதாஸ். டி.கே. சண்முகம் சகோதரர்கள், நவாப் ராஜமாணிக்கம், கே.பி. ஜானகி அம்மாள், கலைஞர் கருணாநிதி ஆகியோரின் நாடகங்களும் சந்திரா தியேட்டரில் நடைபெற்றுள்ளன. இப்படி தமிழ் சினிமாவிற்கு முதன்முதலில் சிவப்புக்கம்பளம் விரித்தது மதுரை மாநகரம்தான்.
Tags: News, Hero, Madurai News, Art and Culture