மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மாசி வீதிகளில் குவிந்துள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் முக்கிய விழாவான சித்திரை திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வைபவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திருக்கல்யாணத்தை தொடர்ந்து நேற்று இரவு மீனாட்சி, சுந்தரேசுவரர் பூப்பல்லக்கில் வீதி உலா வந்தனர்.

தேரோட்டத்தை முன்னிட்டு இன்று அதிகாலையில் கீழமாசி வீதிகளில் உள்ள தேரடிக்கு மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரரும் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அழைத்து வரப்பட்டனர். அங்கு அம்மனுக்கும் சுவாமிக்கும் சிறப்பு ஆராதனைகள் நடந்தன.

அலங்கரிக்கப்பட்ட தேரில் மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் எழுந்தருளினார்கள். பெரிய தேரில் சுந்தரேஸ்வரரும், பிரியாவிடையும் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்தனர். சிறிய தேரில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மீனாட்சி அம்மன் எழுந்தருளினார். சிறிய தேரில் விநாயகரும் சுப்பிரமணியரும் வந்தனர்.

மாசி வீதிகளில் ஆடி அசைந்து வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேர்களை தரிசித்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், வடம் பிடித்து இழுத்து வணங்கினர். இத்தேர் திருவிழாவினைக் காண மதுரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் தென் மாவட்ட காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மே 10ம் தேதி நடக்கிறது. இதற்காக இன்று மாலை 5 மணிக்கு கள்ளழகர் திருக்கோலத்தில் தங்கப் பல்லக்கில் புறப்படுகிறார். ராஜகோபுரத்தில் காவல் தெய்வமாக வீற்றிருக்கும் 18ம் படி கருப்பண சுவாமியிடம் அனுமதி பெற்று இரவு 7 மணிக்கு மேள, தாளம் முழங்க புறப்படுகிறார்.

அழகர்கோவிலில் இருந்து மதுரை வரும் வழியில் பக்தர்களின் மண்டகபடிகளில் எழுந்தருளி, நாளை காலை 6 மணிக்கு மூன்றுமாவடி வரும் கள்ளழகருக்கு பக்தர்கள் எதிர்சேவை நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து புதூரிலும், மாலையில் அவுட்போஸ்டிலும் எதிர்சேவை நடக்கிறது.

இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலில் சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கிறது. 10ம் தேதி அதிகாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை ஏற்றுக் கொண்டு தங்கக் குதிரை வாகனத்தில் புறப்படும் கள்ளழகர், காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

Tags: News, Madurai News, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top